அமெரிக்க – பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட இணைய நிகழ்ச்சியில் கழகத் தலைவர் வேண்டுகோள்!
அமெரிக்கா, டிச. 10- “பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்” நடத்திய இணைய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கி வரும், “பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்”சார்பில் 8.12.2024 சனிக்கிழமை அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், எழுத்தாளர், தி.மு.க. தொழில்நுட்பக்குழு ஆலோசகர் மூத்த இதழாளர் கோவி.லெனின், திமுக வழக்குரைஞர் கணேஷ் பாபு ஆகியோர் முன்னிலை ஏற்று இணையம் மூலமாக ஆசிரியரை வாழ்த்திப் பேசினர். அதைத்தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த, தற்போது யூஏஇ வில் வசிக்கும் தோழர் மோகித், தோழர் ராம்குமார், ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வாழ்த்து, வசவு
இறுதியில் ஆசிரியர் ஏற்புரை வழங்கினார். அதில், “92 வயது ஆகிவிட்டது என்பதற்காக நான் முடங்கிவிடக்கூடாது என்பதற்காக என்னை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள் என்றே இதை நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று தொடங்கினார். ‘வாழ்த்துகளை விட வசவுகள்தான் நம்மை உற்சாகப்படுத்தும்’ என்று பெரியார் அய்யா சொல்வார்கள். நம்மைப் பொறுத்தவரை வாழ்த்துகளை பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பது கொடுமையாக இருக்கிறது. என்னை வாழ்த்திப் பேசியவர்களெல்லாம் என்னை உற்சாகப்படுத்த பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெருமையோ, சாதனையோ என்னுடையதல்ல, மாறாக நம்மையெல்லாம் மானமும், அறிவும் மனிதருக்கழகு என்று நம்மை ஆளாக்கிக் கொண்டிருக்க கூடிய அறிவுலக ஆசான் தந்தை பெரியாருக்குரியது’ என்றார். ”என்னுடைய சொந்த புத்தி காரணமல்ல, பெரியார் தந்த புத்தி” என்று அதற்கான விளக்கத்தையும் கூறினார். அத்துடன், “இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் என்று நீங்கள் யாரையாவது அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக என்னைக் குறிப்பிடுகிறீர்கள். அதற்கும் காரணம் இயக்கம்! இராவணுக் கட்டுப்பாடு கொண்ட இயக்கத் தோழர்கள்” என்று தனிப்பட்ட நானல்ல என்பதற்கான காரணங்களை அடுக்கினார்.
மேலும் அவர், “பேசிய ஒவ்வொரு தோழரும் அருமையாகப் பேசினார்கள். ஒருவர் பேசியதை மற்றவர் பேசாமல் பேசினார்கள்” என்று அவர்களை மறுபடியும் வாழ்த்தினார். தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். இருக்காது என்று ஆருடம் கணித்தார்கள். இந்த இயக்கம் இருக்கிறதே என்று இன்று வேதனைப்படுகிறார்கள். அதுவும் உலகளாவிய அளவில் இருக்கின்றது. எந்தக் காலத்திலாவது அமெரிக்காவின் ஒரு மூளையிலிருந்துகொண்டு நாம் இப்படி கருத்தரங்கங்களை நடத்துவோம் என்று எண்ணி யிருப்போமா? எப்படி அறிவியல் துணை கொண்டு இதை நாம் பயன்படுத்துகிறோமோ அது போலே பகுத்தறிவினாலே, உழைப்பினாலே, தன்மான உணர்வினாலே, சுயமரியாதை இயக்கத்தினாலே, உத்தமமான தலைவர்களாலே, உறுதிமிக்க கொள்கையினாலே, ஊண்மையான தொண்டர்களாலே, அதுபோல யோக்கியமான பிரச்சாரர்களாலே இந்தப் பணிகள் இதுவரை நடைபெற்றிருக்கின்றன” என்று தன்னடக்கத்துடன் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.
திராவிடர் இயக்கத்தலைவர்கள் எப்படியெல்லாம் இந்தக் கொள்கைகளை பிரச்சாரம் செய்தனர் என்பதை எண்பிக்க, “நெருக்கடி காலத்தில் பேசக்கூட முடியாது என்ற நிலை இருந்தபோது, சுயமரியாதை திருமணங்களில் பேச வேண்டியதை நாசூக்காக கலைஞர் போன்றவர்கள் பேசினர்” என்பதை எடுத்துரைத்தார். அதைவிட முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், “நாம் நமது இலக்கை இன்னமும் அடையவில்லை. தடை தாண்டும் போட்டி போல நாம் சென்று கொண்டிருக்கிறோம். இதுவரை வாதாடி, போராடிப் பெற்றதையெல்லாம் நமது இன எதிரிகள் வேறு வழிகளில் அவற்றையெல்லாம் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் பெற்றவை பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு EWS சட்டம் பற்றிசொல்லி, அது எப்படி அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்திற்கே விரோதமானது என்பதை விளக்கினார்.
