* ‘‘சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போது கூட நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், நம்பியுமேதான் இக்காரியத்தில் இறங்கினோம்;
* இவ்விஷயத்தில் நமக்குள்ள உறுதிதான் - இவ்வியக்கத்துக்குச் சொத்தும், அஸ்திவாரமுமேயொழிய வேறு ஒன்றுமில்லை’’ என்றார் தந்தை பெரியார்!
ஈரோடு, டிச.20‘‘சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போது கூட நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், நம்பியுமேதான் இக்காரியத்தில் இறங்கினோம். இவ்விஷயத்தில் நமக்குள்ள உறுதிதான் இவ்வியக்கத்துக்குச் சொத்தும், அஸ்தி வாரமுமேயொழிய வேறு ஒன்றுமில்லை” என்றார் தந்தை பெரியார். இந்த இயக்கம் போன்று வேறு இயக்கம் இல்லை என்பதற்கு அடையாளம் இதுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா!
கடந்த 26.11.2024 அன்று மாலை ஈரோட்டில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அய்யாவினுடைய வசதி வாய்ப்பைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், ஈரோடு முனிசி பாலிட்டியில், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் மார்ச் மாதத்தில் பணத் தட்டுப்பாடு வரும்.
அப்பொழுது கமிசனரோ, நகர சபை தலைவர்களோ தந்தை பெரியார் அவர்களுக்கு கடிதம் எழுதுவார்கள்.
ஈரோட்டில், முக்கால்வாசி சொத்து பெரியாருடையதுதான்!
அக்கடிதத்தில், ‘‘முனிசிபல் வரியை கொஞ்சம் முன்பே கொடுங்கள்” என்பார்கள். ஈரோட்டில், முக்கால்வாசி சொத்து பெரியார் அவர்களுடையதுதான்.
அடுத்த காலாண்டிற்கும் சேர்த்து வரியைக் கொடுத்தால், எங்களுக்கு வசதியாக இருக்கும்; ஊதியம் கொடுப்பதற்குப் பணத் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என்பார்கள்.
அதற்காகத் தந்தை பெரியார் அவர்கள் வருவார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காரைவாய்க்கால் மைதானத்தில், நம்முடைய கழகத் தோழர்கள் ஒரு கூட்டம் போடுவார்கள்.
ஈரோடு சண்முக வேலாயுதம் போன்றவர்கள், மற்ற நண்பர்கள் எல்லாம் இணைந்து இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஓர் இயக்கத்தில், இன்றைக்கு இவ்வளவு தோழர்கள் – சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழாவிற்கு வந்திருக்கிறீர்கள்.
நான் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகின்றேன்!
அந்த இயக்கத்தினுடைய தொண்டர்களில் சாதாரண எளியவனாக வந்த நான், இன்றைக்கு உங்க ளையெல்லாம் பார்த்து, ‘‘வாருங்கள், ஈரோட்டிற்குப் போவோம்; நூற்றாண்டு விழாவை அங்கே கொண்டா டுவோம்” என்று சொன்னேன். இந்த இயக்கம் நூற்றாண்டைப் பெற்றிருக்கின்றது என்கிறபொழுது, நான் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகின்றேன்.
என்னுடைய வயதை 92 என்று சொன்னார்களே, அதெல்லாம் சாதாரணம். நான், 102 வயதுள்ளவரைக் குறிப்பிட்டுச் சொல்வதில் ஒரு சுயநலம்தான். ஏனென்றால், எனக்கு வயதாகிவிட்டது என்று மற்றவர்கள் நினைக்கக்கூடாது. என்னைவிட வயதானவரைக் காட்டினால், நான் சிறிய கோடாகிவிடுவேன்.
நான் பணியாற்றுவதற்குத் தயாராக இருக்கிறேன். என்னைப் பார்த்து, ‘‘92 வயதாகிவிட்டது, 92 வயதாகி விட்டது” என்று சொல்கிறார்கள். ஓராண்டு போனால், வயது ஏறத்தான் செய்யும். அதை ஏன் நீங்கள் எனக்கு ஞாபகப்படுத்துகிறீர்கள்?
கடவுள் மறுப்பாளர்களும் நீண்ட காலம் வாழ முடியும் என்பதற்கு நிரூபணம் இவர்கள்!
அதனால்தான் நான் சொல்கிறேன், ‘‘எனக்கு 92 வயது இருக்கட்டும்; அதோ 102 வயதுக்காரர் இருக்கி றார் பாருங்கள்; அதோ 103 வயதுக்காரர் இருக்கிறார் பாருங்கள், அதோ 106 வயதுக்காரர் இருக்கிறார் பாருங்கள்” என்று சொன்னேன்.
இதுவரையில் நாங்கள் 144 அய்தான் பார்த்தி ருக்கின்றோமே தவிர, 106-அய் பார்த்ததில்லை.
அதுவும் யாருக்கு?
‘‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை” என்று சொன்னவர்களாலும் நீண்ட காலம் வாழ முடியும்” என்று நிரூபித்திருக்கின்றார்கள்.
பெரியாரிடம் வைதீகர்கள் சொல்வார்கள், ‘‘இவர், நீண்ட காலம் வாழவேண்டும், எல்லாம் வல்ல கடவுளைப் பிரார்த்திக்கிறோம்” என்பார்கள்.
அது அவர்களுடைய ஆசை; அதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை.
கடவுளைப் பாதுகாப்பதற்கே மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்!
ஆனால், எல்லாம் வல்ல கடவுளுக்கு சக்தி இருந்தால், உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவரிடம் போகவேண்டாம்; மருத்துவ மனைக்குப் போகவேண்டாம்; நோய்க்கு மருந்து சாப்பிடவேண்டாம். ஆனால், கடவுளைப் பாதுகாப்பதற்கே மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
எல்லாக் கடவுள்களும் விசா இல்லாமல், பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடுகளுக்குப் போகிறார்கள்.
இப்பொழுது கடவுள்கள் யார் தயவில் இருக்கிறார்கள் என்றால், நம்முடைய அமைச்சர் சேகர்பாபு தயவில்தான்.
அய்யப்பன் கோவிலுக்குச் செல்கிறவர்களுக்கு காப்பீடு (இன்ஸ்சூரன்ஸ்) மிகவும் முக்கியம் என்று சொல்கிறார்கள். பக்தர்களும் மனிதர்கள்தான்; அவர்களை நாங்கள் தவறாகச் சொல்லவில்லை.
கடவுள் இருக்கும்பொழுது, எதற்காக இன்சூரன்ஸ்?
‘‘காலரா நோய் பரவுகிறது, இங்கே யாரும் வரவேண்டாம்’’ என்பார்கள்!
எல்லா மதத்திலும் அப்படித்தான்.
ஆரோக்கிய மாதா என்று சொல்லி, வேளாங்கண்ணி கோவிலுக்குப் போவார்கள்.
மாதாவே, ஆரோக்கியமாதா! ஆனால், அங்கே இருந்து என்ன சொல்வார்கள் என்றால், ‘‘காலரா நோய் பரவுகிறது, இங்கே யாரும் வரவேண்டாம்” என்பார்கள்.
கரோனா தொற்று (கோவிட் 19) காலகட்டத்தில், நம்முடைய நாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் காரணமாக, கோவில்களைப் பூட்டி வைத்திருந்ததோடு சரி. ஆனால், வடநாட்டில், கடவுள்கள் சிலைகளின்மீது போர்வை போர்த்தி வைத்தார்கள். ஏனென்றால், கடவுளைத் தாக்கிவிடப் போகிறது கோவிட் என்று.
பெரியார் அன்றும் தேவை! இன்றும் தேவை! நாளையும் தேவை!
சுயமரியாதை இயக்கம் இன்னமும் ஏன் தேவை என்பதற்கு அடையாளம் இதுதான்! பெரியார் அன்றும் தேவை! இன்றும் தேவை! நாளையும் தேவை!
மருந்து என்றும் தேவை!
மருத்துவர்கள் என்றைக்கும் தேவை!
மருத்துவக் கல்லூரிகள் என்றைக்கும் தேவை!
அதுபோன்று இருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல.
இந்த இயக்கத்தினுடைய வரலாறுகள், சாதனைகள், நோக்கம், அதனுடைய தாக்கம், அதனுடைய தாக்கத்தை யும் தாண்டி, ஆக்கம், சாதனைகள் அத்தனையையும் இங்கே நம்முடைய தோழர்கள் சொன்னார்கள்.
நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்கின்ற ஒரு மாநாடு!
இயக்கத் தோழர்கள், போராளிகள், நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்கின்ற ஒரு மாநாடு இது. நாம் நம்முடைய உறுதியை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மாநாடு முடிந்து செல்லும்பொழுது, தளர்ந்த நரம்புகள், முறுக்கேறிய நரம்புகளாக வெளியே செல்ல வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த மாநாடு, இதுபோன்ற தத்துவங்கள் உறுதியானவை!
முற்போக்குச் சிந்தனையாளர் எம்.ஆர்.ஜெயகர்
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது 1925 ஆம் ஆண்டு. முதல் மாநாடு 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில். இரண்டாவது மாநாடு 1930 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு மகாராட்டிராவில் இருந்து எம்.ஆர்.ஜெயகர் அவர்களை அழைத்திருந்தார்கள். அவர் மகாராட்டிர பார்ப்பனர். அப்படி இருந்தும், அவரை அம்மாநாட்டில் பங்கேற்க அழைத்தார் தந்தை பெரியார்.
ஏனென்றால், அவர் முற்போக்குச் சிந்தனையோடு, புரோகிதத் தன்மைகளை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, தீண்டாமையை எதிர்த்து மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்தார். அப்படிப்பட்டவர், தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட உணர்வா? என்று அதிசயப்பட்டார்.
பெரியாருக்குத் தனி மனித வெறுப்பில்லை. பெரியாருக்குத் தத்துவங்கள்மீது கோபமே தவிர, சுயமரியாதை இயக்கத்திற்குத் தனி மனித வெறுப்போ, குரோதமோ இல்லை என்பதற்கு, இந்த வரலாறே மிகப்பெரிய அடையாளமாகும்.
சுயமரியாதை இயக்க மாநாடுகள்!
இன்றைக்குச் சில பேர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள்; அதையும் தெரிந்தே செய்கிறார்கள். இதே ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு 1930 ஆம் ஆண்டு நடைபெற்றது. மூன்றாவது மாநாடு 1931 ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்றது – எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில்.
அந்த வரலாற்றையெல்லாம் படித்த எங்களுக்கு மயிர்க்கூச்செரிகிறது.
அந்தப் பாடங்களைப் படித்து, நம்மை மேலும் போராளிகளாக, களங்காணுகிறவர்களாக, நம்மை நாமே இந்தக் கொள்கைக்காக இழக்கக் கூடியவர்களாக, எந்த வேதனையையும், எந்த அடக்குமுறைகளையும் அவற்றை ஏற்கக்கூடியவர்களாக ஆகவேண்டும் என்பதற்கு அடையாளம்.
தந்தை பெரியார் பேசுகிறார்:
10.2.1930 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் அய்யா பெரியார் பேசுகிறார் கேளுங்கள்.
‘‘சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போது கூட நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், நம்பியுமேதான் இக்காரியத்தில் இறங்கினோம். இவ்விஷயத்தில் நமக்குள்ள உறுதிதான் இவ்வியக்கத்துக்குச் சொத்தும், அஸ்தி வாரமுமேயொழிய வேறு ஒன்றுமில்லை” என்றார்.
இந்த இயக்கம் போன்று வேறு இயக்கம் இல்லை என்பதற்கு அடையாளம் இதுதான்.
‘‘அறிவு விடுதலை இயக்கம்!’’
சுயமரியாதை இயக்கத்திற்கு வேறு பெயர் சொல்லலாமா? என்று அய்யா பெரியாரிடம் கேட்டார்கள். ‘‘அறிவு விடுதலை இயக்கம்” என்றார்.
‘‘உன்னுடைய அறிவு தளைகளால் கட்டபட்டு இருக்கிறது. ஜாதியால், பெண்ணடிமையால், தீண்டா மையால், பதவியாசையால். இப்படிப்பட்ட தளைகளை அறுத்தெறிந்து, உடைத்தெறிந்து, மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கவேண்டும்’’ என்றார்.
