செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ச்சியால்
கோவை, டிச.17- செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) துறையின் வளா்ச்சியால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
கோவையில் தனியார் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) சிறப்பு மய்யத்தை நேற்று (16.12.2024) தொடங்கிவைத்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் ராதா ராமஸ்வாமி மற்றும் ஊழியா்களுடன் கலந்துரை யாடினார்.
அதைத் தொடா்ந்து செய்தியாளா் களிடம் அவா் கூறியதாவது:
“கடந்த ஆட்சியாளா்களால் கிடப்பில் போடப்பட்ட கோவை எல்காட் தொழில்நுட்ப பூங்கா கடந்த மாதம் திறக்கப்பட்டுள்ளது. அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று அதனை திறந்திருக்கின்றோம். தமிழ்நாடு முழுவதும் எல்காட், சிப்காட் மூலம் பல இடங்களில் நிலம் ஒதுக்கியும் கட்டடம் கட்டாமல் இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் அவற்றை ஆய்வு செய்து உடனடியாக கட்டத் தொடங்கியுள்ளோம்.
இந்தத் துறைக்கு பொறுப்பேற்ற பின்னா் மாதம் ஒரு முறையாவது வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கு நிறுவனங்களை ஈா்த்து வருகிறேன். சென்னையில் 2023-2024-இல் ஒரு கோடி சதுர அடிக்கு மேல் அய்டி நிறுவனங்கள் உருவாகி உள்ளன.
கோவையிலும் இதே அளவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குளோபல் ஃபின்சிட்டி போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு, டைடல், மினி டைடல் பூங்காக்களின் செயல்பாடும் நன்றாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட 20 ஆண்டுகளுக்கு மேலாகும். இத்துறையில் நாம் இப்போதுதான் தொடக்க நிலையில் உள்ளோம். இது தொடா்பான தகவல்களைப் பதிவேற்றம் செய்யவே இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் என்பதால், இப்போதைக்கு வேலைவாய்ப்புகளை பாதிக்காது. மாறாக அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் 90 சதவீத அளவுக்கு தமிழா்கள் இருக்கின்றனா்.
இதுவே பெங்களூருவில் 25 சதவீதம்தான் அந்த ஊா் மக்கள் உள்ளனா். திறமை வாய்ந்தவா்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கின்றனா்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இலக்கை அடைய நிறைய முதலீடுகள் தேவைப்படுகின்றன. ஒன்றிய அரசிடம் நிதி மற்றும் திறன் உள்ள நிலையில் அவா்களுடன் இணைந்து செயல்படுகிறேன்” என்றார்.