கன்னிவெடி
“அவை கண்ணுக்குத் தெரியாத கன்னி வெடிகளைப் போன்றது. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்று எச்சரித்தார். இன்னொரு முக்கியமான ஆபத்தான் விஸ்வகர்மா பற்றி பேசி, தமிழ்நாடு முதலமைச்சர் அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொன்னதையும் குறிப்பிட்டார். நீட் தேர்வின் கொடுமை எப்படிப்பட்டது என்பதையும் இதனுடன் சேர்த்துச் சொன்னார். தோல்விகள் வந்தாலும் துவளக்கூடாது. நமது பாதை தெளிவானது; இலக்கை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். அதில் விசம் எது… சர்க்கரை பூசிய விச உருண்டை எது…? என்பதை நமது தெரிந்துகொள்ள வேண்டும் என்று நமது தோழர்களுக்கு எனது பிறந்தநாள் செய்தியாக அல்ல, ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ம.வீ.கனிமொழி சிறப்பாக ஒருங்கிணைத்தார். கலிபோர்னியாவிலிருந்து தோழர் சங்கர், தோழர் ரவிக்குமார், மதி ஆகியோரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பணிகளில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி பெரியார் வலைக்காட்சி சார்பில் நேரலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தியல், செயல்பாடு: இரண்டு தளங்களிலும்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான் வழிகாட்டுகிறார்!
ஆசிரியர் அவர்கள், தமிழ்நாட்டின் திசைவழிப் போக்கையே தீர்மானிக்கக்கூடிய ஒரு தலைவர்! அகில இந்திய அளவிலும் சமூகநீதி அரசியலை வழிநடத்தக் கூடிய ஒரு தலைவர்! பல்வேறு கருத்தியல் நெருக்கடிகள், குழப்பங்கள் சூழ்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் ஒரு தெளிவான பாதையைக் காட்டக்கூடிய ஒரு தலைவர்! இதையொட்டித்தான் பெரிய, பெரிய தலைவர்கள் எல்லாம் பெரியார் திடலுக்கு வந்து அவரிடம் ஆலோசனை பெறுகிறார்கள்.
ஊக்கம்
நெருக்கடிகளை, சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்கிற ஊக்கத்தை அவரிடமிருந்து பெறுகிறார்கள். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஒரு நெருக்கடி வந்தபோது, மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கே துணை நின்றவர், டிராஃப்ட் போட்டுக்கொடுத்தவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். அதற்காக அகில இந்திய அளவில் பயணித்து சமூகநீதித் தலைவர்களை சந்தித்து இதற்காக ஒருங்கிணைத்தவர்.
அப்படி சிரமப்பட்டு நமக்கு வாங்கித் தரப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு உரிமை பறிபோகக்கூடிய சூழல் இன்றைக்கு அவர் காலத்திலேயே வந்துள்ளதைப் பார்க்கிறோம். இந்த சூழ்நிலையில் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வரப்படுகின்றன. ஆகவே, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டுக்காக நாம் போராட வேண்டியுள்ளது. ஏற்கெனவே பெற்றுள்ள இடஒதுக் கீட்டிலும் கீழ்மட்ட பணிகளில்தான் நாம் இடம் பெற்றிருக்கிறோம். உயர் பதவிகளில்; அதிகாரம் மிக்க பதவிகளில்; முடிவெடுக்கும் பதவிகளில் அனைத்து சமூக மக்களும் இருக்கிறார்களா? என்றால் இல்லை. நீதித்துறைகளிலும் நமக்கு ஏமாற்றம்தான். இத்தனை சிக்கல்களுக்கும் தீர்வு ஆசிரியரிடத்தில் இருக்கின்றது. அவரது வாழ்க்கை அனுபவத்தில் இருக்கின்றது. அவரது பயணத்திலும் இருக்கின்றது.
அவர் கருத்தியல் தளத்திலும் நமக்கு ஆழமான வழிகாட்டி! செயல்பாட்டுத்தளத்திலும் அவர்தான் வழிகாட்டி! ஆசிரியருக்கு வயது 92 ஆகிறது. அவரெப்படி செயல்பட்டாரோ அப்படி நாமும் செயல்படவேண்டும். ஆசிரியரை போல் நாம் இயங்கினால் எவ்வளவு பெரிய தாக்கத்தையும் நாம் உருவாக்க முடியும். ஆனால் அதில் 10 விழுக்காடு கூட நாம் செயல்படவில்லை என்பதால்தான் இந்தத் தொய்வை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
தோழர் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ.,
துணைப் பொதுச்செயலாளர் – வி.சி.க.
