புதுடில்லி, டிச.17- டில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை ஆம் ஆதமி கட்சி நேற்று முன்தினம் (15.12.2024) வெளியிட்டது.
இறுதி வேட்பாளர் பட்டியல்
டில்லியில் வரும் பிப்ரவரி மாதம் நடை பெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலின்படி முதலமைச்சர் அதிஷி தனது கால் காஜி சட்டப் பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மேனாள் முதலமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் அமைச்சர் முகேஷ் குமார் அஹ்லாவத் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியிலும், புராரி தொகுதியில் சஞ்சிவ ஜாவும், பாத்லி தொகுதியில் அஜேஷ் (யாதவ்) மற்றும் ராஜித்தர் நகர் தொகுதியில் துர்கேஷ் பதக் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
ஓக்லா தொகுதியில் அமனத்துல்லாகானை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக களமிறக்கியுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலின்படி மேனாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா பட்பர்கஞ்சிற்கு மாற்றாக ஐங்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். அதே நேரத்தில் புதுமுகமான அவத் ஓஜா, மனிஷ் சிசோடியாவின் முத்தைய தொகுதியான பட்பர் கஞ்சில போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 சட்டப்பேரவைத் தேர்தலில் டில்லியில் உள்ள 70 இடங்களில் 62 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக புதுடில்லி தொகுதியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக டில்லி மேனாள் முதலமைச்சர் சாஹிப்சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் புதுடில்லியில் கெஜ்ரிவாலுக்கு மேலும் சவால் அளிக்கின்ற வகையில் மேனான் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் உள்பட 21 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.