புதுடில்லி, டிச.10- குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற மாநிலங்களவையின் அவைத்தலைவராகவும் இருக்கிறார். நடப்பு கூட்டத் தொடரில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், தன்கருக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதானி முறை கேட்டை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கும் அவர், நேற்று (9.12.2024) அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளுங்கட்சியினருக்கு அனுமதி அளித்தார்.
இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர தாக்கீது வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவையில் தன்கரின் நடவடிக்கைகள் ஏற்க முடியாத வகையில் இருப்பதாகவும், பா. ஜனதா செய்தி தொடர்பாளரை விட அதிக விசுவாசியாக அவர் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் ஒருவர் தெரிவித்தார். பதவி நீக்க தீர்மானத்துக்கான தாக்கீது அளிக்கும் காங்கிரசின் யோசனையை திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளும் ஏற் றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . கடந்த ஆகஸ்டிலேயே இந்த நடவடிக்கை குறித்து பேசப்பட்டதாகவும், நேற்றைய நடவடிக்கைக்குப்பின் அது வேகமெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நூல் வெளியீட்டு விழாவில்அம்பேத்கர் பற்றி பேசாமல் அரசியல் பேசுவதா?
செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை, டிச.10- அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அவரை பற்றி பேசாமல் அரசியல் பேசியது வருத்தத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
78-ஆவது பிறந்தநாள் விழா
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தியின் 78-ஆவது பிறந்தநாள் விழா நேற்று (9.12.2024) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. அந்தவகையில், சென்னை, சத்தியமூர்த்தி பவ னில் நடைபெற்ற விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு காங்கிரஸ் நிர்வாகி கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும்,ஏழை, எளியோருக்கு நல உதவிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கினார். பின்னர், இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமை தொடங்கிவைத்தார். பின்னர், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வருத்தத்திற்குரியது
கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மன்னராட்சி என்பது கேள்விக்குறியானது. மேலும், 1950ஆம் ஆண்டு குடியரசு ஆன பிறகு மன்னராட்சி அரசு தூக்கி எறியப்பட்டது. 1976ஆம் ஆண்டு 26-ஆவது சட்டத்திருத்தத்தின் மூலமாக மன்னர் மானியம் ஒழிப்பை இந்திரா காந்தி கொண்டுவந்தார். அப்படி இருக்கும்போது இந்த தேசத்தில் எங்கு மன்னராட்சி இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியலை யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் பிறரை புண்படுத்தாமல் பேச வேண்டும். பேசுவதற்கு கருத்து சுதந்திரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேச முடியாது. இதை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தவிர்த்திருக்க வேண்டும். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவரைப் பற்றியும், அவருடைய பெருமையை பற்றியும் பேசாமல் அரசியல் பேசியது வருத்தத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.