அன்று டிசம்பர் 19… (1973): சில நிகழ்வுகள் பற்றிய நினைவுகள்

3 Min Read

கி.வீரமணி

1973 டிசம்பர் 19ஆம் நாள் – நமது இயக்க வரலாற்றில் மட்டுமல்ல, திராவிட சமுதாயத்தின் எழுச்சி வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு முக்கிய குறிப்பு நாளாகும்.
அந்நாளில்தான் நம் அறிவுப் பேராசான் தந்தை பெரியார் என்ற தொண்டு செய்து பழுத்த பழத்தின் – “தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர்” தந்தை பெரியரின் மாலை நேர வகுப்பின் இறுதி வகுப்பாகிய இணையற்ற முழக்கத்தின் நாள் ஆகும்!
ஆங்கிலத்தில் வாழ்நாளின் இறுதி உரைக்கும் ‘Swan Song’ என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுவது மரபு – சொலவடை! (அன்னத்தின் (உரை!) அதேப் பாட்டு).

ஆனால் நமது அறிவுப் பேராசானின் இறுதி முழக்கமோ “சிங்கத்தின் கர்ச்சனையாக” அல்லவோ அமைந்தது!
தனது சுயமரியாதை இயக்கம் – கொள்கைகள் – 1925இல் தொடங்கி அன்று வரை உள்ள வரலாற்று பாடமாகத் தொடங்கி, ஜாதி – தீண்டாமை ஒழிப்புத் திட்டமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அறப்போராட்ட விளக்கம், தமது தொண்டின் இலக்கு நோக்கிய பயணத்திற்கான போர்ச் சங்காக அல்லவா அந்த முழக்கம் அமைந்தது!
மக்கள் அன்புடன் அளித்த அந்த வேனில் இருந்தபடியே – தியாகராயர் நகரில் அய்யா ஆற்றிய அந்த உணர்ச்சிப் பேருரையின் போது, தனது உடலில் சிறுநீர் வடிய அறுவைச் சிகிச்சை செய்து பொருத்தப்பட்டிருந்த ரப்பர் குழாய் – பேச்சின் போது வயிற்றுக்குள் நகர்ந்து முட்டியதால் ஏற்பட்ட பெரும் வலியை, பொறுக்க முடியாமல் – ‘அம்மா அம்மா’ என்று கூக்குரல் இட்ட போது அனைவரது உள்ளத்திலிருந்து – கண்களிலிருந்து – (ரத்தக்) கண்ணீர் அல்லவோ பீறிட்டது.
அருகில் இருந்த எங்களைப் போன்ற தொண்டர்கள் – பட்ட வேதனையை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா? முடியாது; முடியாது.
என்றாலும் அய்யா பெரியார் தனது உரையை வலியினால் முடித்துக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்கும் மக்களைப் போலவே நாங்களும் உணர்ந்தோம்.

நகர்ந்த ரப்பர் குழாயை அவர்களே அப்படியும் இப்டியும் புரண்டு புரண்டு உடனே சரி செய்து கொண்டு,
“ஆகவே தோழர்களே” என்று மீண்டும் அதே வேகத்தில் கர்ஜனையைத் தொடருகிறார்!
– இப்படி 94ஆம் ஆண்டிலும் தனது கொள்கை வலிமைக்காக வலியையும் வலியவே பொறுத்துக் கொண்டு முழக்கமிட்ட ஒரு மகத்தான ஒப்பாரும் மிக்காருமிலாத் தலைவனை உலகம் கண்டதுண்டா? இனி காண முடியும் என்று எளிதில் நம்பத்தான் முடியுமா?
அந்த தியாகராயர் நகர் இறுதி முழக்கக் கூட்டத்திற்கு சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்படுகிறோம் – செல்லும் வழியில் வேனில் நான் அவ்வாரம் வந்திருந்த (Illustrated Weekly of India) ‘இல்லஸ்டிரேட் வீக்லி ஆஃப் இண்டியா’ ஆங்கில வார இதழைப் பற்றி அய்யாவிடம் விளக்கினேன்.
“அய்யா நீங்கள் இனிவரும் உலகம் பற்றி முன்பே பேசிய பரிசோதனைக் குழாய் ‘டெஸ்ட்டியூப் பேபி’ (Test-tube Baby) இந்த ஆங்கில ஏட்டில் – அதைத் தாண்டி அறிவியல் வளர்ந்து, மனிதரின் விந்து (Semen)வை பாதுகாத்து வைத்து ‘விந்து வங்கி’ (Semen Bank) என்று கண்டுபிடித்தனர். அதனை ஊசி மூலம் செலுத்தி கருத்தரிக்கச் செய்தால் குழந்தை பிறக்கச் செய்ய முடியும்.
தந்தையின் விந்துவைப் பாதுகாத்து அவர் இறந்த பிறகு அந்த விந்துவையே அவரது தாயாருக்கோ, ஒத்த பிறருக்கோ செலுத்தி கருத்தரிக்க வைக்க முடியும் என்று அக்கட்டுரையில் விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளது பற்றி – கட்டுரை இதோ என்று நான் அய்யாவிடம் படித்துக் காண்பிக்கிறேன்.
வேனில் அமர்ந்திருந்த தந்தை பெரியார் உடனே என்ன செய்தார் தெரியுமா? அச்செய்தி கேட்டு அவர் எப்படி வெளிப்படுத்தினார். எத்தகைய உணர்வுகளை – கருத்துகளை அய்யா எங்களிடம் (வேனில் புலவர் கோ.இமயவரம்பனும் நானும் சம்பந்தமும் மட்டுமே இருக்கிறோம்) என்ன சொன்னார்?

(நாளை விளக்குவோம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *