புதுடில்லி, டிச.16 விஹெச்பி நிகழ்ச்சியில் பங்கேற்று அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமார் பேசியது சா்ச்சையான நிலையில், அதுதொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முன் அவா் விரைவில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளார். முன்னதாக, அவருடைய பேச்சு தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்குமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில், விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி)அமைப்பின் சட்டம் மற்றும் உயா்நீதிமன்றப் பிரிவு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமார், ‘நமது நாடு ஹிந்துஸ்தான் என்று கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இந்த நாடு பெரும்பான்மை சமூகத்தின் விருப்பப்படிதான் செயல்படும். இதுவே சட்டம். பெரும்பான்மை சமூகத்தின் நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் எது பயனளிக்கிறதோ, அது மட்டுமே ஏற்கப்படும். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் பெண்கள் தெய்வங்களாக போற்றப்பட்டுள்ளனா். அப்படி இருக்கும்போது 4 பெண்களைத் திருமணம் செய்யவும், முத்தலாக், நிக்கா ஹலாலா முறைகளை கடைப்பிடிக்கவும் உரிமை கோர முடியாது. நாடும், நாட்டு மக்களும் ஒன்று என்பது உண்மையானால், ஏன் அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்கக் கூடாது? பொது சிவில் சட்டம் விரைவில் அமலுக்கு வந்து உண்மையாகும்’ என்றார்.
அவரின் பேச்சு சா்ச் சையாகியுள்ள நிலையில், அவா் வெறுப்புணா்வுடன் பேசியிருப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. வழக்குரைஞா்கள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இவருடைய பேச்சு தொடா்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தி அடிப்படையில், அதுதொடா்பான அறிக்கை சமா்ப்பிக்க அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி அறிவுறுத்தியது.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமார் யாதவ், உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முன்பு விரைவில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் கூறுகையில், ‘எந்தவொரு சா்ச்சைக்குரிய விவகாரத்திலும் ஒரு நீதிபதி மீது உயா்நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்ற கொலீஜியம் தரப்பில் அறிக்கை கோரப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட நீதிபதி கொலீஜியத்தின் முன் ஆஜராகி தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். அதன்படி, உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முன் விரைவில் ஆஜராகுமாறு உயா்நீதிமன்ற நீதிபதி சேகா்குமார் கேட்டுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது’ என்றனா்.