அய்தராபாத், டிச.16- தெலங் கானாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கடந்த மாதம் (நவ. 6) தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஜாதிவாரிக் கணக் கெடுப்பு பணிகள் 98 சதவிகிதம் நிறைவுற்றுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.
அய்தராபாத்தில் சமூக நிகழ்ச்சி யொன்றில் அவர் பேசியதாவது: “தெலங்கானாவில் சமுதாய நலப் பரிசோதனையாக இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அமையும்.
இதன்மூலம், திரட்டப்பட்டுள்ள தரவுகள் ஆளும் காங்கிரஸ் அரசால் பஞ்சாயத்து, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் குருமா சமூகத்தினரின் மக்கள்தொகைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்க வழிவகை செய்யும்” என்றார். மேலும், பட்டியலினப் பிரிவில்(எஸ்சி) உள்ள உள்பிரிவுகள் குறித்த விவகாரத்தில் அமைச்சர் என். உத்தம் குமார் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம், மடிகா சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். அந்த சமூகத்தைச் சேர்ந்தோருக்கு மாநில அரசு நிறுவனங்களில் உயர் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.