தி.மு.க.வை ஒழிக்க நினைக்கும் ஸநாதன சக்திகள் என்னை பயன்படுத்தப் பார்க்கிறார்கள், அது நடக்காது! தொல்.திருமாவளவன்

viduthalai
2 Min Read

கும்பகோணம், டிச. 16- கும்ப கோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “ஸநாதன அமைப்புகள் திமுக கூட்டணியை பிரிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் குறி நான் அல்ல. திமுகதான்.அவர்களின் எண்ணம் நிறைவேற இடம் கொடுக்க மாட்டோம்.” என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா திமுக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு சர்ச்சையானது. இதற்கு கண்டனங்கள் வலுத்த காரணத்தால், அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனாலும் ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சிப்பதை நிறுத்தவில்லை. “திமுக அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.” என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ செயல் திட்டம் இருப்பது போல தோன்றுகிறது.” என விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “கடந்த ஏழு ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கிறோம்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தக் கூட்டணியை விட்டு விலகவே மாட்டோம். திமுக கூட்டணியில் இருந்து எங்களைப் பிரிப்பதற்காக ஸநாதன அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. அது எந்தக் காலத்திலும் நடக்காது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுவோம்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. என்னை விமர்சிப்பவர்களின் உண்மையான குறி திருமாவளவன் இல்லை. திமுகவுக்கு தான் உண்மையான குறி வைக்கிறார்கள். திமுகவை ஒழித்துவிட வேண்டும் என்று நினைக்கும் சக்திகள் என்னை ஒரு தூதாக பயன்படுத்தி அதை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்று தீவிரமாக நினைக்கிறார்கள்.

ஒரு கூட்டணியை உருவாக்கி ஏழு தேர்தலில் வெற்றி பெற்றதை பொறுக்க முடியவில்லை. ஏதோ அழுத்தம், மிரட்டல், அச்சுறுத்தல் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னுடன் இருக்கும் பலருக்கு என் பண்புகள் தெரியும். எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது. இதை ஏன் திருமாவளவன் மீண்டும், மீண்டும் சொல்கிறார் என சிலர் கேட்கிறார்கள். அதை சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

அவர்கள் என் நம்பகத்தன்மை மீது கல் வீசுகிறார்கள். திருமாவளவன் ஏதோ அரசியல் செய்கிறார் என்கிறார்கள். எங்களுக்கு அந்த அரசியல் செய்ய தெரியாது. அது தேவையும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்துவிட்டு மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக எங்கள் மீது சந்தேகம் எழுப்புகிறார்கள். என்னை நம்பி என்னுடன் பயணிக்கும் விசிக தோழர்களுக்காக இதை நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மற்றபடி திமுகவுக்காகவோ, அதிமுகவுக்காகவோ, வேறு அரசியல் கட்சிகளுக்காகவோ இதை சொல்லவில்லை.

விடுதலை சிறுத்தைகள் எப்போதும் ஸநாதனத்துக்கு எதிராக தான் இருப்போம். எங்கள் நலன் கருதி திராவிடத்துக்கு எதிரான சக்திகளுக்கு இந்த மண்ணில் எந்தச் சூழலிலும் இடம் கொடுக்க மாட்டோம்.
அதனால் எங்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொள்கிற வலிமை விசிகவுக்கு உண்டு. எவ்வளவு இடர்கள் வந்தாலும் அதைத் தாங்கி தாக்குப் பிடித்துக் கொண்டு வலிமையோடு பயணிப்போம்.” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *