புதுடில்லி, டிச.20 மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா 17.12.2024 அன்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் நிறைவாக 17.12.2024 அன்று சுமார் ஒன்றரை மணிநேரம் அமித் ஷா உரையாற்றினார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரையும் அரசியல் சாசனம் குறித்து தொடர்ச்சியாக பேசி வருவதையும் விமர்சித்த அமித் ஷா, “அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் (என 6 முறை கூறி)’ என முழக்கமிடுவது இப்போது வழக்்கமான வாடிக்கை (ஃபேஷன்) ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.
அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக் கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” என்று விமர்சித்தார்.
“நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது, அவரது நீண்ட உரையின் இந்த சிறிய பகுதியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு பெரும் அமளி ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பிய நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.