சென்னை, டிச.13 ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மசோதா
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை. மாநிலங்களின் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும். இந்தியாவே எழுக! இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மகளிர் நலத்திட்டங்கள்
குடும்ப வருமான உச்சவரம்பு
ரூ.1.20 லட்சமாக உயர்வு
சென்னை, டிச.13 மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங் களுக்கு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி சமூக நலத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயசிறீ முரளிதரன் வெளி யிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
குடும்ப வருமானம்
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படும்’ என அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக சமூக நலத்துறை ஆணையர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் சமூக நலத்துறையின் கீழ் வழங்கப்படும் ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்களில் உள்ளுரைவோர்களின் சேர்க்கை திட்டம் ஆகியவற்றுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பாக ரூ.72 ஆயிரம் உள்ளது.
இதேபோல் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, இணை உறுப்பினர் அனுமதி மற்றும் தையல் பயிற்சிகளில் சேர்க்கை திட்டத்துக்கு ஆண்டு வருமான உச்சவரம்பாக ரூ.60 ஆயிரம் உள்ளது. இத்திட்டங்களில் வருமான உச்சவரம்பை உயர்த்துவதன் மூலம் அதிகளவிலான மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள். எனவே மேற்கண்ட 5 திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
ரூ.1.20 லட்சமாக உயர்வு
இதையடுத்து சமூக நலத்துறை ஆணையரின் கருத்துருவை நன்கு பரிசீலனை செய்த அரசு, அதை ஏற்றுக்கொண்டு சமூக நலத்துறையின் கீழ் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட 5 திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு
இந்தியாவில் சென்னை, கோவை உள்பட பல நகரங்களில், மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ‘டீம் லீஸ் எட்-டெக்’ நிறுவனத் தின் புள்ளிவிவரங்களின்படி, டில்லி மற்றும் சென்னையில் அதிகபட்சமாக மருத்துவப் பணியாளர்களை வேலைக்கு சேர்க்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த துறையில் 47% நிறுவனங்கள், டெலி ஹெல்த் மற்றும் நோய் தடுப்பு சேவைகளின் முன்னேற்றம் காரணமாக அதிக வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன.