கி.வீரமணி
19.12.1973 அன்று மாலை நாங்கள் அய்யா வேனில் அமர்ந்து அன்றைய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணிக்கிறோம்.
வேனில் அமர்ந்திருந்த அறிவு ஆசான் அய்யா மிகுந்த வியப்புக் கலந்த எல்லையற்ற மகிழ்ச்சிச் செய்தியாக இதை வரவேற்று, கைத்தட்டிப் பெருமிதம் கொண்டு சொன்னார்!
“என் கண் முன்னாலேயே விஞ்ஞானம் இவ்வளவு மாறுதல்களைக் கண்டுள்ளது. மனித அறிவு, ஆற்றல் எவ்வளவு வளர்ந்து வருகிறது என்பதைக் கேட்கும் போது ஒரே பிரமிப்பாக இருக்கிறது.
மேலை நாட்டான் இப்படி அறிவுச் சுதந்திரம் கொடுத்து, பலப்பல, புதுப்புது, காரியங்களைக் கண்டுபிடித்துச் செய்கிறான்! ஆனால் நம்ம மடையர்களோ, இன்னமும் குழவிக் கல்லைக் கட்டி மாரடித்துக் கொண்டு, ஊர் ஊராகத் திருவிழா நடத்திக் கொண்டு இருக்கிறானே. அந்த நிலையை நாம் எப்போது அடையப் போகிறோம் என்ற கவலையே அதிகமாகிறது.
எனக்கு வயதாகிவிட்டதே என்று இப்போது நான் மிகவும் கவலைப்படறேன் – வயது குறைவாக இருந்தால் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கிட மேலும் உத்வேகத்துடன் உழைக்க முடியுமே” என்று தம் உணர்வினை மறைக்காமல் வெளிப்படுத்தினார்கள்!
அந்த இறுதிப் பேருரையாக அமைந்த தியாகராயர்நகர் பொதுக் கூட்டத்தில் பேசும் போது இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றியும் பேசி ஒப்பிட்டுக் காட்டினார்.
அதுமட்டுமா அப்பேருரையில்?
அது அறிவு – அனுபவ முத்துக் குவியல்!
கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பின் வருவதை முன்னோக்குடன் கூறியதுபோல் சொன்னார்கள்.
“… எனக்குப் போதிய வயதாகி விட்டது, சராசரி வயதை விட இரண்டு, மூன்று மடங்கு வாழ்ந்திருக்கிறேன் என்பதால் நான் சாவதைப் பற்றிய கவலை எனக்கில்லை.
பின் என்னென்று கேட்பீர்கள்?
உங்களையெல்லாம் சூத்திரப்பட்டத்தோடு விட்டு விட்டுச் செல்லுகிறேனே என்ற கவலைதான் எனக்கு!”
எத்தகைய மானிட சமத்துவ நேயர் தந்தை பெரியார் என்பது விளங்குகிறதா?
“இன்றைய தி.மு.க. ஆட்சியை, ஏதேதோ போலிக் காரணம் கூறி நாளை பார்ப்பனர் ஒழித்துக்கட்டி விடுவார்களானால், இந்தக் கொள்கையைச் சொல்ல, செய்ய வேறு எவரும் வரமாட்டார்களே –
நம்ம ஆள்களும் எளிதில் ஏமாந்துவிடுவார்கள். எதிரிக்கு விலைபோய் விடுவார்கள். மீண்டும் பழைய கதை தானே திரும்பும்? என்னை, எங்களை விட துணிவோடு இந்தக் கொள்கையை எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேறு யார் இருக்கிறார்கள்’.’
மகளிர், இளைஞர்கள் ஜாதியை ஒழிக்க துணிந்து முன்வரவேண்டும்.
எவ்வளவு காலத்துக்கு இனி ‘சூத்திர’ இழிவுப்பட்டத்தை ஏற்ற மானங்கெட்டவர்களாக சுமந்து கொண்டே திரிவது?”
சாட்டை அடி போலச் சொல்லி மக்களுக்கு உணர்வு எரிமலை பொங்குமாறுச் செய்த – ஒரு ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான ஓர் அறப்போர் பிரகடனமாக்கி விட்டது அவ்வுரை!
தன் முதுமை, தனது பொறுக்க முடியாத உடல் வலி எல்லாவற்றையும் தாண்டி, நம் சமூக இழிவு வலியைப் போக்கவே – உயிர் சில நாள்களில் பிரியும் வரை தனது உடலை வருத்தி முழங்கினார் அய்யா என்பதை எண்ணிப் பார்த்தால் நாம் எப்படி கலங்க வேண்டும்? யோசியுங்கள் தோழர்களே!
அய்யாவின் முன்னெச்சரிக்கை நூற்றுக்கு நூறு பலித்ததே…
எல்லாவற்றையும் தலைகீழாக்கி (குலக்கல்வித் திட்டம் வரை) மனு மீண்டும் சிம்மாசனத்துக்கு வந்து எட்டி எட்டிப் பார்க்கிறதே.
இங்கே ஒரு கொள்கையுள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியும், அதன் உறுதிமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையும் இல்லாதிருந்தால் இன்று என்ன நிலை,
சற்றே பொறுப்புணர்வுடன் எண்ணிப் பாருங்கள்!
தாய்க்கழகம் தந்தையின் சிந்தனையில் உதித்துக் கூறிய எச்சரிக்கையை எட்டுத் திசைக்கும் எடுத்துச் செல்லும் பெரும் பணிதானே இனி நம் ஒரே பணி – பணியாக இருக்க வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அய்யா நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய மகத்தான ‘திராவிட மாடல்’ ஆட்சியை கண்ணை இமை காப்பது போல காக்க வேண்டும்.
51 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே பணி – நம் பணி!
நமது பார்வை அரசியல் பார்வை அல்ல
நம் தலைமுறைகளின் வாழ்வு இதில் அடங்கியிருக்கிறது என்பதே.