புரியாதவர்கள் சில பேர் இன்றைக்கு உளறிக் கொண்டிருக்கின்றார்கள் – ‘‘குடும்ப ஆட்சி – குடும்ப ஆட்சி” என்று!
பகுத்தறிவையும், சுயமரியாதையையும், சமூகநீதியையும் உருவாக்கக் கூடிய இயக்கம் இந்த இயக்கம்!
ஈரோடு, டிச.19 புரியாதவர்கள் சில பேர் இன்றைக்கு உளறிக் கொண்டிருக்கின்றார்கள் – குடும்ப ஆட்சி – குடும்ப ஆட்சி என்று. குடும்ப ஆட்சிதானய்யா, கொள்கைக் குடும்பம். கொள்கைக் குடும்பம் என்றால், அப்பா ஒரு கட்சி; பேரன் இன்னொரு கட்சி என்று போய், வியாபாரம் செய்கின்ற குடும்பம் அல்ல. பகுத்தறிவையும், சுயமரியாதையையும், சமூகநீதியையும் உருவாக்கக் கூடிய இயக்கம் இந்த இயக்கம். அதனால், என் கொள்கை வழியை, என் பேரன் பின்பற்றவேண்டும் என்று நினைப்பது தவறா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 26.11.2024 அன்று மாலை ஈரோட்டில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
‘குடிஅரசு’ ஏடு என்ற சுயமரியாதைப் பல்கலைக் கழகம்
நமக்கெல்லாம் அறிவுக் கண் திறந்து, பிறவி அடிமைகளாய் இருந்த ஒரு சமுதாய மக்களாகிய நம்மை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கிய நம்முடைய அறிவாசான் – தன்மானத்தை ஊட்டிய தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தந்த சுயமரியாதை இயக்கம் – அவர் தோற்றுவித்த ‘குடிஅரசு’ ஏடு என்ற சுயமரியாதைப் பல்கலைக் கழகம் – பல்வேறு அடிநாள் பேராசிரியப் பெருமக்களாக இருந்து அதனை நடத்திய கைவல்யம் போன்றவர்கள், தளபதி அழகிரிசாமி போன்றவர்கள் மற்ற மற்ற எத்தனையோ தொண்டர்கள், தோழர்கள் எல்லாம் சுயமரியாதைச் சுடரொளிகளாக நமக்கு வழிகாட்டித் தந்திருக்கின்ற இந்த இயக்கம் நூறாண்டை அடைந்திருக்கிறது என்று நினைக்கின்ற நேரத்தில், எல்லையற்ற மகிழ்ச்சியை நாம் எல்லோரும் இங்கே பெற்றிருக்கின்றோம். அந்தப் பெருமையோடுதான் இங்கே நாம் கூடியிருக்கின்ற சுயமரியாதை இயக்க ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாடு!
ஈரோடு என்று சொன்னாலே
ஒரு கலக்கம் எதிரிகளுக்கு!
எங்கே பிறந்ததோ, அந்த மண்ணில்!
எவர் தொடங்கினாரோ, அந்த மண்ணில்!
ஈரோடு என்று சொன்னாலே ஒரு கலக்கம் எதிரிகளுக்கு! ஒரு பெரிய விளக்கம் நமக்கெல்லாம்!
உலகத்தில் இதுபோன்ற இயக்கம் இருக்கிறதா? என்று தேடிப்பாருங்கள்; கிடைக்கிறதா என்று பாருங்கள். நம்முடைய பெருமையை பேருருவாக்கியோ அல்லது ஊதிப் பெருக்கி சொல்வதற்காகவோ அல்ல இந்த மாநாடு!
நம்மை நாம் தயாரித்துக் கொண்டு இன்னும் களத்திலே நிற்கிறோம் என்று காட்டுவதற்காகத்தான் இந்த மாநாடு.
இம்மாநாட்டினை அருமையாகவும், சிறப்பாகவும் ஏற்பாடு செய்த நம்முடைய தோழர் தலைமைக் கழக அமைப்பாளர் சண்முகம் அவர்களே, திருநாவுக்கரசு அவர்களே, மணிமாறன் அவர்களே,
தலைமை உரையாற்றிய ஈரோடு மாவட்டத் தலைவர் நற்குணன் அவர்களே,
இம்மாநாட்டினைத் திறந்து வைத்தவர் சரியான இளைஞர்; அவருடைய வயது 102. அவர்தான் எங்களுக்கு இளைஞரணி தலைவர் இப்பொழுது – இதுதான் இந்த இயக்கத்தினுடைய சிறப்பு. அவர் கைத்தடியை ஊன்றிக்கொண்டு இங்கே வரவில்லை. அதுதான் எங்களுக்கெல்லாம் பெருமை – எனக்கெல்லாம் வழிகாட்டி.
