புதுடில்லி, டிச. 18 நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசம் சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவற்றை மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் நேற்று (17.12.2024) அன்று காலை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் வாக்கெடுப்பு மூலம் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. மக்களவையில் மசோதா தாக்கல் செய்த பின் நடைபெற்ற விவாதத்தின் பொழுது நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆற்றிய
உரை:
மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.
ஒரே நேரத்தில் நாடு முழு வதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. இந்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதே திமுகவின் நிலைப்பாடு; நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்றார் திரா விட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு.
திமுக நாடாளுமன்ற தலைவர் கனிமொழி கருணாநிதி
“ஒரே நாடு ஒரே தேர்தல்” முறையால் செலவினம் குறையும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது. இது அதிபர் ஆட்சிக்கே வழி வகுக்கும். மாநில கட்சிகளை வலுவிழக்கச் செய்யும். இம்மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும். முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பக் கூட இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாம் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி.
காங்கிரஸ் எம்.பி.,மணீஷ் திவாரி
“ஒரே நாடு ஒரே தேர்தல்” சட்ட மசோ தாக்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு மீதும், ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல். மக்கள வையின் பதவிக்காலத்திற்கு ஏற்றவாறு மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை மாற்றியமைக்க முடியாது. இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
‘ஒன்று’ என்ற வார்த்தையே ஜன நாயகத்துக்கு எதிரானது தான். ‘ஒன்று’ மட்டும் இருக்கும் இடத்தில் வேறொன்று இடம்பெற முடியாது. ‘ஒன்று’ என நினைத்துக் கொள்வது அதிகாரத்தை சர்வாதி காரமாக மாற்றும். நாடாளுமன்றத்தில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை தாக்கல் செய்தது மிக மோசமானது என்றார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்.
சிபிஎம் எம்.பி.,ஜான் பிரிட்டாஸ்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா “ஒரு தலைவர் ஒரு நாடு” கருத்தின் மற்றொரு அம்சம் ஆகும். அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த மசோதா மூலம் நாட்டின் கூட்டாட்சித் தன்மையை உடைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. தைரியம் இருந்தால் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்பதை ஒன்றிய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்) சுப்ரியா சுலே எம்.பி.,
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதா கூட்டாட்சி மற்றும் அரசமைப்புச் சட்டத்தை சிதைத்து, அதிகாரத்தை மய்யப்படுத்துவதற்கான முயற்சிஆகும். மசோதா வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது மசோதாவை கூடுதல் ஆலோசனைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றார் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் (பானர்ஜி)
“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் என்பது தேர்தல் சீர்திருத்தத்துக்கான திட்டம் அல்ல, ஒற்றை மனிதனின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான திட்டம். இந்த மசோதா ஏற்கப்பட்டால், தேர்தல் ஆணை யம்தான் இந்தியாவின் எல்லா வற்றையும் தீர்மானிக்கும். “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தேர்தல் ஆணையத்துக்கு கட்டற்ற அதிகாரத்தை அளிக்கிறது. மசோதாவை ஒருபோதும் அமல்படுத்த விட மாட்டோம். அழிவு நாள் வரை இந்தியாவில் ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது என்றார் திரிணாமுல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் (பானர்ஜி).
சிவசேனா (உத்தவ்) அனில் தேசாய் எம்.பி.,
“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா நல்லதல்ல. அரசி யல் ஆதாயத்திற்காக மாநில சட்டமன்றத் திறனை சமரசம் செய்ய முடியாது. தேர்தல் நடத்தை விதிகளை உறுதிப்படுத்த தேர்தல் ஆணை யத்தின் திறனைக் கூட சரிபார்க்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா ஆபத்தானது என்றார் சிவசேனா (உத்தவ்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனில்தேசாய்.
சமாஜ்வாதி எம்.பி., தர்மேந்திரா
“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கே எதிரானது. இந்த மசோதா மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை சட்டமாக விட மாட்டோம் என்றார் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மேந்திரா.
சிரோமணி அகாலி தளம் எம்.பி.,
ஹர்சிம்ரத் கவுர் பாதல்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. மக்கள் பிரச்சினை களில் இருந்து திசைதிருப்பும் தந்திரமே இந்த மசோதா தாக்கல் ஆகும். வேலை வாய்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நலன் போன்ற பிரச்சினைகளை விட “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவின் மீது ஒன்றிய அரசு அதிக கவனம் செலுத்துவது ஆபத்தானது என்றார் சிரோமணி அகாலி தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்.
ஆம் ஆத்மி எம்.பி., குர்மீத் சிங்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. கடந்த 11 ஆண்டுக ளாக பாஜக அரசு எந்த நோக்கத்துடன் செயல்படுகிறது? என்றே புரியவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற ஒன்றிய அரசு எதையும் செய்யவில்லை. மக்களின் கோரிக்கைகள் குறித்து எதுவும் செய்யாமல், புதிய மசோதாக்களை மட்டுமே கொண்டு வருகிறார்கள்’’ என்றார் ஆம்.ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குர்மீத் சிங்.
பிஜு ஜனதா தளம் எம்.பி.,சஸ்மித் பத்ரா
“ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. மசோதா நகல் வெளியான பிறகு அதை ஆய்வு செய்து முடிவு எடுப்போம். மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யும் பொழுது உறுதியான தங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார் பிஜு ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஸ்மித் பத்ரா.