நாகாலம்மன் கோயில் நகைகள் திருட்டு!
அரக்கோணம், டிச. 17- அரக்கோணம் அருகே நாகாலம்மன் நகர் பகுதியில் சிறீசக்தி நாகாலம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பக்தர்கள் அவ்வப்போது காணிக்கையாக செலுத்திய சிறு, சிறு தங்கம், வெள்ளி நகைகளைக் கோயில் நிர்வாகத்தினர் உருக்கி நகையாகச் செய்துள்ளனர். இதில், அய்ம்பது கிராம் வெள்ளி சரடுடன், ஒன்றரை பவுன் தாலியைச் செய்து அம்மனுக்கு அணிவித்து இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 14.12.204 அன்று இரவு பூஜை முடிந்தபிறகு பூசாரி மற்றும் கோயில் நிர்வாகத்தி னர் பூட்டிவிட்டுச் சென்றனர். காலையில் வழக்கம் போல் கோயிலைக் திறக்க பூசாரி வந்தபோது, கோயிலின் நுழைவு வாயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து கோயில் நிர்வாகத்தினர் வந்து கண்காணிப்புக் கேமரா பதிவினை பார்த்தனர்.
இதில், நள்ளிரவு கோயிலுக்குள் நுழைந்த நபர்கள் அம்மனுக்கு அணி வித்திருந்த சரடு மற்றும் வெள்ளி நகைகளைக் எடுத்துச்சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
சோளிங்கர் மலைக் கோயிலுக்கு வந்த பக்தர் மரணம்!
சோளிங்கர், டிச. 17- சென்னை வண்ணை நகரைச் சேர்ந்தவர் பாண்டியன், வயது 65. இவர் கடந்த 15.12.2024 காலை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலை மீது உள்ள யோக நரசிம்மரை வணங்க வந்தார். வணங்குவதற்குப் படிக்கட்டு வழியாக மலை மீது ஏறிச் சென்றார். ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்தபோது, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்து சென்ற கொண்டப் பாளையம் காவல் துறை யினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரி வித்தனர்.