எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கும் காலம் இக்காலம். வெறுமனே தமிழ் உணர்வு மிகுதியால் இந்த முழக்கத்தை ஆதரிப்பவர் அல்லர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தமிழை அறிவியல் மனப்பான்மையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர், தமிழ் அறிவியல் தமிழாக வளர வேண்டும் என்று சொல்பவர்.
ஆசிரியரின் தமிழ் மீதான பற்றுக்கு குறள் தான் முதன்மையான ஒன்றாகிறது , ஏனெனில்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்ற வள்ளுவரின் வாக்கை மேடைதோறும் முழங்குபவர் வெறும் மனிதர்கள் மட்டும் சமம் என்று சொல்லிவிட்டு போகாமல் இந்த உலகின் எல்லா உயிர்களும் சமம் என்று பேசியது குறள்.
வள்ளுவரின் பார்வை அறிவியல் பார்வை , தந்தை பெரியாரும் மானுட விடுதலைக்காக , யார் பாதிக்கப்பட்டாலும் அவர் பக்கம் நிற்பேன் ,ஆதிக்கத்திற்கு எதிராக போரிடுவேன் என்றதும் அறிவியல் பார்வை, ஆசிரியரும் பெரியாரும் ஏன் வள்ளுவரோடு ஒத்துப்போகிறார்கள் என்றால் திருக்குறள் உயிர்மை நேயம் பேசியது, பெரியார் பேசியதும் உலக நேயம் ,உயிர்மை நேயம் , நம் ஆசிரியர் பேசுவதும் அந்த உயரிய நோக்கமே.
திருக்குறளை இந்திய அரசமைப்பு சட்டத்தோடு இணைத்து பேசும் ஆற்றல் கொண்டவர் அரசமைப்பு சட்ட உறுப்பு 14 – சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்கிறது, ஏற்றத்தாழ்வு எனும் பேச்சுக்கோ, உயர்ந்தோர்- தாழ்ந்தோர் , பாலின வேற்றுமைக்கோ இடமில்லை என அரசியல் சட்டம் சொல்வதையே திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது என்பதை தெளிவாக குறிப்பிடுவார்.
ஆசிரியர் அடிக்கடி சொல்லும் குறள் இது
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்- திருவள்ளுவர்.
தன் வீட்டையும், நாட்டையும் மேன்மை அடைய செய்ய விழைபவர் தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ,பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைந்துவிடும் எனும் குறளின் பொருளையும் சொல்வார் தமது தொண்டர்களுக்கு.
தமிழ்நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் எனும் உத்வேகத்தை அடிக்கடி கோடிட்டு காட்டுபவர் ஆசிரியர்.
கடல்போலச் செந்தமிழை பெருக்க வேண்டும் என்று தமிழின் வளர்ச்சிக்காக பேசும் ஆசிரியரின் இலட்சியம் ஜாதி வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் காண்பதே.
எனவேதான் அவர் அடிக்கடி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ஜாதிக்கு எதிரான பாடல்களான
“பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை – இந்தப்
பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை”
மாந்தரில் சாதி வகுப்பது சரியா?
மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?
“வேதம் உணர்ந்தவன் அந்தணன் – இந்த
மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் – மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் – மிக
நாதியற்று வேலைகள் செய்தே – முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன்
சூத்திரன் என்றே – சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் – இவை
அன்றியும் பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம்”
“தீண்டாமை என்னும் ஒருபேய் – இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் – எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் – செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்”
“சாதிப்பிரிவு செய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி-சகியே
நீதிகள் சொன்னாரடி”
மேற்கண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடல்களை அடி பிறழாமல் மேடை தோறும் முழங்கி அவற்றிர்கு விளக்கமும் சொல்வார் ஆசிரியர் குறிப்பாக நாத்திறம் அற்றிருந்தவன் – வாதாடும் திறமையற்றவன்,
நாதியற்ற – உதவி இல்லாதவர், மேதினி என்றால் உலகம் என்றும் பொருள் கூறுவார், கேட்பவர்களுக்கு தான் சொல்லும் செய்தியின், கவிதையின், கட்டுரையின் கருப்பொருள் புரிய வேண்டும் எனும் அதீத அக்கறையுடன் ஒரு கல்லூரி பேராசிரியர் போல பாடம் எடுக்கும் நல்வழக்கம் ஆசிரியருக்கு உண்டு. அதனால் எம் போன்ற மாணவர்கள் பெறும் பலன் அதிகமுண்டு.
ஆசிரியர் சங்க இலக்கியத்தில் பெரும் புலமை மிக்கவர் என்பதை யாவரும் அறிந்ததே.
தமிழ் நாட்டின் கல்வி பொருளாதார மேம்பாட்டை சுட்டிக்காட்ட ஒருமுறை இப்படி சொன்னார் ஆசிரியர் “தென்னாடுடைய திராவிடமே போற்றி” எனத்தான் பாட வேண்டும் என்றார் , ஏனெனில், திருவாசகம் அறிந்தவர் தானே ஆசிரியர், அந்த திருவாசகம் தானே , அதை எழுதிய மாணிக்க வாசகர் தானே பின்வருமாறு சமூக ஒற்றுமைக்காக பாடுகிறார்.
” சாதி, குலம் , பிறப்பு எனும் சுழிபட்டு தடுமாறும் ஆதம் இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதை குணம் ! பிறர் உருவம்! யான் எனது எனும் உரை மாய்த்து கோதுஇல் அமுது குலாவுதில்லை கண்டேன்”.
எனும் மாணிக்க வாசகர் – ஜாதி என்பது நால்வகை வருணம் மூலம் மனிதர்களுக்குள் தோன்றிய பல பிரிவுகள்; குலம், ஜாதியின் உட்பிரிவுகள்; பிறப்பு என்பது, தொன்று தொட்டு வரும் குடும்பப் பெருமை. சில ஜாதியுள் வரும் ‘குடி’ அல்லது ‘கோத்திரம்’ என்பதும் இதுவே. இச்சுழலில் அகப்பட்ட உயிர், ஜாதியைத் தன் அடையாளமாக நினைத்துத் தடுமாறுகின்றது; ஜாதிச்சுழலில் சிக்கி, வீண்பெருமையில், மனிதன் வீழ்கிறான் இதை, ‘சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்’, விலங்காகப் பிறந்த உயிர்களுக்குச் ஜாதி-குலம்-பிறப்பு என்ற தடுமாற்றமில்லை.
மனிதன்
உடல் தோன்றிய குடும்பத்தின் அடிப்படையில், உயிருக்கு ஜாதி, குலம், பிறப்பு என்னும் அடையாளங்கள் ஏற்றப்படுகின்றன. பிறப்புக்குமுன்னும், பின்னும், உயிர்களுக்கு இவ்வடையாளங்கள் இல்லை; ‘ஜாதி-குலம்-பிறப்பு’ அடையாளமிட்ட உடல்களைவிட்டு உயிர்கள் நீங்கியதும், எல்லா உடல்களுக்கும் பெயர் ‘பிணம்’தான்; பின் அவை புதைக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ அழிக்கப்படுகின்றன. இதை உணராமல், ஜாதி-குலம்-பிறப்பு, நான், எனது என்ற சுழியில் அகப்பட்டு மயங்கி நிற்கின்றனர் மனிதர்கள்.
ஜாதி மயக்கம் தெளிவித்து, பிறவித்துன்பங்கள் நீக்கி, நான் யார்? என் பிறப்பு யாது என்ற பகுத்தறிவால் இயற்கையை உணரும் ஆற்றல் வருகிறது; இயற்கை என்பது யாது என அறிய அடையவிடாமல் ஜாதி தடுக்கிறது. மனிதன் ஜாதி-மத மயக்கத்தால் விலங்கினும் கீழ்நிலையடைகிறான் எனும் மாணிக்க வாசகரது திருவாசகத்தையும் அறிந்து அதில் உள்ள நற்செய்திகளை நமக்கு எடுத்து சொல்லும் பேறாற்றல் மிக்கவர் தானே ஆசிரியர் .
எனவே, ஜாதி ஒழித்திடல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று என்று தமிழ் மீது தீராக்காதலுடன் பயணிக்கும் ஆசிரியர் நீடு வாழ்க தமிழுக்கு தொடர் தொண்டாற்றிட நீடு வாழ்க!