நண்பர் வீட்டில் ஒரு மரணம். 16ஆம் நாள் காரியம். வருகைதந்தோர் குறைவு. சாப்பாடு மீதமாகிவிட்டது.
ஏழைகளுக்கு வழங்கலாம் என எடுத்துச் சென் றோம் அவர்கள் கேட்ட முதல் கேள்வி “தீட்டு சோறா?!” என்பதே!!
சோறு தீட்டுப்படுமா??
தமிழ் அகராதிகள் தீட்டு என்ற சொல்லுக்கு அசுத்தம் அசுரணம் என விளக்கம் தந்துள்ளன.
வழிபாட்டு மரபுகள்
ஆனால் உணவு குறித்தான திராவிட சமுதாய வரலாறு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. உணவு தொடர்பான பழக்க வழக்கங்கள், உணவை அடிப்படையாகக் கொண்ட சடங்குகள், வழிபாட்டு மரபுகள் என்பவையெல்லாம் முன்னோர்கள் “உணவு வளம் தருவார்கள்” என்ற நம்பிக்கையின் வெளிப் பாடுகளாக இருந்துள்ளன.
அப்படி இருக்கையில் தீட்டு என்ற மூடப்பழக்கம் எவ்வாறாக தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு அடையாளமாக மாறியது என்பதை வரலாற்று ரீதியாக பார்க்கிற போது, 17 ஆம் நூற்றாண்டு வாக்கில் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நீலகண்ட தீட்சிதரும், தஞ்சாவூர் மராட்டிய மன்னன் இரண்டாம் சாஜியின் அரசவை பண்டிதர் இராம பத்திர தீட்சிதரும் முக்கிய பங்கு ஆற்றி உள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
ஏனெனில் இந்நூற்றாண்டில் வெளிவந்த ‘ச்ராத்த காண்டம்’ இதற்கு கட்டியம் கூறுகிறது.
காஞ்சி பெரிய சங்கராச்சாரியாரின் முன்னுரையுடன் துவங்கும் இந்நூலில் தொகுப்பு ஆசிரியர் குறிப்பிட் டுள்ள செய்தி மிக முக்கியமானது.
“இந்தக் (ச்ராத்த காண்டம்) க்ரந்தத்தை எழுதி உபகரித்த ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் ‘த்ராவிட தேசத்தை’
( தமிழக ஆளுநர் கவனிப்பாராக!)
சேர்ந்தவர் என்பதில் இத்தேச வைதிக ஸமூஹத் தினர் பெருமைப்படுவார்கள். திருக்குடந்தை நாச்சியார் கோவில் ஷேத்திரத்திற்க்கு அருகில் உள்ள கண்ட்ரமாணிக்கம் என்ற அக்ரஹாரத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது” என அக்னி ஹோத்ரம் கோபால தேசிகாசார்யர் தெரிவிக்கிறார் ( நூலை தொகுத்து வெளியிட்டவர்).
நூலின் 248ஆவது பக்கத்தில் இறந்தவர் வீட்டில் உணவை வெளியில் வழங்குவது குறித்த சடங்கை எழுதியுள்ளார்கள்.
“பிரேத பிண்டத்தை வெளியில் கொடுக்கவும் தர்ப்ப மந்த்ரங்கள் இல்லாமல், அது உபநயனமாகாதவருக்கு பூமியில் பிண்டத்தைக் கொடுக்கவும். உபநீதர்களுக்குத் தர்ப்பங்களில் கொடுக்கவும் என்று ப்ரசேத ஸ்ம்ருதியில் இருப்பதால்”
மூட நம்பிக்கை
என பிறப்பு இறப்பு குறித்த பார்ப்பன மற்றும் பிற வர்ணங்களுக்கும் மதச் சடங்குகளை விரிவாக எடுத்து கூறும் இந்நூல் இருபதாவது பக்கத்தில் “ஷத்ரிய- வைச்யாதி வர்ண தர்மங்களையும் விஸ்தாரமாகச் சொல்லுவது போல் நான்காம் வர்ணமான சூத்ர ஜாதி தர்மங்களையும் ஆங்காங்கே விவரித்து கூறியுள்ளது. சூத்ரவர்ணமானது வேதோக்தமான சாதுர் வர்ண்யத்தின் நான்காவது பிரிவு. அது வைதிக வர்ணம். அந்த வர்ணத்திற்கான தர்மங்களை நமது ச்ருதி ஸ்ம்ருதிகள் நிர்ணயித்து கூறியுள்ளன. அந்த வர்ணம் சேராமல் சதுர்வர்ண்யம் பூர்த்தியாகாது.” என்றும் இந்த நூல் விவரிக்கிறது.
இந்தப் பார்ப்பனர்களின் ஆச்சார மூடநம்பிக்கை விலங்குகளை உடைத்தெறியும் தந்தை பெரியாரின் கலகக்குரல்,
“ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், உடல், உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பெற்றுள்ளதே. உடல் உருவம் இல்லாத ஒன்றுக்கு நாம் பார்ப்பனரிடம் தரும் அரிசி, பருப்பு, செருப்பு, துடைப்பம் ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அநுபவிக்க முடியும்.”
வைதீக மதப்படி தீட்டு என்பது வர்ணாசிரம தீண்டாமையோடு கட்டப்பட்டுள்ள கோர முகமாக காட்சியளிக்கிறது!
நூல் உதவி: 1.சங்ககால உணவும் சமுதாய மாற்றமும்
2.ச்ராத்த காண்டம்
– பெரியார் குயில், தாராபுரம்.