நமது இனமானப் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 102ஆவது பிறந்த நாள் இன்று (19.12.2024).
இறுதிவரை கொள்கையையும் – கொண்ட தலைமைகளையும் மாற்றாது – ஒரே வழியான திராவிட சமூக, அரசியல் இயக்கங்களான தி.க., தி.மு.க.,வில் பயணித்த புடம் போட்ட இலட்சிய வீரர் நமது இனமானப் பேராசிரியர்.
மனதிற்பட்டதை வெளிப்படையாக – எவருக்கும் தயவு தாட்சண்யமின்றி, தக்க வகையில் எடுத்து வைத்த தனித் தன்மை வாய்ந்த தகைசால் திராவிடத்தின் ஒளிப்பிழம்பு!
அவரது மேடைப் பேச்சு தெளிந்துசீராக ஓடும் தெள்ளிய பெரும் வற்றாத ஜீவநதி போன்றது!
தந்தை பெரியார் அவர்களைப்பற்றிப் பேசாமல் அவர் எந்த மேடையிலும் முழங்கியதே இல்லை!
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தாய்க் கழகமான திராவிடர் கழகம் ஆகியவைகளிடம் அவர் காட்டிய அன்பும், மரியாதையும் எளிதில் மறக்க முடியாதது!
தடுமாற்றமில்லாத திராவிட இயக்க கொள்கைத் தடகள வழிகாட்டி.
குதர்க்கக் கேள்விகளுக்கும் குவலயம் பாராட்டும் பதில் அளிக்கும் கருத்து வள ஊற்று!
தந்தை பெரியார் தம் முழக்கம் இறுதியான நாள் இன்று – அதே நாளில்தான் இனமானப் பேராசிரியர் பிறக்கிறார்
திராவிடத்தில், பெரியார் விட்ட இடம் பேராசிரியர் தொட்ட இடமாகி – தொண்டுக் குழந்தையன்பில் இன்றைய முதலமைச்சருக்கு அவர் வழங்கிய ஆசி அவரது ஒப்பற்ற பெருந் தன்மையாகும். வாழ்க வாழ்கவே – நம் இனமானப் பேராசிரியர்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
19.12.2024