‘‘இதற்கு எல்லை என்ன?” என்று பெரியார் அவர்களி டம் கேட்டபொழுது, ‘‘மானிடப் பரப்பு” என்றார்.
திராவிடம் என்பது தத்துவம் – கொள்கை – கலாச்சாரம் – பண்பாடு!
அப்படியென்றால், திராவிடம் என்று சொல்கிறீர்களே அது முரண்பாடு அல்லவா என்று நீங்கள் கேட்கலாம்.
திராவிடம் என்பது தத்துவம் – கொள்கை – கலாச்சாரம் – பண்பாடாகும். மற்றவர்கள் நினைப்பதுபோன்று திராவிடம் என்பது இடத்தைக் குறிப்பிடுவதல்ல.
ஜாதி, வருணாசிரம தர்மம், ‘‘ஒருவன் தொடக்கூடாத வன், இன்னொருவன் தொடக் கூடியவன்; ஒருவன் படிக்கக் கூடாதவன்; இன்னொருவன் படிக்க வேண்டி யவன்; எனக்கு மட்டும்தான் உரிமை உண்டு’’ என்று சொல்லகூடியவர்களுக்கு, ‘‘ஒருவன் உயர்ந்தவன் – இன்னொருவர் தாழ்ந்தவன் என்று சொல்ல உரிமை உனக்குக் கிடையாது. மனிதர்கள் அனைவரும் சமம்’’ என்று சொன்னார் அல்லவா – அந்தக் கொள்கையை எவ்வளவு காலத்திற்கு முன் நிலைநாட்டினார்?
இங்கே சொன்னார்களே, மனுதர்மத்தைப்பற்றி, எவ்வளவு பேதம் இங்கே இருந்தது என்பதையும் – அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தியதைப்பற்றியும்.
அண்ணாவிற்கும், அய்யாவிற்கும் அரசியல் ரீதியான கருத்தியல் வேறுபாடு இருந்த காலகட்டத்தில், அண்ணா அவர்கள் அந்த நேரத்திலும்கூட, இந்தக் கொள்கையால் உந்தப்பட்ட காரணத்தினால் என்ன சொன்னார் தெரியுமா?
இன்றைக்கு இந்திய அரசமைப்புச் சட்ட உறுதி எடுத்துக்கொள்கின்ற நாள் நவம்பர் 26.
இதோ இந்த அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முகப்புரையைப்பற்றித்தான் இன்றைக்கு எல்லோரும் சொல்கிறார்கள். எல்லோரும் அதைக் கும்பிடுகிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தின்மீது, மனிதர்களுக்கு மட்டும் காதல் இல்லை, இன்றைக்கு நம்முடைய நாட்டில். கரையான்களுக்கும்கூட காதல் இருக்கிறது.
அரசமைப்புச் சட்டம் வருவதற்கு முன்பே, அந்தக் கொள்கையைச் சொன்ன இயக்கம் சுயமரியாதை இயக்கம்!
கரையான்கள்போன்று உள்ளே இருந்து அப்படியே அரிக்கக்கூடியவர்கள் எல்லாம், ‘‘அரச மைப்புச் சட்டத்தின்மீது எங்களுக்கு அதிகமான அக்கறை இருக்கிறது; கவலை இருக்கிறது” என்று சொல்கிறார்களே, இந்த அரசமைப்புச் சட்டம் வருவதற்கு முன்பே, இதே கொள்கையைச் சொன்ன இயக்கம் சுயமரியாதை இயக்கமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வறையறுக்கும் பொழுது அம்பேத்கருக்கு எத்தனையோ சங்கடங்கள், எத்தனையோ தடைகள் இருந்தன.
அதே அரசமைப்புச் சட்டத்தைத் தந்தை பெரியார் ஏன் கொளுத்தினார்? அதைத்தான் மிக முக்கியமாக நீங்கள் சிந்திக்கவேண்டிய ஒரு செய்தியாகும்.
திடீரென்று அரசமைப்புச் சட்டத்தை அய்யா அவர்கள் காரண, காரியம் இல்லாமல் கொளுத்தவில்லை.
(தொடரும்)