நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களை நுழைய விடாமல் தடுத்து பிஜேபி எம்.பி.க்கள் மோதல்
புதுடில்லி, டிச.20 அம்பேத்கர் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து காயமடைந்த 2 பாஜக மக்களவை உறுப்பினர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் அவர்களை தள்ளிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டிஉள்ளது.
அம்பேத்கர் விவகாரம்
மாநிலங்களவையில் அம் பேத்கர் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ஆம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களும் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளா கத்தில் இந்த விவகாரம் நேற்று (19.2.2024) எதிரொலித்தது. நீல நிற உடை அணிந்த ‘இந்தியா கூட் டணி’ மக்களவை உறுப்பினர்கள், ‘‘உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்’’ என முழக்கமிட்டபடி அம்பேத்கர் சிலையில் இருந்து, நாடாளுமன்ற நுழைவுவாயில் நோக்கி பேரணி யாகச் சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்ட ‘இந்தியா கூட்டணி’ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தள்ளுமுள்ளு
இதற்கு போட்டியாக, பாஜக உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி முழக்கமிட்டனர். சிலர் நாடாளுமன்ற நுழைவுவாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால், இருதரப் பினர் இடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாடாளு மன்றத்துக்குள் நுழைய முயன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, ஒடிசாவை சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர். பிரதாப் சந்திர சாரங்கி (69), உத்தரப்பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் முகேஷ் ராஜ்புத் ஆகியோர் கீழே விழுந்தனர்..
மக்களவை உறுப்பினர் சாரங்கியின் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அருகே இருந்த எம்.பி.க்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ‘‘சாரங்கியின் தலையில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. காயம்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது. உறுப்பினர். முகேஷ் ராஜ்புத்துக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் புகார்
நாடாளுமன்ற நுழைவுவாயிலில் தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் – ‘இந்தியா கூட்டணி’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே நேற்று நடைபெற்ற தள்ளுமுள்ளு சம்பவத்தில் பாஜக எம்.பி.க்கள் 2 பேர் காயமடைந்ததாக நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல் நிலை யத்தில் பாஜக உறுப்பினர்கள் அனுராக் தாக்கூர், பன்சூரி சுவராஜ் ஆகியோர் புகார் கொடுத் தனர். அவர்களுடன் தெலுங்கு தேசம் எம்.பி. ஒருவரும் சென்றார்.
பின்னர், அதே காவல் நிலையத்தில் காங்கிரஸ் உறுப் பினர்கள் திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், ராஜீவ் சுக்லா மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் ஒரு புகார் கொடுத்தனர். அதில், ‘காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் (84), பாஜக எம்.பி.க்கள் அத்துமீறி நடந்து அவரை தள்ளிவிட்டனர்’ என்று கூறியிருந்தனர். இந்த 2 புகார்களையும் ஆய்வு செய்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் கொடுத்தனர். அதில், ‘நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தியை பாஜக உறுப்பினர்கள் தடுத்தனர்’ என்று கூறியுள்ளனர். மக்களவைத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுப்பிய கடிதத்தில், ‘என்னை பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதால், நிலைதடுமாறி கீழே அமர்ந்தேன். ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட எனது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். தள்ளுமுள்ளு, மோதல் சம்பவங் களால் நாடாளுமன்ற வளாகம் பதற்றத்துடன் காணப்பட்டது. இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.