புதுடில்லி, டிச.17- கூட்டுறவு கூட்டாட்சியை அழிக்க ஒன்றியத்தில் ஆளும் பாஜக கூட்டணி முயற்சிப்பதாக மக்களவையில் திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் குற்றம்சாட்டியுள்ளாா்.
மசோதா தாக்கல்
மக்களவையில் அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டதன் பவள விழாவைக் குறிக்கும் சிறப்பு விவாதத்தில் அரக் கோணம் தொகுதி தி.மு.க. உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன் (14.12.2024) பேசியதாவது:
நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் அரசமைப்புச் சட்டம்தான் தாய். அரசால் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் அரசமைப்புச் சட்டத்துக்கு இசைவாக இருக்க வேண்டும்.
ஆனால், 2014 முதல் இந்த அரசு நிறைவேற்றிய பெரும்பாலான மசோதாக்கள் சொந்த அரசமைப்பின் வழிகாட்டும் கொள்கைகளுக்கு எதிரானதாக உள்ளன.
‘மதச்சாா்பற்ற’ என்ற சொல், பாஜகவினரின் மனதில் சகிப்புத்தன்மை யற்ற உணா்வை உருவாக்கியுள்ளது.
2014 முதல், ஒரே நாடு ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே ரேசன் காா்டு, ஒரே தோ்தல், ஒரே தலைவா் என்பதை நோக்கி இந்த நாடு செல்கிறது. இது அரசமைப்புக்கு எதிரானது அல்லவா? கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்க இந்த அரசு கடுமையாக முயற்சிக்கிறது.
மாநிலங்களுக்கிடையில் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒரு முக்கிய கருவியாகும்.
சா்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளைத் தொடா்ந்து 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவா் ஆணை மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் முதலில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சில் கடந்த 26 ஆண்டுகளில் 11 முறை மட்டுமே கூடியது, ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே இக்கவுன்சில் கூடியுள்ளது.
இந்த கவுன்சில் காலம் தவறாமல் கூடினால், அது யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்கும் என்றும், அதன் உறுப்பினா்கள் அனைவருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் நமது அரசமைப்புக் கட்டமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் கூட்டுறவு கூட்டாட்சியின் உணா்வை வலுப்படுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி செய்த வளா்ச்சி காரணமாக வருவாய் ஈட்டுவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தற்போதைய அரசமைப்பு, ஆளும் அரசுக்கு அதன் ‘இந்து ராஷ்டிரா’ பகல் கனவை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
ஆகையால், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, மிகவும் சக்திவாய்ந்த உடைக்க முடியாத இரும்புச் சுவராக நாம் என்றென்றும் நிற்போம் என்றாா் ஜெகத்ரட்சகன்.