தந்தை பெரியாரின் அய்ரோப்பியப் பயணம் (13.12.1931)
பண்டிதர். திருஞானசம்பந்தர் எழுதியது
அன்பர்களே!
நமது தலைவர் ஈ.வெ.இராமசாமியார் அவர்கள் அய்ரோப்பா கண்டத்திற்குக் கடந்த 13-12-1931 இரவு, பிரஞ்சு கப்பலில் சென்ற செய்தி பத்திரிகைகள் வாயிலாக அன்பர்கள் அறிவீர்கள். அவர்கள் தமது உடல்நிலையை சிறிதும் கவனியாது தனது நாட்டின் ஏழைமக்கள் நலனை நாடியே சென்றுள்ளார். மேல்நாட்டிற்குச் செல்லும் நமது நாட்டுத் தலைவர்களோ, காங்கிரஸ் தலைவர்களோ பிரயாணம் ஆறுமாதமிருக்கும் பொழுதே, செலவின் ஆடம்பரப் பல்லவிகளைப் பாடுவார்கள்; அவர்கள் பத்திரிகைகளும் ஒற்றையாடையுடனும், ஆட்டுப் பாலுடனும், கடலைப்பருப்புடனும் போகிறார் என்று ஒன் றைப் பத்தாக்கிப் பாமர மக்களை மயக்கி ஜே! போட்டுத் தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொள்வார்கள்.
சுயமரியாதைத் தலைவரோ! தனது மனைவியையும் பாராது. அவரது வயது சென்ற தாயையும் பாராது, மற்றுமுள்ள உற்றார்களையும் கவனியாது சென்றனர் என்றால் அவரது திறனை என்னென்று கூறுவது! கப்பலில் முதல் இரண்டு முதலிய வகுப்பில் செல்வதற்கேற்ற செல்வநலனிருந்தும், மூன்றாவது வகுப்பிலும் செல்லாது உணவிற்கும், உடைக்கும் கதியற்ற ஏழைமக்கள் செல்லும் நான்காவது டெக்கில் பிரயாணம் செய்தனரென்றால் அவரது உண்மைத் தியாகத்தை தேசபக்தியை எவ்வாறு எழுதுவது; அல்லது எந்த மகாத்மா வரிசையில் வைத்து எண்ணுவது.
சுய நலங்கருதிய அழுக்கர்களே
புறங்கூறவும், பொறாமை கொண்டு தூற்றவும் செய்வர்
யான், நமது பெரியாரைக் கப்பலில் ஏறிச்சென்றபோது அவர் நான்காவது டெக்கில் புழுதி நிறைந்த இடத்தில், நாற்றங்கள் வீசுகின்ற இடத்தில், விகாரமான நாகரீகமற்ற பாமர மக்களுடன் வீற்றிருந்த காட்சி பகைவர்களும் கண்கலங்குவரென்றால் மற்றும் யாது வரைவது நமது தலைவர் மற்றைய தலைவர்களைப்போல், முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் செல்வதற்கேற்ற மிக்க செல்வநலன் உடையவராயிருந்தும் ஏழைமக்கள் பிரயாண நிலைமையை அறிய வேண்டுமென்றும், அவர்களுடன் அவர்கள் கஷ்டங்களைத் தானுமனுபவித்தால்தான் தேசமக்கள் நிலைமையைத் தானுமறிவதோடு, பிறரும் பின்பற்றச் செய்யக்கூடுமென்னும் தியாக புத்தியில் அவ்வாறு செல்ல எண்ணங்கொண்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது. அவர் பிரயாணத்தை அவருடன் மாறுபட்டவர்களும், அவர் உண்மைத் தியாகத்தை நன்கறிவர். அவர்பால் சுய நலங்கருதிய அழுக்கர்களே புறங்கூறவும், பொறாமை கொண்டு தூற்றவும் செய்வர்.
தமிழ்நாட்டில் சமயப் பைத்தியங்கொண்டவர்களும், ஜாதித் திமிர் பிடித்தவர்களும், கட்சி மாறும், கொள்கைமாறும் பச்சோந்திகளும், போலி வேடங்கொண்ட தேசியப் புலிகளும் பலவாறு பிதற்றவும் செய்வர். இதன் உண்மையுணர்ந்த நமது நாட்டினர் நன்கறிவர். நாட்டை மயக்கும் காலம் மலையேறிவிட்டது என்பதை போலித் தேசிய வீரர்கள் உணராதிருப்பது வருந்தத் தக்கதேயாகும். இதைப் பற்றி உண்மைச் சுயமரியாதை விரும்பும் யாவரும் ஒரு பொருளாக நினையார். ஆதலால் இதனை விட்டுவிடும்படி நமது தமிழ் நாட்டினர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
‘குடிஅரசு’ 27.12.1931