இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இரு நாள்கள் விவாதம் நடைபெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கரைப்பற்றி எல்லாம் பல்வேறு கட்சியினரும் பாராட்டியும், புகழ்ந்தும் பேசினர்.
இதற்கிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதற்கெடுத்தாலும் ‘‘அம்பேத்கர், அம்பேத்கர்” என்று பேசுவது எல்லாம் ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது. அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதைவிட, ‘பகவான்’ பெயரை உச்சரித்தால், ‘சொர்க்கமாவது’ கிடைக்கும் என்று எள்ளலாகப் பேசினார்.
‘ராம்’ ‘ராம்’ என்று ஆயிரம் முறை, இலட்சம் முறை எழுதச் சொல்கிறார்களே – பாராயணம் செய்யச் சொல்லுகிறார்களே, அதையும் இந்த வகை கேலி – கிண்டலாக எடுத்துக் கொள்வார்களா?
ராம் – ராம் என்று சொல்லுவதற்குப் பதில், எழுதுவதற்குப் பதில் அந்த நேரத்தில் பெரியார், அம்பேத்கர் நூல்களைப் படியுங்கள் புத்தி வரும் என்று சொன்னால் ஒத்துக் கொள்வார்களா?
பி.ஜே.பி.யைத் தவிர, அனைத்துத் தரப்பினரும் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு!
பி.ஜே.பி.யைத் தவிர அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கொந்தளித்து எழுந்து முழக்கமிட்டனர். உள்துறை அமைச்சர் பதவி விலகவேண்டும்; பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத அளவுக்கு எதிர்ப்புகள் பீறிட்டுக் கிளம்பின; நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி, உள்துறை அமைச்சரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். பதவி விலகவேண்டும்; பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்ற முழக்கம் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
எந்தப் பிரச்சினைக்கும் வாய் திறக்காத பிரதமர் மோடி, வேறு வழியின்றி ஏதேதோ சமாதானம் என்ற பெயரில், வக்காலத்து வாங்கியுள்ளார். அந்த அளவுக்குப் பிரச்சினை பூகம்பமாகிவிட்டது.
‘‘எனது பேச்சினை ஏ.அய். தொழில்நுட்பம் மூலம் திரித்துக் கூறுகின்றன எதிர்க்கட்சிகள்” என்று உள்துறை அமைச்சர் ‘பல்டி’ அடித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசப்பட்டதை திரிபு செய்ய முடியுமா?
உண்மையைச் சொல்லப்போனால், ஹிந்துத்துவாவாதிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் என்றால், அவ்வளவு எரிச்சல்! ‘‘நான் ஹிந்துவாகப் பிறந்தேன்; ஆனால், ஹிந்துவாக சாகமாட்டேன்!’’ என்று வார்த்தையளவில் இல்லாமல், 10 லட்சம் பேருடன் ஹிந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு, பவுத்தம் தழுவியவர் அண்ணல் அம்பேத்கர் (14.10.1956).
அப்பொழுது அவரும், பவுத்தம் தழுவியவர்களும் 22 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.
1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுள்களாகக் கருதி நான் வணங்க மாட்டேன்.
2. இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்தவர் அண்ணல் அம்பேத்கர்.
ஹிந்து ராஜ்ஜியம் என்பது நாட்டுக்குக் கேடானது – ஹிந்து மதம் என்பது ஜாதிகளின் தொகுப்பு என்றவர் டாக்டர் அம்பேத்கர்.
ஹிந்து திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார் சட்ட அமைச்சர் அம்பேத்கர். ஸநாதன சக்திகள் எதிர்ப்பால் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்.
இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததற்காக, நேரு, அம்பேத்கர் உருவப் பொம்மைகளை எரித்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். (1949)
‘‘மகாத்மா காந்தியைக் கொன்றதற்குப் பதிலாக ஜவகர்லால் நேருவை, கோட்சே கொலை செய்திருக்கவேண்டும்’’ என்று கேரளாவின் ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘கேசரி’யில் எழுதப்பட்டதற்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கவில்லையா? ‘கேசரி’ இதழில் அந்தக் கட்டுரையை எழுதியவர் பி.கோபாலகிருஷ்ணன் என்பவர். இந்த கோபாலகிருஷ்ணன், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவியவர் ஆவார்.
‘‘தேசிய சர்க்கார் என்றால், பார்ப்பன சர்க்கார்தானே! 1937 இல் தேசியம் வெற்றி பெற்று ஏழு மாகாணங்களும், பார்ப்பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கும் எல்லா மக்களும் ஓட்டுக் கொடுத்து, அதன்மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள்தானே ஆட்சி செலுத்துவார்கள். பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும், பாப்பாத்திகள்தான் மெஜாரிட்டியாய் வருவார்கள்’’ (‘குடிஅரசு’, 30.9.1944) என்றார் அண்ணல் அம்பேத்கர்.
‘‘சமத்துவம் இன்மையும் மற்றும் பாரபட்ச தொல்லையால் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்கள் ஒரு கட்டத்தில் நாட்டின் அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்’’ என்று எச்சரித்தார்.
ஹிந்துத்துவாவின் தத்துவச் செதில்களை எல்லாம் சிதைக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட அண்ணல் அம்பேத்கரை ஹிந்துத்துவா
பா.ஜ.க. சக்திகள் ஏற்குமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது வயிறு எரியாதா ஹிந்துத்துவா வகையறாக்களுக்கு?
