(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
கவிஞர் கலி.பூங்குன்றன்
வன்முறைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்று வதற்கு பிராமணர்களுக்கான ஓர் இயக்கத்தைப் பிராமணர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்று ‘தினமணி’ மூக்கால் அழுகின்றது.
இது உண்மைதானா? இன்றைக்கும் ‘தாம்ப் ராஸ்’ என்னும் அமைப்பு இருக்கிறதே – அது பார்ப்பனர்களுக்கான சங்கம்தானே – அந்தப் பெயரில் ஏடு கூட நடத்திக் கொண்டு இருக்கவில்லையா?
இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது – அதனை எதிர்த்து உண்ணும் விரதத்தை திராவிடர் கழகம் நடத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியது பார்ப்பனர் சங்கம் இல்லையா? (8.8.1988)
1988 நவம்பர் 16ஆம் நாள் சென்னை சின்னமலை அருணா திருமண மண்டபத்தில் பார்ப்பனர்கள் 8ஆம் ஆண்டு தொடக்க விழா என்ற பெயரில் என்னென்ன வெல்லாம் பே(ஏ)சினார்கள்? ஆயுதம் ஏந்துவோம் என்றெல்லாம் ஆர்ப்பரிக்கவில்லையா?
பார்ப்பன சங்க வக்கீல் கிருஷ்ணசாமி என்பவர் பார்ப்பனர்கள் சைக்கிள் பேரணி வைப்பதன் அடிப்படைப் பின்னணி – பார்ப்பனர்கள் சைக்கிள் செயினைச் சுற்றி வன்முறையில் இறங்குவதற்காகத்தான் என்று பேசவில்லையா?
வாஞ்சி நாதன் வரலாற்றை எழுதிய ‘ரசுமி’ பேசுகையில், அய்யர், அய்யங்கார், ராவ்ஜி என்று நமக்குள் பிரிந்து நிற்காமல் மூவரும் திரிசூலம் போல் இணைந்து அசுரர்களைத் தாக்கி அழிக்க வேண்டும் என்று பேசினாரா இல்லையா?
தமிழ்நாடு ‘பிராமணர்’ சங்க வெள்ளி விழா மாநாடு சென்னை அண்ணாநகரில் ரெங்கநாத அய்யர் நகரில் சிறீகிருஷ்ணா கார்டனில் (டிசம்பர் 24, 25-2005) பெரும் செலவில் நடத்தப்பட்டதுண்டே!
படத் தயாரிப்பாளர் ‘பிரமிட்’ நடராஜன், எழுத்தாளர் சுஜாதா, நடிகர் டெல்லி கணேஷ், திரைப்பட இயக்குநர் பாலசந்தர் போன்றவர்கள் எல்லாம் எந்த வெறியில் பேசினார்கள் – மாநாட்டில் அரிவாளைத் தூக்கிக் காட்டினார்களே!
இளைஞர்கள் ஒவ்வொருவரும் வஸ்தாத் பழக வேண்டும் என்று கல்கி எழுதவில்லையா?
மூளையை வறட்டிக் கொண்டு படித்துப் பரீட்சையில் முதன்மையாகத் தேறுவதனால் மட்டும் என்ன பயன்? பெண்டாட்டி பிள்ளை களைக் கயவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள் எத்தனை படித்து எத்தனை கெட்டிக்காரர்களாகயிருந்துதான் என்ன பிரயோஜனம்?
‘ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’, ‘வீரன் ஒரு முறை சாவான், கோழை பல முறை சாவான்’ என்று படித்ததெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் இருந்தால், இனி வாழ்க்கை நடத்த முடியாது” என்று பார்ப்பனர்களைப் பலாத்காரத்துக்குத் தூண்டும் வகையில் தலையங்கம் தீட்டியது ‘கல்கி’ (2.8.1953) ஏடு என்பது நினைவிருக்கட்டும்!
பழனியிலே பார்ப்பனர்கள் பேரணி நடத்தி அதில் திராவிடர் கழகத் தலைவரை பாடை கட்டித் தூக்கிச் செல்லவில்லையா?
இப்பொழுது மட்டுமல்ல, 1936ஆம் ஆண்டி லேயே மாநாடு நடத்தியவர்கள்தானே பார்ப்பனர்கள்!
ஆந்திரதேச பிராமண மகாசபைக்கு காசி கிருஷ்ணமாச்சாரியார் தலைவராக இருந்தார். வரவேற்புக் கமிட்டித் தலைவர் மிஸ்டர் கௌதா சூரியநாராயண ராவ் அவர்கள் எல்லா ஸநாதனிகளும் கட்டுப்பாடாக இருந்து ஸ்வதர்மத்தை நிலை நிறுத்தவே பாடுபட வேண்டுமென்று தம் பிரசங்கத்தில் வேண்டிக் கொண்டார்.
அவர், இந்திய அரசாங்க சீர்திருத்தச் சட்டமானது சரியில்லை என்றும், அதன் நோக்கமே மதவாரி ஜாதியாக வகுத்து இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைத்து விடுவது என்றும், இதனால் அந்நியர் இந்நாட்டில் நிலைத்திருக்கும்படி ஆகிவிடும் என்றும் சொன்னார். அவர் இந்தியாவுக்கு சுயராஜ்யம் ஏற்பட்டாலொழிய அந்தந்த ஜாதியாரும் ஸ்வதர்மம் என்பதை ஒருக்காலும் பின்பற்ற முடியாது என்றும் கூறினார்.
இந்தியாவில் காங்கிரஸ்தான் மிகவும் பலம் பொருந்திய ஸ்தாபனம் என்றும், இந்தியாவில் ஸ்வதர்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற கொள்கையுடையவர்களாகிய ஸநாதனிகள் எல்லோரும் அதற்காக இந்தியா சுயராஜ்யம் அடைய வேண்டுமென்பதில் கவலையுடையவர்களாக இருக்கிறபடியால் – அப்படிப்பட்ட கவலையுடைய எல்லோரும் காங்கிரசில் சேர்ந்தே தீரவேண்டும் என்றும் கூறி, மேலும் பேசியதாவது, ‘அதனால் நாம் பலம் பெற்று நம் ஸநாதன திட்டத்தின்படியே இந்தியாவில் கல்வி போதிக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்யலாம், சுதேசியத்தையும் காப்பாற் றலாம். ஸ்வதர்மமே எல்லோருக்கும் சிறந்ததொன்று இந்தியாவெங்கும் பிரசாரம் செய்யலாம். பிரசாரகர் களையும் ஊழியர்களையும் ஏராளமாகத் தயார் செய்ய வேண்டும், பிரசாரகர்கள் தாங்கள் செய்யும் போதனைகளை இன்ன மாதிரித்தான் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக நாம் ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டும். அந்த ஸ்வதர்மம் (வர்ணாச்சிரமதர்ம) பிரசாரகர்கள் மனப்பூர்வமாக வேலை செய்கிறவர்களாகவும் தம் சுயமரியாதையை விட்டுவிடாதவர்களாகவும் இருக்க வேண்டும்.”
இவ்வண்ணமாகப் பேசி வரவேற்புத் தலைவர் தம் பிரசங்கத்தை முடித்த பிறகு, தலைவர் கிருஷ்ணமாச்சாரியாரும் ராமகிருஷ்ணசய்னுலுவும் பேசினார்கள். ஸ்வதர்மமே அவரவர்க்கும் வேண்டும் என்று கோருகிற எல்லோரும் அந்த சபையில் முடிவு செய்கிறபடி ஸ்வதர்மம் வெற்றிக்காகத் தினமும் பூசைகள் செய்து கொண்டு வரவேண்டுமென ஒரு பிரதிக்ஞை செய்து கொள்ள வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. பார்ப்பனர்களுக்கெல்லாம் பூரி தட்சணையாக ஏராளமான பணம் விநியோகிக் கப்பட்டதும் மாநாடு கலைவுற்றது.
– ‘குடிஅரசு’, 1.11.1936, பக். 14
1936ஆம் ஆண்டிலேயே பார்ப்பன சங்கத்தார் கூடி சுயராஜ்யம் கேட்பது வர்ண தர்மத்தைக் காக்கவே என்று பேசியிருக்கிறார்களே!
1946ஆம் ஆண்டு மாச்சு மாதம் 9ஆம் தேதி சேலம் பார்ப்பனர் மாநாட்டில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் கலந்து கொண்டு, பார்ப்பனர்களுக்கு பல அறிவுரைகளைக் கூறியதுண்டு.
