புதுடில்லி, டிச.15- நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நேற்று முன்தினம் (13.12.2024) நிகழ்த்தினார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற கூட்டத்தொடரில் மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி முதல்முறையாக உரையாற்றினார்.
அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை யொட்டி அதுகுறித்தான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி பேசியதாவது:
நமது அரசமைப்புச் சட்டம் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைத் திருக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம். அது நீதி, ஒற்றுமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கவசம். ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த பாதுகாப்புக் கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.
நேரடி நியமனம், தனியார் மயமாக்கலால் இடஒதுக்கீடு முறையை வலுவிழக்கச் செய்கின்றனர். கடந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் இந்நேரம் அரசமைப்புச் சட்டத்தை மாற்றியிருக்கும். கடந்த தேர்தலுக்குப் பின்னர்தான் அதனை மாற்ற வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
அருமையான பேச்சு.. பிரியங்காவைப் பாராட்டிய ராகுல்!
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் தலைவரும், பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் கூறியது,
பாராட்டு
எனது முதல் உரையை விட மிகவும் சிறப்பாக இருந்தது என்று பிரியங்கா உரையை பாராட்டியுள்ளார்.
மக்களவையில் பிரியங்கா காந்தியின் முதல் உரை அதிரடியாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி கடந்த 2004இல் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.