திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபம் வரும் 13ஆம் தேதி.
அன்றைய நாள் அய்ந்தே முக்கால் அடி உயரமும் 300 கிலோ எடையும் உள்ள கொப்பரையில் 4500 கிலோ நெய் மற்றும் 1100 மீட்டர் காடா துணியைத் திரியாக வைத்து, 50 கிலோ கற்பூரத்தையும் சேர்த்து எரிய விடுவதுதான் திருவண்ணாமலை கார்த்திகைத் தீப விழா!
இந்த மத மூடத்தனம் எப்படியோ இருந்து தொலையட்டும்!
இதில் 4,500 கிலோ நெய்யும், 1100 மீட்டர் துணியும் எரிந்து நாசமாவதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்த நேரத்தில் 10 ஆண்டுகளுக்குமுன் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று நினைவிற்கு வந்து தொலைகிறது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த முத்துரத்தினம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியது என்ன?
‘‘நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் உள்ள பகவதி மாரியம்மன் இளையாண்டி அம்மன் கோயில் இந்து அற நிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து வருகிறோம்.
இந்த நிலையில் ஆடி மாதத் திருவிழாவை யொட்டி வருகிற 27.4.2014 அன்று பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று கோயிலுக்குள் உள்ள அம்மன் சிலைகளுக்குப் பாலாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
அவ்வாறு செல்லும்போது எங்களைக் கோயி லுக்குள் செல்ல விடாமல் தடுக்க வாய்ப்புள்ளது. இதனால் பாலாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு, இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தோம். அவர்கள் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.
எனவே எங்களைக் கோயிலுக்குள் அனுமதித்து பாலாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் பூமிராஜன், கண்ணப்பன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறிய தாவது:
‘நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான உணவு, தங்கும் இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளம் குழந்தைகள் பலர் பால் போன்ற சத்தான உணவுகள் கிடைக்காமல் உள்ளனர். பால் ஒரு அத்தியாவசியமான உணவுப் பொருள் என்பதை மனுதாரரும் அவருடைய கிராமத்தினரும் நன்கு அறிவர்.
இதுபோன்ற அத்தியாவசிய உணவுப் பொருளை இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள், ஆதரவற்றவர்களுக்கு வழங்கி, அவர்களது பசியைப் போக்கலாம் என்பதை மனுதாரர் அறிய வேண்டும். மனுதாரர் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்’ என்று மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர் (ஆதாரம்: ‘மாலைமலர்’ 26.2.2014).
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி சத்துள்ள பால் போன்ற உணவுப் பொருள்கள் அபிஷேகம் என்ற பெயரில் பாழாகக் கூடாது என்றால் திருவண் ணாமலைக் கோயிலில் கார்த்திகைத் தீபம் என்ற பெயரில் 4,500 கிலோ நெய்யைத் தீ மூட்டி எரிய வைப்பதற்குப் பயன்படுத்துவது சரிதானா – நியாய மானதுதானா? என்ற கேள்வி எழுகிறதா, இல்லையா?
– கருஞ்சட்டை