ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சம் இருக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பார்ப்பனர்களில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மேலாண்மை மற்றும் வெளிநாட்டு இந்தியர் பிரிவில் இருந்து மருத்துவ நிபுணத்துவ இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இந்த இடங்களுக்கான கல்விக் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.90 லட்சத்திற்கும் மேல் வரை உள்ளது. இந்த நிலையில் ரூ.ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் கொடுக்கும் பெரும் செல்வந்தர்கள் எப்படி உயர்ஜாதியினருக்கான பொருளாதார நலிந்த இட ஒதுக்கீடு சான்றிதழைப் பெற்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நவம்பர் 20 அன்று முதுகலை பட்டயப் படிப்பு இடங்கள் முதல் சுற்று ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. மொத்தம் 24,600 இடங்கள் ஒதுக்கப்பட்ட இந்தச் சுற்றில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மேலாண்மைப் பிரிவில் 135 இடங்கள் உயர்ஜாதியினருக்கான பொருளாதார நலிந்த இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டுவாழ் இந்தியர் இடங்களையும் பார்ப்பன மாணவர்கள் பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள லட்சுமி நாராயண மருத்துவக் கல்லூரியில் முதுகலை அறுவைச் சிகிச்சை எம்.எஸ். ஆர்த்தோபெடிக்ஸ் இடங்கள் – இதன் பாடப்பிரிவு கட்டணம் 1.6 கோடி ரூபாய் – ஒரு உயர்ஜாதியினருக்கான பொருளாதார நலிந்த பிரிவு இட ஒதுக்கீடு மாணவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மைசூரில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எம்.டி. ரேடியோலஜி இடமும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் ஆண்டு கட்டணம் 91 லட்சம் ரூபாய் ஆகும், மேலும் இதில் முழுப் படிப்பிற்கும் ரூ.2.7 கோடி ரூபாய் வருகிறது.
இது தொடர்பாக நீட் தேர்வு எழுதும் மாணவரான அமன் கவுசிக் ஆய்வு ஒன்றை நடத்தினார். அதில் நீட் பிஜி தேர்வில் பங்கேற்ற பல எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளில், போலியான உயர்ஜாதியினருக்கான பொருளாதார நலிந்த இட ஒதுக்கீடு சான்றிதழைப் பயன்படுத் தும் மாணவர்கள் அதிகம் உள்ளதாக கண்டு பிடித்துள்ளார்
“கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளில் உயர்ஜாதியினருக்கான பொருளாதார நலிந்த இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்ந்திருப்பதும் – அவர்களுக்கு எளிதில் வங்கிகள் கல்விக்கடன் அளிப்பதும் சட்ட விரோதமாகும். ஆகவே இவர்களுக்கான இடங்களை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றும் அமன் கவுசிக் கூறினார்.
கல்வி இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலைக் கொண்டு வந்ததே முதல் தப்பு.
அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் 15(4) கொண்டு வரப்பட்டபோது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்றுதான் அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது.
பொருளாதார அளவுகோலையும் அதில் இணைக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது வாக்கெடுப்பில் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன.
உண்மை இவ்வாறு இருக்க, பொருளாதாரத்தில் நலிவடைந்த பார்ப்பனர்களுக்கு 10 விழுக் காடு என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான தாகும்.
பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இடஒதுக்கீடு (EWS) என்ற சட்டத்தைப் பயன் படுத்தி (103ஆவது திருத்தம்). பொருளாதாரத்தில் செழித்த பார்ப்பனர்கள், பொய்ச் சான்றிதழ்களைப் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றிருப்பதைப் பார்த்த பிறகும், கையும் களவுமாகப் பிடிபட்டதற்குப் பின்பும் இடபிள்யூஎஸ் (EWS) என்பதை நீக்குவது தான் சமூகநீதிக்கான நியாயமாக இருக்க முடியும்.
சமூக நீதியின் கருத்தைக் கொல்லைப் புறம் வழியாக நெரித்துக் கொல்லுகிறார்கள் – எச்சரிக்கை!