சட்டமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்
கடந்த காலங்களில் ஒன்றிய அரசின்
19 விழுக்காடு நிதி குறைப்பால்
சென்னை, டிச.12- தமிழ் நாடு சட்டப் பேரவையில் 10.12.2024 அன்று 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசியதாவது:
சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பொறுத்தவரையில் மாநில அரசுக்கு 50 விழுக்காடு, ஒன்றிய அரசுக்கு 50 விழுக்காடு என நிதி பகிரப்படுகிறது. 15ஆவது நிதிக்குழுவானது ஒன்றிய அரசு தொகுப்பில் இருந்து 41 விழுக்காடு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும் 41 விழுக்காடு நமக்கு கிடைத்து இருக்கிறதா என்றால் அது இல்லை. அது 33 விழுக்காடு என்ற அளவிலே இருந்துள்ளது. அந்த 33 விழுக்காட்டில் தமிழ்நாட்டுக்கு கிடைத்து இருப்பது வெறும் 4.07 விழுக்காடுதான். ஆனால் அதேநேரத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு 17.9 விழுக்காடு, பீகாருக்கு 10 விழுக்காடு கிடைத்துள்ளது.
ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 16.83 விழுக்காடு என்ற அளவில் வசூலிக்கக்கூடிய மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணமானது மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படாத ஒரு நிலை இருக்கிறது.
எனவேதான், அண்மையில் சென்னை வந்த 16ஆவது நிதிக்குழுவில் முதலமைச்சர் இதுதொடர்பாக அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியுள்ளார். ஒன்றிய அரசில் இருந்து பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதியில் இருந்து குறைந்தபட்சமாக 50 விழுக்காடு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கு ஒரு உச்சவரம்பு வர வேண்டும். 10 விழுக்காட்டுக்கு மட்டும் அவர்கள் வசூலிக்கக்கூடிய ஒரு செயல்முறையைக் கொண்டு வரவேண்டும். அதற்கு மேலாக அவர்கள் வசூலித்தால் நிச்சயமாக அந்த கூடுதல் தொகை பகிர்ந்தளிக்கக்கூடிய தொகுப்பில் கொண்டு வர வேண்டுமென்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, நமக்கு 9ஆவது நிதிக்குழுவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறது. குறிப்பாக 14ஆவது நிதிக் குழு காலத்தில், கடந்த காலங்களில் சுமார் 19 விழுக்காடு நமக்கு நிதி குறைப்பு நடந்திருக்கிறது. இது, சுமார் ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நமது கடன் அளவில் 32 விழுக்காடு இருக்கக்கூடியது. கடந்த கால நிதிக் குழுவினுடைய பரிந்துரைகள்தான் தமிழ்நாட்டுக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமது நிதி மேலாண்மையின் காரணமாக கடன் சுமைகளை குறைக்கும் முயற்சிகளை செய்து வருகிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர்
இலங்கை சிறையில் இருந்து விடுதலை
ராமேசுவரம், டிச. 12- இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர். கடந்த நவ.9இல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 23 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஊர்காவல்துறை நீதிமன்றம், இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் மீண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 20 மீனவர்களை விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 3 பேருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தது. முன்னதாக 22.06.2024 அன்று ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை கைப்பற்றி, அதிலிருந்த 7 மீனவர்களில், விசைப்படகு ஓட்டுநர் காளீஸ்வரன் என்பவருக்கு மட்டும் ஓராண்டு, சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
காளீஸ்வரனின் சிறை தண்டனையையும், அபராதத்தையும் ரத்து செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் சார்பாக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நவம்பர் 7இல் அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட 21 தமிழ்நாடு மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 9.12.2024 அன்று இரவு சென்னை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்களை மீன்வளத்துறையினர் தனி வாகனங்கள் மூலம் 10.12.2024 அன்று காலை ராமேசுவரம் அழைத்து வந்தனர்.
தொழில் முனைவோர்களுக்கான
செயல்திட்ட அறிக்கை வெளியீடு
சென்னை, டிச.12- தொழில்துறை வளர்ச்சியில் வரவிருக்கும் ஆண்டில் கவனிக்கக்கூடிய பங்குகள், அடிப்படை விற்பனைப் பொருள்கள் மற்றும் பணமதிப்பு குறித்த 2025ஆம் ஆண்டிற்கான சந்தைக் கண்ணோட்ட அறிக்கையை கோடக் செக்யுரிட்டீஸ் லிமிடெட் வெளியிட்டுள்ளது.
அதில் நடப்பு ஆண்டு 2024இல் இன்று வரை துறைகளில் முதன்மை வகிப்பவை ரியல் எஸ்டேட் கூடுதலாக 31 விழுக்காடு, மருத்துவத்துறை 30 விழுக்காடு, மின்சார உற்பத்தி 26 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. நிதியாண்டு 2025இன் இரண்டாவது காலாண்டு முடிவில் வங்கிகள் மற்றும் மூலதனப் பொருள்களில் சிறப்பான செயல்பாடுகளுடன் ஒட்டுமொத்த வளர்ச்சியை பலவீனமாகவே காட்டுகிறது.
2025ஆம் ஆண்டில் பங்குச் சந்தை அதிக வேகத்தைப் பெறுவதையும், அடிப்படை விற்பனைப் பொருள்கள் அவற்றின் வரலாற்றில் சிறந்த விலையைக் கடக்கும் என்று நாங்கள் எதிர்நோக்குகிறோம். அத்துடன், ஆரம்பத்திலேயே நல்ல லாபம் பெறுவதற்காக பங்குச் சந்தையில் நுழையும் தொழில் முனைவோர்கள் மற்றும் இளம் முதலீட்டாளர்களின் அதிகரிப்பும் ஒட்டுமொத்த சந்தை வளர்ச்சியையும் உயர்த்தும் என இந்நிறுவன மேலாண் இயக்குநர் சிறீபால் ஷா தெரிவித்துள்ளார்.