சமூகநீதி
சக்திகளின் கொறடா தமிழர் தலைவர்!
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இந்தியாவின் பார்ப்பனரல்லாத மக்களின் தலைவர் ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்! வரலாற்றில் ஆசிரியருக்கென்று ஒரு முக்கியமான பங்கு இருக்கின்றது. தந்தை பெரியாருக்குப் பிறகு அவருடைய பாத்திரத்தை ஏற்றவர். தந்தை பெரியாரின் தளபதியாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா.
வழிகாட்டி
அவருக்குப் பின்பு அய்யாவையும், அண்ணா வையும் இழந்த போது, அய்யாவிடம் அண்ணா இருந்த இடத்தை இட்டு நிரப்ப வேண்டிய சூழல். அதாவது தந்தை பெரியாரின் பாத்திரத்தை இட்டு நிரப்ப வேண்டிய சூழல்,காலவோட்டத்தில் அண்ணாவின் பாத்திரத்தை இட்டு நிரப்ப வேண்டிய சூழல், இன்று முத்தழிறிஞர் கலைஞர் இல்லாத இந்த சூழலில் அதையும் இட்டு நிரப்ப வேண்டிய சூழல், பேராசிரியர் இல்லாத இந்த சூழலில் திராவிடர் இயக்கத்தில் நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருப்பவர்தான் ஆசிரியர் அய்யா அவர்கள். இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளராக, தாக்கத்தை செலுத்தக்கூடிய அரசியல்வாதியாக இருப்பவர்களை நாம் ஒரு பட்டியல் இட்டால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெயரைச் சேர்க்காமல் அந்தப் பட்டியல் நிறைவடையாது. நம்முடைய தலைவர்கள் எவ்வளவோ இருட்டடிப்பு செய்யப்பட்டும் தமிழ்நாடு அரசு இவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறது.
சட்டத் திருத்தம்
நமது இந்திய அரசமைப்புச் சட்டம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அளவுக்குத் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், மக்களின் உரிமைகளுக்கு வெகு சில திருத்தங்கள்தான் செய்யப்பட்டிருக்கின்றன. முதலாவது சட்டத்திருத்தம், 76 ஆம் சட்டத் திருத்தம், 93 ஆம் சட்டத் திருத்தம். இந்த மூன்றிலுமே ஆசிரியரின் பங்கு இருக்கின்றது என்பதை எண்ணும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. இப்படி இந்திய அரசியமைப்பின் வரலாற்றில் மூன்று முக்கியமான திருத்தங்களை எடுத்துக்கொண்டால் இதற்கான அடிப்படை பங்களிப்பைக் கொடுத்தவர் நமது தமிழர் தலைவர் என்பது மிகமிக முக்கியமானது.
அதையும் கடந்து மண்டல் கமிசன் அமல்படுத்தப்பட்டதில் அதற்கு காரணாமானவர்களில் முதன்மையானவர் யாரென்றால் ஆசிரியர் அவர்கள் தான்! மண்டல் கமிசன் தலைவர் பெரியார் திடலுக்கு வந்து, “காகா கலேல்கர் கமிசனுக்கு ஏற்பட்ட கதி நான் கொடுக்கும் அறிக்கைக்கும் ஏற்படக்கூடும். அப்படி ஏற்படாமல் தடுக்கும் சக்தி பெரியார் திடலுக்குத்தான் உண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத்தான் உண்டு” என்று கூறினார். அப்படித்தான் நடந்தது. அதுபோலவே சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் காலத்தில் கலைஞர் உள்ளிட்ட ஆதரவு சமூகநீதி காப்பு சக்திகள் காரணமாக அது நடைமுறைக்கு வந்தது. அது தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கானது என்பதை நாம் கவனத்தில் கொண்டால் இதன் ஆழம் எத்தகையது என்று தெரியும்.
அதனால்தான் நான் குறிப்பிட்டேன். ஆசிரியர் இந்தியா முழுவதிலுமிருக்கிற பார்ப்பனரல்லாத மக்களுக்கான தலைவர் என்று. அந்த அளவுக்கு சமூகநீதி போராட்டக்களத்தில் எந்த சமரசத்திற்கும் ஆளாகாத ஒரே தலைவராக ஆசிரியர் இருக்கிறார்.
தமிழர் தலைவரை நமது தலைவர்கள் எந்த இடத்தில் வைத்திருந்தார்கள் என்பதை, அகில தலைவர்கள் கூடியுள்ள இடத்தில் லக்னோவில் மண்டல் கமிசன் வெற்றியைக் கொண்டாடும் போது வி.பி.சிங். “மண்டல் கமிசனில் இன்னும் ஏராளமான பரிந்துரைகள் இருக்கின்றன, அவையெல்லாம் சட்டமாக வேண்டுமென்றால், இங்கேயிருக்கின்ற சமூகநீதி சக்திகளை ஒன்று திரட்டி போராடவேண்டிய கொறடாவாக தமிழர் தலைவர் இருக்கின்றார்” என்று குறிப்பிட்டார்.
