புதுடில்லி, டிச.12 மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறுகையில்,
1952 முதல் 67ஆவது அரசியல் சாசன பிரிவின் கீழ் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. மாநிலங்களவை தலைவரின் செயல்பாடுகள் அந்தப் பதவியின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. அனுபவம் வாய்ந்த தலைவரை பேசவிடாமல் தடுக்கிறார். ஆளுங்கட்சிக்குப் பேச வாய்ப் பளிக்கிறார். அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பள்ளி தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார். அவையில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்.
இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மாநிலங்களவை தலைவர் செயல்படுகிறார். மாநிலங்களவை தலைவரால் தான் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் நேற்று (11.12.2024) நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட
இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும்
இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
புதுடில்லி, டிச. 12 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்குமாறு, இலங்கை அரசிடம் இந்தியா வலி யுறுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, நடப்பாண்டில் 537 இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை மீன்வளம் மற்றும் பெருங்கடல் வளத் துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகா், இணையமைச்சா் ரத்ன கமகே ஆகியோரை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா கொழும்பில் நேற்று (11.12.2024) சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விரைந்து விடுவிக்க வேண்டும்; இப்பிரச்சினைக்கு தீா்வுகாண மனிதாபிமான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை அவசியம் என்று சந்தோஷ் ஜா வலியுறுத்தினார்.
மேலும், வடக்கு மாகாண மக்கள் நலனில் இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டிய அவா், மீன்வளத் துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்ததாக இந்திய தூதரகத்தின் எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவி ருக்கும் நிலையில், மேற்கண்ட சந்திப்பு நடை பெற்றுள்ளது.
முன்னதாக, இலங்கை அதிபா் திசநாயகவுடன் சந்தோஷ் ஜா கடந்த மாதம் ஆலோசனை மேற் கொண்டார். அப்போது, மீனவர் பிரச்னைக்கு நீண்ட கால தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினர்.