தந்தை பெரியாரின் கைத்தடி!
ஏனென்றால், எங்களுக்கெல்லாம் கைத்தடி, உங்களுக்கெல்லாம் கைத்தடி – தந்தை பெரியாரின் கைத்தடி.
அப்படிப்பட்ட ஓர் அறிவார்ந்த இயக்கம் – அதிசய இயக்கம் – வியப்பின் விளிம்பில் எதிரிகளே தள்ளப்படவேண்டிய ஓர் இயக்கம்.
இம்மாநாட்டின் திறப்பாளராக இருக்கக்கூடிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன – அறக்கட்டளையின் பல்லாண்டு தலைவர் – 102 வயது இளைஞர் அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்களே,
பெருமதிப்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய, வணக்கத்திற்குரிய மேயர் எங்கள் வீராங்கனை அம்மையார் அவர்கள். அவரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகின்றோம்.
அவரோடு தீர்ந்தது, இவரோடு தீர்ந்தது என்று ஆரூடம் கணித்தவர்கள் எல்லாம் தீர்ந்தார்கள்!
பெரியார் நகர சபை தலைவராக இருந்த நகர சபை ஈரோடு நகர சபை. இந்த நகர சபையில், பெரியாருடைய இயக்கம் நூற்றாண்டு விழாவைக் காணுகின்ற நேரத்தில், திராவிட இயக்கம், அவரோடு தீர்ந்தது, இவரோடு தீர்ந்தது என்று ஆரூடம் கணித்தவர்கள் எல்லாம் தீர்ந்தார்கள் என்று சொல்லக்கூடிய வகையில், இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு, நகராட்சி மட்டும் எங்களிடத்தில் இல்லை – ஆட்சி வந்த காரணத்தினால், நாங்கள் மாநகராட்சியாக ஆக்குவோம் ஈரோட்டை – அது பெரியாருடைய விருப்பம் என்பதினால் அதைச் செய்திருக்கின்றோம் என்று சொல்லி, பெரியாருடைய விருப்பத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்ல – இது ஆணாதிக்கம் உள்ள சமுதாயமாகவே எப்பொழுதும் இருக்கக்கூடாது; நாற்காலி, பெண்களுக்குப் போகவேண்டும், அதுதான் மிகவும் முக்கியம். ஆண்களுக்கே அதிலே ஒரு பெரிய அச்சம் உண்டு – அன்றும் – இன்றும் – என்றும்.
ஒருபோதும் வேஷம் போடமாட்டார்கள் மகளிர்!
ஏனென்றால், நாற்காலி மகளிருக்குப் போனால், அதற்குப் பிறகு நமக்குக் கிடைக்கவே கிடைக்காது என்கிற எண்ணம். ஏனென்றால், மகளிர், வீரத்தைக் காட்டவேண்டிய நேரத்தில் வீரத்தைக் காட்டுவார்கள்; பாசத்தைக் காட்டவேண்டிய நேரத்தில், பாசத்தைக் காட்டுவார்கள். ஆனால், ஒருபோதும் வேஷம் போடமாட்டார்கள்.
மகளிரைப் பொறுத்தவரையில், அந்த உணர்வைக் கொண்ட நம்முடைய வணக்கத்திற்குரிய மேயர்
எஸ்.நாகரத்தினம் அம்மையார் அவர்களே, துணை மேயர் அய்யா செல்வராஜ் அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் சுப்பிரமணியம் அவர்களே,
சுயமரியாதைச் சுடரொளிகளின் இணைய தளத்தினைத் தொடங்கி வைத்த கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,
அன்னை மணியம்மையார் தொண்டறம் புத்தகத்தினை வெளியிட்டு சிறப்பாக உரையாற்றிய கழகப் பிரச்சார செயலாளர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
கழகப் பொதுச்செயலாளர் மானமிகு முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே,பிராமணீயத்தை நொறுக்கினால்தான் கம்யூனிசமே வர முடியும்!
எப்பொழுதும் எங்களில் ஒருவராக, காலந்தோறும் பிராமணீயம் என்று சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு, கம்யூனிஸ்டுகள் இயக்குகிறார்களா? என்று ஒரு சந்தேகம் இருக்கின்ற நேரத்தில்கூட, அவர் கொள்கைதான் முக்கியம் – இதுதான் கம்யூனிசத்திற்கே அடிப்படை – பிராமணீயத்தை நொறுக்கினால்தான் கம்யூனிசமே வர முடியும்.
