ஸ்தலஸ்தாபனங்களாகிய லோகல்போர்டுகள் தற்காலம் பெரும்பாலும் பிராமணரல்லாதார் கைக்கே வந்து விட்டபடியால் இதைக் கைப்பற்ற சில பிராமணர்கள் தமிழ் நாட்டில் சுயராஜ்யக்கட்சியை ஆதாரமாக வைத்துக் கொண்டு பிரயத்தனப் படுகிறார்கள். ஒத்துழையாமையின் போது பெயர் தெரியாதவர்கள் எல்லாம் இப்பொழுது பெரிய காங்கிரஸ் வாதிகளாய் விளங்குகிறார்கள். ஆங்காங்கு சாதாரண ஜனங்களை ஏமாற்றிவருகிறார்கள். அதற்கு, அவர்களுக்கு சில பிராமணப்பத்திரிகைகள் பெரிதும் உதவியாய் இருக்கின்றன. அதாவது பிராமணரல்லாத சேர்மென்களுடையவோ, தாலூகாபோர்டு டிஸ்ட்டிரிக்ட் போர்டு பிரசிடெண் டுகளுடையவோ நிர்வாகங்களைச் சதா சர்வகாலம் பழி கூறிக்கொண்டிருப்பதையே தங்கள் நோக்கமாகவைத்துக்கொண்டு, ஆங்காங்கு அதற் கேற்றாற்போல் பிராமண நிருபர்களை வைத்து உண்மையற்றதும் விஷமத்தனமானதுமான நிருபங் களை எழுதி அனுப்பச் செய்வதும். அவற்றைச் சில சமயங்களில் பத்திராதிபர் குறிப்புகளுடன் பிரசுரிப்பதுமான இழிகுணத்தைக் கொஞ்சநாளாக விடாமல் பிரமாணப்பத்திரிகைகளிடம் பார்த்து வருகிறோம். இதெல்லாம் பிராமண ரல்லாத காங்கிரஸ் செல்வாக்குள்ள பிரமுகர்கள் தொண் டர்கள். இவர்களைப் பற்றியும் இதே முறையை அனுசரித்து அவர்கள் செல்வாக்கைக் குறைப்பதே அவர்கள் தொழிலாய்க் கொண்டு இருக்கிறார்கள்.
பிராமண பத்திரிகை
இதற்கு உதாரணமாய் எத்தனையோ முனிசிபா லிட்டி, தாலுகா ஜில்லா போர்டுகள் இந்த பிராமணப் பத்திரிகைகளைக் கண்டித்தும் இழிவாய் தீர்மானங்கள் கொண்டு வருவதையும், அதில் உள்ள ஒன்று இரண்டு பிராமணர்கள் பத்திரிகைகளுக்கு வக்காலத்துப் போல் பேசியோ, கெஞ்சியோ தப்பித்துக் கொண்டு வந்திருக்கின்றனர். சிறீமான் வாரதராஜுலு நாயுடு முதலியவர்களைப் பற்றியும் பொய்யான ரிப்போர்ட்டுகள் செய்து வந்ததையும் எவ்வளவு கண்டித்தும் வெட்கித்து வருந்தாமல் மறுபடியும் அதே மாதிரி காரியத்தைச் செய்துவருகின்றன.
சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி முதலிய ஸ்தலஸ்தாப னங்களும் இவர்கள் நடத்துவதைபற்றிக் குறை கூறிக் கொண்டு வந்திருக்கின்றன. இப்பொழுதும் கூறுகின்றன.
வெளியில் உள்ள ஜனங்கள் வர்த்தமானப் பத்திரிகை களைப்பார்த்தே விடயங்களை அறிகிறவர்கள் ஆனதால் இப்பத்திரிகைகளின் கருத்தையும் சூழ்ச்சிகளையும் அறியாமல் நம்பி விடுகிறார்கள். நம் தமிழ்நாட்டில் தமிழர்களில் எத்தனையோ யோக்கியர்கள் விவேகிகள் கெட்டிக்காரர்கள் இருந்தாலும் அவர்கள் பொது ஜனங்களுக்குத் தெரியக்கூடாதவர்களாய் இருக்கிறார்கள். அதன் காரணம் தமிழர்களுக்குச் செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை ‘காந்தியாருக்கே தமிழ் நாட்டில் தமிழர்களின் முக்கிய யோக்கியதை தெரிய வேண்டுமனால் ஒரு பிராமணனைக் கொண்டோ, பிராமணப்பத்திரிகையைக் கொண்டோ தான் தெரிந்துகொள்ள வேண்டும்’ மகாத்மா தமிழ்நாட்டைப் பற்றிக்கொள்ளும் அபிப்பிராயம் அவரது சொந்த அபிப்பிராயமல்ல. ஒரு தமிழ்நாட்டுப் பிரமாணர் அபிப்பிராயம் மகாத்மாவின் வாயால் வெளியாகிறது. இது போலவே தமிழர்களின் யோக்கியதைத் தமிழ் நாட்டினர்க்கே தெரிய வேண்டுமானால் பிராமணப் பத்திரிகையின் மூலமாய்த் தான் அறிய வேண்டியிருக்கிறது.
ஜஸ்டிஸ் – திராவிடன்
இதைவிடத்தமிழர்களுக்கு வேறு இழிவு வேண்டியதேயில்லை. 100-க்கு 90-க்கு மேல்பட்ட ஜனத்தொகையுள்ள கூட்டத்தாருக்குத் தங்கள் நாட்டில் தங்களைப்பற்றி தங்கள் சமூகத்தாரே அறிந்துகொள்ள ஒரு சாதனம் இல்லை யென்றால் இதைப்பற்றி என்ன நினைப்பது? ஆனாலும் இதைக்கொஞ்ச காலத்திற்கு முன்னர் நமது ஜனங்களில் சிலர் அறிந்தே இதற்கும் பரிகாரம்தேடுவதன் பொருட்டாய் ஜஸ்டிஸ், திராவிடன், என்றுஇரண்டு பத்திரிகைகள் ஆரம்பித்தார்கள் அவை சுயநல பத்திரிகைகள் என்று சில பிராமணப்பத்திரிகைகள் சூழ்ச்சியாய் எழுதியும், பத்திரிகைகளினால் பெரிய மனிதர் ஆக வேண்டும் என்கிற ஆசையுள்ள சிலரைக் கொண்டும் அப்போதுதான் ராஜீயத்துறையில் வந்தவர்களையும் ஆயுதமாய் உபயோகப்படுத்திப் பேசவும் எழுதவும்செய்தும், அவற்றிற்கு செல்வாக் கில்லாமல் அடித்துப்போட்டார்கள். ஆனால் அந்தப் பத்திரிகைகளின் நோக்கங்களும் தேச விடுதலைக்கு இடையூறாயிருப்பதாகவே காணப்பட்டன. இந்த பிராமணப் பத்திரிகை செய்யாத காரியம் எதை ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ செய்கின்றன? இந்த பிராம ணப் பத்திரிகையின் கூட்டத்தார் ஜாதியார் செய்யாத எந்தக்காரியத்தை ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ பத்திரிகையின் கூட்டத்தார் ஜாதியார் செய்து விட்டார்கள்? இவைகள் தங்கள் பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் உத்தி யோகம் சம்பாதிக்க மறை முகமாய் பாடுபட்டிருந்தால் அவைகள் தங்களுக்கும் தங்கள் இனத்தாருக்கும் உத்தியோகம் சம்பாதிக்க வெளிப்படையாய்ப் பாடுபட்டிருக்கும் சுய நலப்பத்திரிகையென்றால், என்ன சுயநலம் யாருக்காகச் சுயநலம் என்பதை பொது மக்கள் கவனிப்பதற்கில்லாமலே தந்திரங்கள் செய்யப் பட்டுப்போய் விட்டது. பட்டம் பதவி உத்தியோகம் யார் வாங்கவில்லை? எந்த ஜாதியில் இல்லை? எந்தப் பத்திரிகைக்காரர் இந்த ராஜ்யத்தில் பதவி பெற வில்லை?
முனிசிபல் கவுன்சிலர் ஒரு பதவியல்லவா? சட்டசபை அங்கம் ஒரு பதவியல்லவா? சர்க்கார் பணத்தில் சீமைக்குப் போவது பதவியல்லவா? ரைட் ஆனர பிள் பட்டம், சர் என்பது ராவ்பகதூர், திவான் பகதூர், கவுன்சில்மெம்பர் இவையெல்லாம் எந்த ஜாதியில் இல்லை? ஜஸ்டிஸ் கட்சியில் பிராமணரல் லாதார் மாத்திரம் என்ன கெடுதி செய்துவிட்டார்கள்? ஜனங்களிடம் வாங்கும் பதவிக்கும் சர்க்காரில் வாங்கும் பதவிக்கும் இப்பொழுது என்ன வித்தியாச மிருக்கிறது? இருவரும் சாதிப்பதில் ஜனங்களுக்கு என்ன நன்மை உண்டாயிருக்கிறது?
கட்டுப்பாடாய் சில பிராமணப்பத்திரிகைகளும் அதன் நிருபர்களும் செய்யும் விஷமப்பிரசாரம் தானே தமிழர்களுக்கு இவ்வளவு கஷ்டத்தை உண்டாக்குகிறது! இதனை சிறீமான்கள் நாயக்கரும் நாயுடுவும் பல தடவை பலகாங்கிரஸ்சங்கங்களில் சொல்லியிருக்கிறார்கள். தமிழர்களுக்கு தமிழர் நலத்தைக்கோரி ஒற்றுமை எண்ணமும் ஒரு கட்டுப்பாடும் ஏன் உண்டாக்கக் கூடாது தமிழர்களுக்குள் சுயநலமும் பொறாமையுமிருந்தால் அது உள்ளவரை என்றென்றும் தலையெடுக்கவிடாது. ஒரு தினசரிப்பத்திரிகை இவ்வளவு பெரிய கூட்டத் தாருக்கு இல்லாதது பெரியகுறைவல்லவா?
புதிதாக உண்டாக்காவிட்டாலும் இருப்பதையாவது எல்லாரும் ஆதரிக்க வேண்டாமா? பத்திரிகையின் போக்கு அதாவது பொது ஜனப்போக்குக்கு விரோதமா யிருக்குமானால் அதை ஏன் திருத்தக்கூடாது? சுயராஜ்யக் கட்சியின் அக்கிரமங்களை ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் அதை ஒப்புக்கொண்டு நாம் எல்லோரும் அதில்போய்ச் சேர்ந்து நமது வசப்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார். அதேமாதிரி ஜஸ்டிஸ் கட்சியின் போக்கு இவர்களுக்குப் பிடிக்கவில்லையானால் எல்லோரும் அதில் சேர்ந்து அதை கைவசப்படுத்திக்கொண்டு காங்கிரஸ் கொள்கையை அதில் புகுத்துவது தானே. காங்கிரசில் உண்மையான ஒத்துழையாமை இருந்தகாலத்தில் ஜஸ்டிஸ் கட்சியும் மத வாதக் கட்சியும் அதற்கு விரோத மாய்த்தான் இருந்தன. ஆனால் பிராமண தினசரிப்பத்திரிகைகள் ஒத்துழை யாமைக்கு அனுகூலமாயிருந்தனவா? இன்னும் சாராயத்தை மாகாஜனங்கள் வாங்கிக் குடிக்கவிளம்பரம் செய்தும் வரவில்லையா?
இதைவிட என்ன யோக்கியதை பத்திரம் வேண்டும்? தற்போதைய காங்கிரசின் கொள்கை ராட்டினம், தீண்டாமை ஒழித்தல் இந்த இரண்டுதானே? இவற்றை ஜஸ்டிஸ் கட்சியில் புகுத்துவதற்கு என்ன கஷ்டம்? எதற்கு தன் சூழ்ச்சியினால் செல் வாக்கு இருக்கிறதோ, அதில் சேர்ந்து பெரியவர்களாக விளம்பரப்படுத்திக் கொள்ள, தாம் பிழைக்க தமிழர்களில் சில ராஜீயவாதிகள், பிரமுகர்களாகப் பார்க்கிறார்களே அல்லாமல் சத்தியத்திற்கோ பிறர்நலத்திற்கோ பாடுபடுவ தானால் மனம் ஒருப்படுவது அவர்களுக்கு கஷ்டமாயிருக்கிறது.
உலகம் வேஷத்திற்கும், விளம்பரத்திற்குமே இடம் கொடுத்துவந்து விட்டது. பாமரஜனங்களை ஏமாற்றிச் சுயநலமும் கீர்த்தியும் அடைவதே வாழ்நாளின் முக்கிய கொள்கையாய் போய்விட்டது. கிராமஜனங்களே, ஆங்கிலம்படிக்காத ஜனங்களே, உண்மைத் தமிழர்களே கண்விழித்துப் பாருங்கள் ஒன்று கூடுங்கள். உங்கள் நலத்துக்குத்தலைவர்கள் இல்லை. தலைவர்கள் வாழ்வுக்கும் கீர்த்திக்கும் நீங்கள் இருக்கிறீர்கள். எழுங்கள்.
– குடிஅரசு – கட்டுரை – 02.08.1925