ஈப்போ (மலேசியா), டிச. 12- மலேசியா பேராக் மாநிலம் ஈப்போ மாநகரில் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவு விழா மாநகரின் மத்தியில் அமைந்துள்ள தமிழர் உணவகத்தில் மேல் மாடியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஈப்போ பெரியார் தொண்டர்கள், மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பு, ஏற்பாட்டில் பேரா மாநில பெரியார் பாசறை திராவிடர் கழகம் தமிழர் தன்மான இயக்கம் ஆகிய அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக ஈப்போ மா இலட்சுமணன், உறுப் பினர்களாக விந்தை குமரன், தா பரமசிவம், மு மணிமாறன், தா. சி .முனி அரசன், முனைவர் முகோவிந்தசாமி ஆகியோர் உரை யாற்றினார்கள்.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தமிழர் சீர்திருத்த சங்கத்தின் மாநாட்டை தந்தை பெரியார் அவர்கள் திறந்து வைத்து ஊரை நிகழ்த்திய செய்தி இங்கு விரிவாக பேசப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் வழி பெரியாரின் பிரச்சாரத்தின் வழி யாகவும் மலைநாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியும் அதன் விளைவாக ஏற்பட்ட பல்வேறு பயன்களும் எடுத்துரைக்கப்பட்டன. அறிஞர் அண்ணாவின் நினைவாக இந்த மாநகரில் ஒரு பாலத்திற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
நமது இயக்கத்தின் வழி இந்த நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு திருக்குறள் தமிழ் இலக்கணம் தவறு இன்றி தமிழ் எழுதுதல் போன்ற நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வருவது பற்றியும் எதிர்காலத்தில் கலைஞரின் குறள் ஓவியம் , ஆங்கில இலக்கணம் ஆகிய நூல்கள் வழங்கப்படும் என்று இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.. இனி வரும் காலங்களில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா ஈப்போ மாநகரில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது..
சுமார் 30 பெரியார் தொண்டர் களுக்கு அவர்கள் ஆற்றிய சுய மரியாதைப் பணிகளுக்காக ஆசிரியர் கி வீரமணி அவர்களின் கையெழுத்துடன் கூடிய விருதுகள், பெரியாரின் நூல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் விருந்து அளித்து சிறப்பிக்கப்பட்டது.
அடுத்ததாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சுயமரியாத இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு விழா விரைவில் நடைபெறும்.