புதுடில்லி, டிச.16 ”முன்னாள் பிரத மர்கள் நேரு, இந்திராவை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு, தனது ஆட்சியில் என்ன செய்தோம் என்பதைப் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும்,” என காங்கிரஸ் கூறியுள்ளது.
நாட்டின் அரசமைப்பு ஏற்கப்பட்டதன், 75ஆவது ஆண்டையொட்டி, மக்களவையில் இரண்டு நாள் விவாதம் நடந்தன. நடக்க உள்ளன. மாநிலங்களவையில் இன்றும், நாளையும் பல கட்சித் தலைவர்கள் பேசியதற்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு மணி நேரம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: அரசமைப்பு பதவிகள் மதிக்கப்படுவதில்லை. தினமும் அரசமைப்பு மீறப்படுகிறது. நேரு, இந்திரா பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு, தனது ஆட்சியில் என்ன சாதனை செய்தோம் என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். எத்தனை முறை, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்தார். எத்தனை முறை அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி உள்ளார் என்பது பற்றிக் கூற வேண்டும். ஒன்றிய அரசின் தோல்வி மற்றும் சவால்களை மறைக்க மேனாள் பிரதமர் நேருவை மோடி விமர்சனம் செய்கிறார். மாநிலங்களவை நாளை இயங்க ஆளும்கட்சியினர் அனுமதிப்பார்கள் என நம்புகிறோம். அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் ராஜ்யசபா செயல்படுவதில்லை. அங்கு எதிர்க்கட்சி தலைவரை பேச ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் அனுமதிப்பது கிடையாது. முதல்முறையாக, எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து, எந்த விதிகளின் அடிப்படையில் நீங்கள் பேசுகிறீர்கள் என அவைத்தலைவர் கேட்கிறார். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.