ரோஹதக், டிச.16 பஞ்சாபில் 20 நாள்களாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவா் ஜகஜித் சிங் தலேவாலை, மாநில காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) கவுரவ் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சக இயக்குநா் மயங்க் மிஸ்ரா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினா்.
பஞ்சாப் மாநிலம் கநவுரியில் கடந்த நவம்பா் 26-ஆம் தேதி முதல் தொடா் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலேவாலை ஒன்றிய மற்றும் பஞ்சாப் மாநில அரசு அதி காரிகள் சந்தித்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்; உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வெள் ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை நேற்று (15.12.2024) அதிகாரிகள் சந்தித்தனா்.
தலேவாலுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கவுரவ் பேசியதாவது: தலேவாலின் உடல் நிலை குறித்து விசாரிக்கவே இங்கு வந்துள்ளோம். அவருடைய கோரிக் கைகளை கேட்டறிந்தோம். அமைதியான முறையில் அவா் மேற்கொள்ளும் உண் ணாநிலை போராட்டம் அனைவராலும் பாராட்டப்படுகிறது. அரசும் அவரது போராட்டத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
தயார் நிலையில் ஆம்புலன்ஸ்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவரை சந்தித்து மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் உடைய ஆம்புலன்ஸும் இங்கே கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவா்கள் வல்லுநர்கள் குழுவும் தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
விரைவில் தீா்வு: விவசாயிகளின் நலன் மீது மாநில அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த விவகாரத்துக்கு விரைவில் தீா்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார்.
அதன்பிறகு பேசிய மிஸ்ரா, ‘உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று இங்கு வந்துள்ளேன். வேறு எந்த வாக்குறுதியும் நான் அளிக்கவில்லை’ என்றார்.
சிகிச்சைக்கு மறுப்பு: கவுரவ் மற்றும் மயங்க் மிஸ்ராவிடம் தலேவால் பேசியது குறித்து விவசாய சங்கங்களின் தலைவா்களில் ஒருவரான அபிமன்யு கொஹா் செய்தியாளா்களிடம் கூறு கையில், ‘தன் உடல்நலத்தின் மீது ஒன்றிய அரசுக்கு அக்கறை இருந்தால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். அதுவரை சிகிச்சை மேற்கொள்ளப்போவதில்லை என தலேவால் கூறினார்’ என்றார்.
ஷம்பு எல்லையில்…: வேளாண் பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-அரியாணா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். தங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி 101 விவசாயிகள் டில்லி நோக்கி கடந்த டிசம்பா் 6, 8 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பேரணியாக செல்ல முயற்சித்தனா். அவா்களை கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் இரும்புத் தடுப்புகள் அமைத்தும் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
18-ஆம் தேதி விசாரணை: கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் காவல் துறை தாக்கியதில் 18 விவசாயிகள் படுகாயமடைந்ததால் போராட்டத்தை தற்காலிமாக நிறுத்திவைப்பதாக விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.
விவசாயிகள் போராட்டம் குறித்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் டிசம்பா் 18-ஆம் தேதி அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறவுள்ளதாக அம் பாலா துணை காவல் ஆணையா் பா்த் குப்தா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.