வாசிங்டன், டிச. 20- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா நடத்திய இணையவழி நேர்காணல் டிசம்பர் 7-ஆம் தேதி சிறப்பாக நடந்தேறியது.
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ஆசிரியர் அவர்களை நேர்காணல் செய்தார். ஆசிரியர் அவர்களின் ஆசிரியரான திராவிடமணி அவர்க ளைப் பற்றியும், தந்தை பெரியாரோடு தொடங்கிய பயணத்தையும், கழகப் பணிகளில் அவரது பயணம் தொடங்கிய வரலாறு குறித்தும், பெண்களுக்கான கல்வி அமைப்புகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு புன்னகையுடனும், தெறிப்புடனும் ஆசிரியர் அவர்களின் பதில்கள் அமைந்திருந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்ற நேர்காணலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப்பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. டாக்டர் சோம. இளங்கோவன் உள்ளிட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் மற்றும் தோழமைகள் இணைய வழி இணைந்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தனர்.
ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை பெரியார் பன்னாட்டு அமைப்பு வாயிலாக மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
