காஞ்சி, டிச.20 காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 394 மருத்துவப் பணி யிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.
புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்
மறைந்த மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவாக, காஞ்சிபுரத்தில் கடந்த 1969-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. இங்கு கடந்த 40 ஆண்டு களாக தமிழ்நாடு மற்றும் அண்டை மாநி லங்களிலிருந்து வரும் நோயாளிகளுக்கு இலவசமாக புற்றுநோய் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 290 படுக்கைகள் மற்றும் 230 பணியிடங்களுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், புற்றுநோய் பராமரிப்பு சேவையை மேம்படுத்துவதற்காக, இந்த மருத்துவமனையை 750 படுக்கைகள் கொண்ட ஒப்புயர்வு மய்யமாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, அதிநவீன வசதி கொண்ட ஒப்புயர்வு மய்யம், 6,36,347 சதுர அடி பரப்பளவில் தரைத் தளம் மற்றும் 5 தளங்களுடன் ரூ.250.46 கோடியில் அமைக்கப்பட்டது. அதில், குருதியியல் (ரத்தவியல்), குழந்தை புற்றுநோயியல், புற்றுநோய் தடுப்பு மற்றும் சமூக புற்றுநோயியல், மாநில புற்றுநோய் பதிவு, வலி நிவாரண சிகிச்சை அல்லது நல்வாழ்வு பராமரிப்பு சேவைகளுடன் கூடுதலாக மனநல மருத்துவப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு, பல் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு, குருதி (ரத்த) மாற்று மருத்துவப் பிரிவு மற்றும் எலும்பியல் பிரிவு ஆகிய துறைகளும் செயல்பட உள்ளன.
இதற்காக, 49 மருத்துவ அலுவலர்கள், 2 மருத்துவம் சாராத பணியாளர்கள், 207 செவிலியர்கள், 7 அமைச்சுப் பணியாளர்கள், 129 துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட 394 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இதைத் தவிர சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் என 163 இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.