இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை முத்தாய்ப்பானது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தைப்பற்றிய விவாத நேரத்தில் – இன்றைக்கு இருக்கும் ஒன்றிய பிஜேபி அரசு அரசமைப்புச் சட்டத்தை மனுதர்மம் நோக்கி இழுத்துச் செல்லும் நிலையில், இந்தவுரை சரியான பதிலடியும் – பதிவுமாகும். (இந்தியாவின் அரசியல் சட்டமாக மனுதர்மமே இருக்க வேண்டும் என்றவர் ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வாக்கர் என்பதை நினைவு கூர்வோம்.)
ராகுல்காந்தி பேசிய கருத்தின் சாரம் இதோ:
‘‘இந்திய அரசமைப்பு குறித்தும், இந்தியா எப்படி இயங்க வேண்டும் என்பது குறித்தும் பாஜகவின் சித்தாந்தவாதி சாவர்க்கரின் எண்ணங்களை மேற்கோள்காட்டி எனது உரையை தொடங்க விரும்புகிறேன். “இந்திய அரசமைப்பில் மோசமான விஷயம் என்னவென்றால், அதில் இந்தியர்களுக்கு எதுவும் இல்லை. மனுஸ்மிருதி என்பது வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்குவதற்குரியது. பண்டைய காலத்திலிருந்து நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் அடித்தளமாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த புத்தகம் நமது தேசத்தின் ஆன்மீகம் மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக இருந்து வருகிறது” என சாவர்க்கர் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் அரசமைப்பில் எதுவுமில்லை, மனுஸ்மிருதியை அடிப்படையாக கொண்டுதான் இந்தியா இயங்க வேண்டுமென சாவர்க்கர் தனது எழுத்துகள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இப்போது இதற்கு எதிராகத்தான் போராட்டம் நடந்து வருகிறது.
ஏற்ெகனவே நான் கூறியதைப் போல, மகாபாரதத்தில் நடந்தது போல, இந்தியாவில் இன்று ஓர் போர் நடக்கிறது, அதில் ஒருபக்கம் அரசமைப்பை காக்கக் கூடிய சிந்தனையுடன் நாங்கள் இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசமைப்பை காக்கக் கூடியவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், பெரியார் இருக்கிறார். கருநாடகாவில் பசவண்ணா இருக்கிறார். மகாராட்டிராவில் பூலே இருக்கிறார். குஜராத்தில் மகாத்மா காந்தி இருக்கிறார். இந்த தலைவர்களை எல்லாம் பாராட்ட நீங்கள் தயக்கம் கொள்கிறீர்கள்!
துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியது போல், அக்னி வீரர்கள் திட்டம் மூலம் நீங்கள் இந்த நாட்டின் இளைஞர்களின் கட்டை விரலை வெட்டுகிறீர்கள். மும்பையின் தாராவியை அதானிக்கு கொடுப்பதன் மூலம், சிறு வணிகர்களின் கைவிரலை நீங்கள் வெட்டுகிறீர்கள்.
விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்துகிறார்கள்.’’
ராகுல் காந்தியின் இந்தவுரை பொதுக் கூட்டப் பேச்சல்ல – நாடாளுமன்றத்தில் ஆணி அடித்து அறைந்தது போல ஆற்றப்பட்ட அரியதோர் கருத்து மிளிர்ந்த, ஆதாரம் தெறிக்கும் அரியவுரை:
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது அனைவருக்குமானது – ஹிந்துக்களில் ஒரு சாரார் மட்டும் கோயிலைச் சுற்றி நடக்கலாம்; அதே ஹிந்து மதத்தை வேறுசிலர் அந்த வீதிகளில் நடக்க உரிமை கிடையாது என்றிருந்த நிலையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் எழுச்சிப் போராட்டம் நடத்தித்தான் மனித உரிமை வெற்றி சங்கநாதம் ஒலித்தது.
ராகுல் காந்தி இந்த சந்தர்ப்பத்தில் தந்தை பெரியாரை நாடாளுமன்றத்தில் நினைவூட்டியது மிகவும் பொருத்தமானது.
அதேபோல கருநாடகத்தில் பசவண்ணா, மகாராட்டிரத்தில் ஜோதிபா பூலே போன்றவர்களின் சீர்திருத்த முற்போக்கு எண்ணங்களை எடுத்துக்காட்டி – இவர்களின் உன்னதத் தத்துவங்களுக்கு எதிரான சாவர்க்கரின் சிந்தனைகளை நோக்கி அரசமைப்புச் சட்டத்தை இழுத்துச் செல்வது, வளர்ச்சிச் சக்கரத்தைப் பின்னோக்கித் தள்ளுவதாகும்.
ராகுல் காந்தி அகில இந்திய அளவில் மதவாதத்தின் விஷமப் போக்கைப் புரிந்து கொண்டு சமூகநீதி, மதச் சார்பின்மைப் போர்வாளைத் தூக்கிச் சுழற்றுகிறார்.
இவர் கையைப் பற்றிக் கொள்ளட்டும் வாக்குச் சீட்டைக் கையில் வைத்திருக்கும் நாட்டு மக்கள்!