இதனுடைய வெளிப்பாடுதான், உள்ளத்திலிருந்து பீறிட்டு எழுந்ததுதான் ஒன்றிய உள்துறை அமைச்சரின் பேச்சு.
எதற்கெடுத்தாலும் ‘‘அம்பேத்கர், அம்பேத்கர்’’ என்று பேசுவார்கள்தான்; அவர்தம் செயல்பாட்டால் உரிமை பெற்றவர்கள், வாய்ப்புப் பெற்றவர்கள் நன்றி உணர்வோடு வெளிப்படுத்துவார்கள்தான்!
அவர் இயற்றிய சட்டத்தின் மீதுதானே உறுதிமொழி எடுத்து பதவி ஏற்கிறார்கள் – பிரதமர் முதல் அத்தனை அமைச்சர்களும், உறுப்பினர்களும்!
பார்ப்பனர்களுக்கு இராமாயணம் தேவைப்பட்டது – ஒரு வால்மீகியை அழைத்தனர்; பாரதம் தேவைப்பட்டது – வியாசரை அழைத்தனர்; அரசமைப்புச் சட்டம் தேவைப்பட்டது – என்னை அழைத்தனர் என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.
“காரியம் ஆக வேண்டுமானால் காலைப்பிடி – பிறகு காலை வாரு!” என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன் தேவ் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்கு அளித்த பேட்டி:
“Acharya who defends Sati, Caste” என்பது பேட்டியின் தலைப்பு. அதில் ஓரிடத்தில் கூறுகிறார்.
“The Sankaracharya argued that caste was based on Religious principles.
He challenged anyone to point out a single harijan who could be rated equal to a brahmin.
When a reporter said that Dr. Ambedkar could be one, the acharya lashed out ‘The Constitution is full of mistakes owing to Dr. Ambedkar. One expert has pointed out 540 mistakes in the constitution.’’
“ஒரு பிராமணனுக்கு இணையான ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவரைக் காட்ட முடியுமா? என்று பூரி சங்கராச்சாரியார் சொன்னபொழுது செய்தியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். ஏன் அம்பேத்கர் இல்லையா என்றதும், சீறிப் பாய்ந்த பூரி சங்கராச்சாரியார் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உண்டாக்கியதால்தான் இந்திய அரசியல் சட்டம் முழுவதுமே குறைபாடுகள் நிறைந்ததாகிவிட்டது.
540 குறைகள் இந்திய அரசியல் சட்டத்தில் இருந்ததாக ஒரு நிபுணர் சொன்னார்” என்று பூரியார் சொன்னாரே! சதியை ஆதரிக்கிறேன் என்றும் அந்தப் பேட்டியில் கூறினார். இந்த வழி வந்த ஹிந்துத்துவவாதிகள் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்துவதைப் புரிந்துகொள்ள முடியும்.
இதனை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் ஏகடியமும், வெறுப்பும்தான் உள்துறை அமைச்சரின் வாயால் வெளிவந்துள்ளது.
ஹிந்துத்துவா, ஸநாதனவாதிகளுக்கு இரண்டு அரசியல் சமூக தலைவர்களின்மீது எப்போதும் எரிச்சல்தான்! அம்பேத்கரும் நேருவும்தான் அவ்விருவரும்!
அம்பேத்கரைப்பற்றி உள்துறை அமைச்சர் சொன்ன கருத்தும், தோரணையும் அண்ணல்மீது இருந்த காழ்ப்புணர்ச்சியைத்தான் வெளிப்படுத்தியது.
அண்ணல் அம்பேத்கர் எந்தப் பகவானையும் நம்பவில்லை; சொர்க்கத்தையும் நம்பவில்லை.
உயிரோடு வாழ்ந்து, இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை அளித்த அரும்பெரும் தலைவரைச் சிறுமைப்படுத்தி – இல்லாத சொர்க்கத்துக்கு வழிகாட்டுவதுதான் ஹிந்துத்துவாவின் பிற்போக்குச் சிந்தனை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பூர்த்தி விழாவில் (26.11.1949) பேசிய அரசமைப்புச் சட்டச் சிற்பி அண்ணல் அம்பேத்கர், ‘‘அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது; ஆனால், சமூக ஜனநாயகம் கிடைக்கவில்லை” என்று ஞாபகமாக முக்கிய உரையில் பதிவு செய்தார்.
அந்த சமூக விடுதலை கிடைத்துவிடக் கூடாது என்பதுதானே ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகையறாக்களின் ஹிந்துத்துவா கொள்கை.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று அவர்கள் கூறுவதன் கருப்பொருளை அண்ணல் அம்பேத்கர் சொன்ன முக்கியமான கருத்தோடு பொருத்திப் பாருங்கள் – அமித்ஷாவின் கூற்றுக்கான பொருள் புரியும்!
இதுவரை இந்த ஹிந்துத்துவாவாதிகளைப் புரிந்துகொள்ளத் தவறியவர்கள், ஒரு வகையில் புரிந்து கொள்ளவும், தாங்கள் இருக்கவேண்டிய அணி எது என்பதை உறுதி செய்துகொள்ளவும், உள்துறை அமைச்சரின் சிந்தனை ஓட்டம் பெருமளவு உதவும் அல்லவா?