நெய்வேலி, டிச.20 நெய்வேலியில் விமான நிலையம் முழுமையாக தயாரானதும் பயணிகள் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் மக்களவையில் தெரிவித்தார்.
இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் மக்களவையில் 19.12.2024 அன்று எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
உடான் திட்டத்தின் கீழ் ஏலத்தின் முதல் சுற்றில் ஆா்சிஎஸ் (மண்டல இணைப்புத் திட்டம்) விமானங்களின் மேம்பாடு மற்றும் இயக்கத்திற்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு (என்எல்சி) சொந்தமான தமிழ்நாடு நெய்வேலி விமான நிலையம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் 31.10.2024 அன்றைய நிலவரப்படி ரூ. 15.21 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு உரிமம் வழங்கும் பணி நடந்து வருகிறது. நெய்வேலியை சென்னையுடன் இணைக்கும் ஆா்சிஎஸ் வழித்தடம் வழங்கப்பட்டுள்ளது. விமானங்கள் சேவை தொடங்குவது விமான நிலையத்தின் தயாா்நிலைக்கு உள்பட்டதாகும் என்று அந்தப் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் விரைவில் விமான நிலையம்
கரூர், டிச.20 கரூரில் விரைவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கரூரில் அனைத்து தொழில்கூட்டமைப்புகள் சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கைத் தொடங்கிவைத்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:
கரூரில் 200 ஏக்கா் பரப்பளவில் ஒரு புதிய சிப்காட் அமைப்பதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு பொங்கல் விழாவிற்கு முன்பாக தொடங்கும். அரவக்குறிச்சிக்கு அருகாமையில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. முதலமைச்சர் அறிவித்தபடி, கரூரில் வா்த்தக மய்யம் தொடங்குவதற்கான இடம் 5 ஏக்கா் தயாராக இருக்கின்றது.
விரைவில் கரூரில் வா்த்தக மய்யம் அமைக்கும் பணிகள் தொடங்கும். தொழில் வரியை குறைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்தவா்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளிநாட்டில் இருந்து கரூா் வரும் ஜவுளி வாங்குவோா் மதுரை, கோவைக்கு விமானத்தில் வந்து பின்னா் கரூா் வர காலதாமதம் ஏற்படுகிறது. அதனைக் களையும் வகையில், கரூரில் விமான நிலையம் என்பது எனது வாழ்நாள் கனவு, அந்தக் கனவு நிறைவேறுவதற்கும் காலம் கனிந்துகொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றிலே 3 இடங்களில் தடுப்பணை அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடப்பாண்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றார்.