தோழர் கணேஷ்பாபு
வழக்குரைஞர், தி.மு.க.
ஆசிரியர்தான் எங்களுக்கெல்லாம்
“ரோல் மாடல்!”
ஆசிரியருடைய பிறந்த நாள் அன்று அவரைப் பற்றி பேசுவது என்பதே ஒரு வாய்ப்புத்தான். நாங்கள் பேசிக் கொண்டிருப்பவர்கள் தான். ஏனென்றால் எப்போதெல்லாம் சமூகநீதிக்கு நெருக்கடி வருகிறதோ; அது தொடர்பான கருத்து தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் நம் நினைவுக்கு வருகின்றவர் ஆசிரியர் அவர்கள்தான். 92 வயதில் ஆசிரியரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, நாமும் இப்படி செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை பெறுகின்றவர்களாக இருக்கின்றோம். ஆசிரியர் அவர்களின் பணிகளை ஏறத்தாழ 40 ஆண்டுகளாக நான் பார்த்துவருகின்றேன்.
சிந்தனைத் தெளிவு
குறிப்பாக அன்றைய ஒருங்கிணைந்த கீழத் தஞ்சை மாவட்டத்தில் எந்த அளவுக்கு திராவிடர் கழகம் – இப்போதும் நாம் போகும் போது பார்க்கமுடியும். சின்ன கிராமத்தில் கூட தந்தை பெரியாரின் சிலை இருக்கும். ஆசிரியர் அவர்களோ. கலைஞர் அவர்களோ அதைத் திறந்துவைத்ததாக அதில் அடிக்குறிப்பு இருக்கும். அரசியல் கட்சிகளுக்கு இணையாக சமூகநீதிப் பணிகளில் ஈடுபடக்கூடிய, தேர்தலில் பங்கேற்க முனைப்பு காட்டாத ஒரு பெரும் படை இருக்கின்றது.
அதுமட்டுமல்ல, அது தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியதாகவும் கருஞ்சட்டையினரின் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் இருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை ஆசிரியர் அவர்களுடைய பேச்சைக் கேட்டு வருகின்றேன். அன்றைக்கு எப்படிப் பேசினாரோ அதே வேகத்துடன், அதே கருத்துச் செறிவுடன், அதே காலத்துடன், அதே சிந்தனைத் தெளிவுடன் 92 வயதிலும் ஒருவர் பேசுகிறார் என்றால் மிகுந்த ஆச்சரியத்துக்குரியதாகும்.
அந்தக் காலத்தில், “யார் யாருடைய மூளையையெல்லாம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்” என்பார்கள். அப்படி மூளை வழியும் அளவுக்கு அறிவுள்ளவர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆசிரியருடைய மூளையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலையுமே ஸ்கேன் செய்து, அறிவியல் ரீதியாக என்ன சொல்கிறார்கள்.
அதில் கொஞ்சமாகவாவது நாம் கற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவருடைய பணிகள் ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கின்றன. ஆசிரியர் அவர்களுடைய 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கிலே நடைபெற்றபோது திராவிட மாடல் முதலமைச்சர் உட்பட அனைவரும், “90 வயதில் இப்படியா?”, “90 வயதில் இப்படியா?” என்று எல்லா தலைவர்களும் ஆச்சரியப்பட்டார்கள். ஆசிரியர் பேசும் போது, “90 என்ன 800 ஆ” என்று கேட்டார்கள்.
உத்வேகம்
அப்படியென்றால் வயதென்பது ஒரு பொருட்டல்ல. இந்த சமுதாயத்திற்கு தொண்டு செய்வதற்கு கிடைத்த வாய்ப்பு. தந்தை பெரியார் எப்படி அந்தப்பணியைச் செய்தாரோ, கலைஞர் எப்படி அந்தப்பணியைச் செய்தாரோ, இனமானப் பேராசிரியர் எப்படி அந்தப்பணியைச் செய்தாரோ, இன்றைக்கும் ஆசிரியரை விட மூத்தவர்கள் பணி செய்துகொண்டிருக்கும் சூழலில் தலைமைப் பொறுப்பிலே இருக்கின்ற நான் செய்ய வேண்டிய பணி இவை என்பதைப் போல அவருடைய பணி விளங்கிக்கொண்டிருக்கின்றது. அவரைப் பார்க்கும் போது, நாமும் அவரைப் போன்று இருந்தாக வேண்டும் என்று உத்வேகம் பெறுகின்றோம். எங்களைப் போன்றவர்களுக்கு அவர்தான் ரோல் மாடலாக இருக்கின்றார்.
– தோழர் கோவி.லெனின்
ஆலோசகர், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி