சீர்திருத்தவாதிகளின் வரிசையில் முதன்மையான இடத்தில் உள்ளவர் தந்தை பெரியார்!
சென்னை, டிச.13 ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்’ என்று பெரியார் நினைவகம் திறப்பு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில், நேற்று (12.12.2024) நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெரியார் நினைவகம், நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவுக்கு தலைமையேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது:
சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’ என்று அழைப்பதுபோல், தமிழ்நாடு மக்கள் ஈ.வெ.ராவை ‘பெரியார்’ என்று அழைக்கின்றனர். ‘பெரிய’ ஆள் என்ற சொல்தான் பெரியாராக மாறியது. சுதந்திரம் மற்றும் சமூக சீர்திருத்த சிந்தனையாளரான பெரியார், உழைப்பாளி வர்க்கத்தினர், கம்யூனிஸ்ட் அமைப்பினருடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார். எம்.சிங்காரவேலு, ப.ஜீவானந்தம் ஆகியோருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார்.
ஜாதி, மத, நிற வேறுபாடுகளை ஒழிப்பதற்கான போராட்டம்!
கடந்த 1952 இல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு பெரியாரின் பங்களிப்பு நாம் அனைவரும் அறிந்த விடயம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவானபோது, பொலிட்பீரோ உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட பி.ராமமூர்த்தியின் திருமணத்துக்கு தலைமை தாங்கியது பெரியார்தான். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பெரியாருக்கும் நெருங்கிய தோழமை இருந்தது. அவர் தனது சீர்திருத்தக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகத்தான் ‘குடிஅரசு’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். கடந்த 1970 இல் திராவிடர் கழகத்தால் தொடங்கப்பட்ட ‘உண்மை’ என்ற பத்திரிகையில், பெரியார், ‘ஜனநாயக நாட்டில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாரும் இல்லை, அனைவரும் சமமே’ என்று எழுதினார். ஜாதி, மத, நிற வேறுபாடுகளை ஒழிப்பதற்கான போராட்டமே ‘வைக்கம் போராட்டம்’. அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ‘சமதர்மம்’ என்று பெரியார் முழங்கினார்.
ஒரு நாட்டின் பிரச்சினையாகக் கருதி போராடியவர்கள்!
வைக்கம் கோயிலின் சுற்றுப்பாதை தடை விலக்கப்பட்டது மலையாள மக்களுக்கு மட்டுமே. ஆனால், இதை மலையாள மக்களுக்கான, திருவிதாங்கூருக்கான பிரச்சினையாகக் கருதாமல் ஒரு நாட்டின் பிரச்சினையாகக் கருதி போராடியவர்கள் பெரியார் மற்றும் இதர போராட்டவாதிகள். தேசத் தலைவர்கள் மற்றும் சீக்கியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
சகோதரத்துவம், ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டாக…
எனவே, எல்லை தாண்டிய சகோதரத்துவமும், ஒத்துழைப்பும் இந்தப் போராட்டத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த மனநிலைமையை கேரளாவும், தமிழ்நாடும் இன்றும் தொடர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டின் பிரச்சினையில் கேரளாவும், கேரளாவின் பிரச்சினையில் தமிழ்நாடும் ஒன்றுக்கொன்று கைத்தாங்கலாக செயல்படுகிறது. சகோதரத்துவம், ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்த மாநிலங்கள் உள்ளன. இதை பிற மாநிலங்கள் பின்பற்றினாலும், தனிப்பட்ட சுயமரியாதையும் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்நாடும், கேரளாவும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன. இதை மேலும் வலிமையுடன் கொண்டுசெல்ல இரு மாநிலங்களாலும் முடியும்.
இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.