அட அண்டப்புளுகு ஆசாமிகளே! “தாஜ்மகாலை கட்டிய கலைஞர்களின் கைகள் துண்டிப்பாம்!”

viduthalai
2 Min Read

உத்தரப்பிரதேச முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை

மும்பை, டிச.16 அயோத்தி ராமர் கோயிலின் கைவினைஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும், தாஜ் மகாலைக் கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகவும் உ.பி. முதலமைச்சர் சர்ச்சைக் கருத்தை வெளி யிட்டுள்ளார்.

மகாராட்டிராவின் தலைநகரான மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெறுகிறது. டிசம்பர் 13 தொடங்கிய கருத்தரங்கில் கலந்துகொண்டு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

அப்போது அவர் தாஜ்மகால் மற்றும் ராமர் கோயில் கைவினைஞர்களை ஒப்பிட்டு தனது உரையில் பேசிய தாவது: இன்று இந்தியாவில் பாஜக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு மதிப் பளிக்கப்படுகிறது. அனைத்துவகையானப் பாதுகாப்பும் அவர்களுக்கு அரசால் அளிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதில் பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோயிலை கட்டிய கைவினை ஞர்கள் மீது மலர்களை தூவி கவுரவப் படுத்தினார். ஆனால், ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. அதேபோல், மிகவும் உயரியவகை துணிகளை நெய்தவர்களின் கைகளும் அக்கால ஆட்சியாளர்களால் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக இன்று அந்தவகை பாரம்பரியமிக்கக் கலாச்சாரத் துணிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர்
யோகிக்கு மறுப்பு

முதலமைச்சர் யோகி கூறியதை போல் தாஜ்மகாலின் கைவினை ஞர்கள் கைகளை யாரும் துண்டித்ததாக வரலாறு இல்லை என மறுப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து முகலாயர்கள் மீதான வரலாற்று ஆய்விற்கு உலகப் புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைகழக வரலாற்றுதுறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அப்சல் கான் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேராசிரியர அப்சல் கான் கூறும்போது, ‘தாஜ்மகாலை கட்டிய கலைஞர்கள் அடுத்து மேலும் பல கட்டடடங்களை டில்லி, ஆக்ரா பகுதிகளில் கட்டினார்கள். அவர்களது கைகள் வெட்டப்பட்டிருந்தது உண்மை யானால் இது எப்படி சாத்தியம் என யோசிக்க வேண்டும். மாறாக, அந்த முக்கிய பல கைவினைஞர்களுக்கு தன் அரசவையில் பல பதவிகளை அளித்து மகிழ்ந்தார் மன்னர் ஷாஜஹான்.

தாஜ்மகாலை கட்டிய சுமார் 20,000 பேர்களில் இந்துக்களும் இடம்பெற்றிருந்தனர். முக்கியமானக் கைவினைஞர்களின் பெயர்கள் தாஜ்மகாலின் கட்டடங்களிலும் சித்திர எழுத்துகளால் (கேலியோகிராபி) எழுதப் பட்டிருப்பதை இன்றும் காணலாம். இதுபோல், முஸ்லிம்களுக்கு எதிராக எதையாவது உளறிக் கொட் டுவதே முதலமைச்சர் யோகி போன்றவர்களுக்கு வேலையாகி விட்டது. அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதே ஹிந்துத்துவா தலைவர்களின் வழக்கம் என்பது அனை வரும் அறிந்ததே.’ எனத் தெரிவித்தார்.

இதே பிரச்சினை குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஆக்ராவின் மூத்த ஆங்கில பத்திரிகையாளரான பிரிஜ் கண்டல்வால் கூறும்போது, ‘தாஜ்மகாலின் முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக இங்குள்ள சிலர் கைகள் துண்டிக்கப்பட்டதாகவும், கோயில் இடித்து கட்டப்பட்டதாகவும் கதைகளை அவிழ்த்து விடுவது வழக்கமாக உள்ளது. இன்றும் தொடரும் இதுபோன்ற பல தகவல்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. தாஜ்மகாலை பற்றி அதிகம் எழுதிய ஆக்ராவின் வரலாற்றாளரான பேராசிரியர் ராம்நாத் தன் ஆய்வு நூல்கள் எதிலும் இதை குறிப்பிடவில்லை.’ எனத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *