மும்பை, டிச.17 மகாராட்டிரத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்த சிவசேனை சட்ட மன்ற உறுப்பினர் நரேந்திர பாண் டேகா் கட்சிப் பதவிகளில் இருந்து விலகி யுள்ளாா்.
அதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சகன் புஜ்பலும் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளாா். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்ய இருப்பதாக அவா் கூறி யுள்ளாா். இந்த பிரச்சினை துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோருக்கு நெருக்கடி அளிப்பதாக அமைந்துள்ளது.
இது குறித்து செய்தியாளா்களைச் சந்தித்த நரேந்திர பாண்டேகா் கூறியதாவது: எனக்கு அமைச்சா் பதவி தருவதாக சிவசேனை தலைவரும், துணை முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே வாக்குறுதி அளித்திருந்தாா். அந்த அடிப்படையில்தான் கடந்த முறை சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த நான் இந்த தோ்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியில் இணைந்தேன். ஆனால், இப்போது அமைச்சா் பதவி தரப்படவில்லை.
எனவே, கிழக்கு விதா்பா பகுதியின் சிவசேனை துணைத் தலைவா், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பதவியில் இருந்து விலகிவிட்டேன். இது தொடா்பான கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டேன். அவா்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன் என்றாா்.
சகன் புஜ்பல் அதிருப்தி
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த சகன் புஜ்பலுக்கு இந்த முறை அமைச்சா் பதவி தரப்படவில்லை. 77 வயதாவதால் அவருக்கு பதவி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நாகபுரியில் செய்தியாளா்களிடம் பேசிய சகன் புஜ்பல், ‘மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்றால் அமைச்சரவையில் சோ்க்காமல் புறக்கணித்துள்ளனா். எனது தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வேன்’ என்றாா்.