இன்றைக்கு 51 ஆண்டுகளுக்குமுன் சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் ஆற்றிய இறுதி முழக்கம் (19.12.1973)
நாளை சாகப் போகிற நான் சொல்லி விட்டுப் போகிறேன் என்ற சொல்லாடல் அந்த உரையில் வருகிறது.
அந்த உரையாற்றியது டிசம்பர் 19 – தந்தை பெரியார் முடிவு எய்தியது டிசம்பர் 24 – அதுதான் கடைசி முழக்கம் என்று தெரியாது.
அய்யா அங்கு உரை ஒலி நாடாவிலும் வந்துள்ளது.
‘‘தந்தை பெரியாரின் ‘இறுதிப் பேருரை’ (மரண சாசனம்) என்ற நூலாகவும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளி வந்தும் உள்ளது. இவ்வாண்டு 20ஆம் பதிப்பாக வெளி வந்து, இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது – வெளிநாடு வாழ் தமிழர்களின் கைகளிலும் தவழ்கிறது.
தன்னுடைய நீண்ட நெடு வாழ்வில் எந்தெந்த கருத்துகளை, இலட்சியங்களைச் சொல்லி வந்தார்களோ, அவற்றின் சுருக்கப் பிழிவாக அமைந்திருந்தது அய்யா அவர்களின் அந்த ஒன்றரை மணி நேர உரை.
மனித குலம் விஞ்ஞான ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆண் – பெண் சராசரி ஆயுளும் வளர்ந்திருக்கிறது. ஆண் – பெண் நேரிடை சேர்க்கை இல்லாமல் ஆண் விந்தையும், பெண் விந்தையும் எடுத்து குழந்தையை உற்பத்தி செய்யலாம் என்று நான் சொல்லி வந்தது. (‘குடிஅரசு’ 10.1.1938) இப்பொழுது நடைமுறைக்கு வந்து விட்டது என்று வெற்றிப் புன்னகை தவழப் பேசினார்.
(இந்தப் பொதுக் கூட்டத்திற்குத் தந்தை பெரியார் புறப்பட்டுச் சென்றபோது உடன் வந்த கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் IMPRINT ஆங்கில மாத இதழிலும் ILLUSTRATED WEEKLY OF INDIA இதழிலும் அப்பொழுது வெளிவந்த அந்த செய்தியை தந்தை பெரியாரிடம் கூறியதும் – நாம் சொன்னது நடந்து விட்டதே என்று உற்சாகத்தில் தந்தை பெரியார் பேசினார்).
இந்த ‘விஞ்ஞான உலகம்’ அமைப்பில் இந்தக் கால கட்டத்தில், இன்னும் இல்லாத கடவுளையும், மனிதர்களைப் பிளவுபடுத்தும் மதத்தையும், ஜாதிகளையும் கட்டிக் கொண்டு அழுகிறீர்களே என்று ஆவேசமாகப் பேசினார் தந்தை பெரியார்.
மதத்தின் பெயரால் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் சூத்திரர்களாக ஆக்கப்பட்டுள்ளார்களே – இன்றைக்கும் அது தானே நிலை என்ற அறிவுப் பூர்வமான ஆதாரப் பூர்வமான வினாவையும் எழுப்பினார் தந்தை பெரியார்.
1973 டிசம்பர் 8,9 தேதிகளில் சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட ‘‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை’’த் தொடர்ந்து, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திட, தந்தை பெரியார் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் தொடர்ச்சிதான் அன்றைய சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற தந்தை பெரியார் பேசிய அந்தப் பொதுக் கூட்டம்.
உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டுப் போகின்றேனே என்ற ஆதங்கமும் அதில் தொனித்தது.
அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் மதப் பாதுகாப்புப் பிரிவு இருப்பதையும் மாநாட்டிலும் சரி, அதனைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டங்களிலும் எடுத்துரைத்தார்.
இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் என்ற போரட்டத் திட்டங்களையும் சென்னை மாநாட்டில் தீர்மானம் வாயிலாக அறிவித்தார்.
ஜாதி ஒழிப்பு என்று வருகின்றபோது, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதுதான் தந்தை பெரியார்தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம்.
அந்தப் போராட்டக் களத்தில்தான் மாபெரும் போர்ப் படைத் தலைவராக நின்று இறுதி மூச்சைத் துறந்தார்.
51 ஆண்டுகள் ஓடியிருக்கலாம் அவர் போட்டுக் கொடுத்த எவராலும் அசைக்க முடியாத அந்த அஸ்திவாரத்தின் காரணமாக, அதில் வெற்றி பெற்ற நிலையில் இன்று நிற்கிறோம்.
தந்தை பெரியார் போராட்ட அறிவிப்பைக் கண்ட அவரின் அருமைச் சீடர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில் அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
ஆதிக்க சக்திகள் – பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முடக்கினார்கள்.
அதனால்தான் தந்தை பெரியார் மறைந்த நேரத்தில் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமல் புதைத்து விட்டோமே என்று கண்ணீர்க் கடிதம் எழுதினார் முதலமைச்சர் மானமிகு கலைஞர்.
காலம் கடந்தாலும் தந்தை பெரியாரின் அந்தப் போராட்டம் வென்றுள்ளது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அருமை மைந்தர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் – திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியிருக்கிறார்.
தந்தை பெரியார் உடலால் மறைந்தாலும், எந்தப் போராட் டத்தைத் தன்வாழ் நாளின் இறுதிப் போராட்டமாக அறிவித்தாரோ அந்தப் போராட்டம் வெற்றி மாலை சூடியிருக்கிறது – திராவிட மாடல் ஆட்சியில்.
தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக ‘திராவிட மாடல்’ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து வெற்றி பெற்றவர் வைக்கம் வீரர் தந்தை பெரியார் – அதன் நூற்றாண்டு விழா கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் இணைந்து நின்று நினைவுச் சின்னங்களுடன் கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் மறைந்திருக்கலாம்; ஆனால் அவரின் கொள்கைகள் – கடைசிப் பொதுக் கூட்டத்தில் அவரது முழக்கத்தில் இடம் பெற்றவை எல்லாம் அணி வகுத்து நாளும் வெற்றி பெற்று வருகின்றன.
காரணம் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் கொள்கைகள் எல்லாம், மனித உரிமை, மனிதநேயம், சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் என்ற வேரில் பழுத்தவை.
இந்தியாவையும் தாண்டி பெரியார் உலகமயமாகி வருகிறார்.
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது – மக்கள் சிந்தனையைக் கூர்தீட்டி செதுக்கிக் கொண்டே இருக்கிறது. வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!