ஏனென்றால், கடவுள் இருக்கின்ற இடத்தில் கம்யூனிசத்திற்கு வேலையில்லை;
ஜாதி இருக்கின்ற இடத்தில் கம்யூனிசத்திற்கு வேலையில்லை.
பெண்ணடிமை இருக்கின்ற இடத்தில் கம்யூனி சத்திற்கு வேலையில்லை.
இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆற்றல்மிகு எழுத்தால், பேச்சால், கருத்தால் பணியாற்றி வரக்கூடிய அருமைச் சகோதரர் பேராசிரியர் அருணன் அவர்களே,
இன்னும் மற்றொரு சிறப்பு, உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வரலாறு முதல் தொகுதி 1938 வரையில், மிகச் சிறப்பாக வெளிவந்தது. சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதிய ‘‘தமிழர் தலைவர்” என்ற தலைப்பில் உள்ளவாறு அன்றைக்கு அய்யா அவர்கள் தமிழர் தலைவர். இன்றைக்கு உலகத் தலைவர் – இதுதான் இந்த இயக்கத்தினுடைய வளர்ச்சி.
பெரியார் விட்ட இடத்தை – நாங்கள் தொட்ட இடமாக அதை ஆக்கிக்கொண்டோம்!
எனவேதான், தமிழர் தலைவரைத் தொடர்ந்து உலகத் தலைவராக விரிவாக, அவர் விட்ட இடத்திலிருந்து, நாங்கள் தொட்ட இடமாக அதை ஆக்கிக்கொண்டு தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறோம். இன்னும் இரண்டு தொகுதிகள்தான் மீதம் உள்ளன. அடுத்ததாக தொகுதி 11, தொகுதி 12. இரண்டு தொகுதிகளும் தயாராகிக் கொண்டு இருக்கின்றன.
அருமையாக எடுத்துச் சொன்னார், மிகவும் சுவையாக எடுத்துச் சொன்னார். தந்தை பெரியார் அவர்களே என்றைக்கும் திறந்த புத்தகம். அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற எத்தனையோ செய்திகள் – சுவைபட – ஒவ்வொரு அம்சமும், ஒவ்வொரு பாடங்கள். ஒவ்வொரு அனுபவமும், நிகழ்வும் நாமெல்லாம் கற்றுத் துறைபோகவேண்டிய தேர்வுகள்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான உலகத் தலைவர் பெரியார் என்ற புத்தகத்தினை அருமையாக வெளியிட்டு உரையாற்றியவர் எங்கள் அன்புச் சகோதரர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் – பாரம்பரியமிக்க சுயமரியாதைக் குடும்பத்துக்காரர்.
இந்த மாநாட்டில் மிகச் சுலபமாக வந்து அமர்ந்துவிட்டார், இன்றைக்கு. இந்தக் கொள்கை வெற்றிக்கே இதுவே அடையாளம்.
பெரியாருக்குப் பிடித்த ஒரே ஒரு குறள்!
வெளியில் மழை மிரட்டிக் கொண்டிருக்கின்றது அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. ஏனென்றால், 1330 திருக்குறளில், பெரியாருக்குப் பிடித்த ஒரே ஒரு குறள் என்னவென்றால்,
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”
பொதுத் தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றால், உண்மையான தொண்டர்கள் – இங்கே சொன்னார்கள் அல்லவா – நான்கு அம்சங்களைப்பற்றி.
உண்மையான தொண்டர்களுக்கெல்லாம் கால நேரம் கிடையாது. இல்லையென்றால், இந்த மாதிரி ஒரு மாநாட்டில், இவ்வளவு நேரம், பெண்கள் உள்பட, தாய்மார்கள், சகோதரிகள் உள்பட அப்படியே அமர்ந்திருக்கிறீர்கள்.
சிறப்பாக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர்!
தமிழ்நாட்டில், ஒரு சில இயக்கத்தில்தான் இப்படி தானாக வருகின்றவர்களும் இருக்கிறார்கள்; கடைசிவரையில் அமர்ந்திருக்கின்றவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் அல்ல; நம்முடைய சமூகத்தை மாற்றி அமைக்கக் கூடிய போராளியாக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளக்கூடிய, மானத்தையும், அறிவையும் பெறுவதற்காக நாங்கள் எதையும் இழக்கத் தயார். அதை மக்களுக்குப் பெற்றுத் தருவதற்காக என்று சொல்லி, வைராக்கியத்தோடு வரக்கூடிய எங்கள் தோழர்கள், சகோதரிகளாகிய இவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய இந்த இயக்கம் – அந்த இயக்கத்தில், சுயமரியாதைச் சுடரொளிகளாக வந்தவர்களைப்பற்றி சிறப்பாக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுடைய தந்தையார் டி.கே. சீனிவாசன் அவர்கள்.
புரியாதவர்கள் சில பேர் இன்றைக்கு உளறிக் கொண்டிருக்கின்றார்கள் – அது என்னவென்றால், குடும்ப ஆட்சி – குடும்ப ஆட்சி என்று.
அட, குடும்ப ஆட்சிதானய்யா, கொள்கைக் குடும்பம்.
கொள்கைக் குடும்பம் என்றால், அப்பா ஒரு கட்சி; பேரன் இன்னொரு கட்சி என்று போய் வியாபாரம் செய்கின்ற குடும்பம் அல்ல.
சுயமரியாதையையும், சமூகநீதியையும் உருவாக்கக் கூடிய இயக்கம்!
பகுத்தறிவையும், சுயமரியாதையையும், சமூகநீதியையும் உருவாக்கக் கூடிய இயக்கம் இந்த இயக்கம்.
அதனால், என் கொள்கை வழியை, என் பேரன் பின்பற்றவேண்டும் என்று நினைப்பது தவறா?
அவனுக்கு ஆற்றலும், திறமையும் இருக்கும்பொழுது, அவர் அந்த இடத்தை அடைவது என்பது தவறானதா? சட்ட விரோதமானதா? நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
நாளைக்கு உதயநிதியினுடைய பிறந்த நாள். நாம் எல்லோரும் வாழ்த்தவேண்டும்.
‘‘இதோடு முடிந்து போய்விட்டது, இதோடு முடிந்து போய்விட்டது” என்று சொன்னார்கள். ஆனால், இப்பொழுது ‘‘முடியலையே, முடியலையே” என்கிறார்கள். கடைசியில், அவனுக்கு முடியாது; நமக்கு முடியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான அருமைச் சகோதரர் வழக்குரைஞர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
நம்முடைய இயக்கத் தோழர்களுக்குத் தோன்றாத் துணையாக இருக்கக் கூடியவர்!
நமக்கு எல்லா வகையிலும் உதவி செய்து, என்றென்றைக்கும் நமக்குத் தோன்றாத் துணையாக இருக்கின்ற வீட்டு வசதித் துறை அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி அவர்கள் இங்கே இல்லையென்றாலும், அவருடைய தோழர்கள், இயக்கத் தோழர்கள் அத்துணை பேரும் உதவியிருக்கிறார்கள். அவர் இருந்து என்னென்ன செய்யவேண்டுமோ, அத்தனையையும் இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். என்றைக்கும் நம்முடைய இயக்கத் தோழர்களுக்குத் தோன்றாத் துணையாக இருக்கக் கூடியவர்கள். அப்படிப்பட்ட அருமை நண்பர்களே!
மாநகர செயலாளர் காமராஜ் அவர்களே,
பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அருமைத் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரமாகிவிட்டது – நான் பேசவேண்டும் என்று நினைப்பதைவிட, நான் பேசவேண்டியவற்றையெல்லாம் தோழர்கள் பேசும்பொழுது, அதைக் கேட்கும்பொழுதே எனக்கு உற்சாகமாக இருக்கிறது.
காரணம், அதை நான் எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கின்றேன். முதுகைத் தட்டிக் கொண்டு இருப்பதைப்பற்றி இங்கே கழகத் துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்.
அரைக்கால் சட்டை போட்ட மாணவனாக இங்கே வந்தேன்!
நினைத்துப் பார்க்கிறேன், இதே ஈரோட்டில், 1943-1944 இல், ஒரு மாணவனாக, அரைக்கால் சட்டை போட்ட மாணவனாக இங்கே வந்தேன். மற்றவர்கள் எல்லாம் உயரமாக இருப்பார்கள்; நான் ஒரு பொடியனாக உட்கார்ந்துகொண்டிருந்தேன். அய்யா அவர்களுக்கு, 10, 15 வீடுகள் ஈரோட்டில் உண்டு. அதில் ஒவ்வொரு வீட்டிலும் மாறி மாறி இருப்பார். (தொடரும்