“1. பிறப்பின் காரணமாக ஒருவன் பிராமணன் ஆகமாட்டான் – குணத்தாலும் செயலாலுமே பிராமணத்வம் நிச்சயிக்கப்படும்.
2. வாழ்க்கையில் தனக்குரிய உயர்ந்த குறிக்கோளையும் தூயமனத்தையும் துறந்து உத்தியோகத்துக்கும் பதவிக்கும் செல்வத்துக்கும், கசாப்புக்கடைக்காரருடனும். போட்டியிடுவோன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளுவது பித்தலாட்டமாகும்.
3. “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் அரசியல் நிர்வாகத்தில் தகுதியும் வினைத் திட்பமும் (Merit and officiency) கெடலாயின” என்ற பல்லவியினை நீங்கள் பாடப்பாட பிராமணரல்லாதாரின் மனதைப் புண்படுத்துவதுமன்றி அவர்கள் பகைமையையும் பெருக்கிக் கொள்ளுகிறீர்கள்.
4. பிராமணரல்லாதாரை ஏளனம் செய்து அவரை எதிர்த்துப் பகைக்கின் பிராமண இனம் சீரழிந்து வேரறுந்து போகும்.
5. யூதர் ஆதியில் அறிவுத்துறையிலும் அன்பின் வழியிலும் வாழ்ந்து வந்தனர். பின்னர் பணம் தேடுபவர்களாகிக் கடன்கொடுத்து ஏழை மக்களைத் துன்புறுத்திப் பல துறைகளிலும் ஆதிக்கம் பெற்றுவிட்டமையால் பிறர் அவர்களிடம் பொறாமை கொண்டு அவர்களை ஒடுக்கத் தொடங்கினர். அதனால் அவர்கள் இன்று கொடுமையான தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டனர்! ஆதலால் பிராமணர்கள் அந்நிலை எய்தாமல் இருக்க தங்களைக் காலத்திற்கேற்றபடி திருத்திக் கொள்ள வேண்டுவது அத்தியாவசியமாகும்.
6. நிலைமைக் கேற்பவும். சுற்றுச் சார்புக் கொப்பவும் தம்மைப்பக்குவப்படுத்திக் கொள்ளுவதே பிராமணரது இயல்பென வரலாறு கூறுகின்றது. அம்மரபியல்பை இன்று மறப்பதும் துறப்பதும் பேதமையாகும்.
7. யாகங்களைச்செய்து புலால் உண்ணுதலும், சோமபானம் அருந்துதலும் நமது பண்டைக்காலத்து வழக்கம். தென்னாடு போந்தபின்னர் இந்நாட்டின் தட்பவெப்ப நிலைமைக்கேற்ப நம்மவர் புலாலையும் குடியையும் அறவே நீக்கிவிட்டனர்.
8. வேதங்களின் கர்மகாண்டத்தையே பின்பற்றிவந்த நம்மவர் சுக்ஷத்திரியரிடம் சென்று ஆத்ம வித்தையையும் உபநிடதங்களையும் கற்றுக்கொள்ளவில்லையா?
9. நமக்கு எதிர்ப்பாகத் தோன்றிய பவுத்தம், ஜைனம் முதலிய மதங்களின் சீரிய கொள்கைகளைத்தழுவி நமதாக்கிக் கொள்ளவில்லையா?
10. மிகவும் முந்திய காலத்திலேயே நம்மவர் கடல்கடந்து சென்று பல யாகங்களைச் செய்து மன்னர்கள்பால் பரிசு பெறவில்லையா?
11. நமது இனத்தவராகிய நம்பூத்திரிகள் மலையாள நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கேற்பத் தமது ஒழுக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளவில்லையா?
12 மகம்மதிய ஆட்சி நிலவியபோது நம்மவர்கள் அமைச்சர்களாகவும் அலுவலாளர்களாகவும் இருந்து ஆக்கம் பெறவில்லையா?
13. ஆங்கிலேயர் வந்தபின்னர் அவர்தம் மொழியைக்கற்று நாம் வாழவில்லையா?
14. இங்ஙனம் காலத்திற்கேற்ற கோலம் தாங்கிய நம்மவர் இன்று ஏன் நம் மரபியலைக் கைவிட வேண்டும்? அதனால் இன்று பிராமணரல்லாதார் நமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் கண்டு பொறாமை கொண்டு நம்மை வெறுப்பது உண்மை தான்! நீங்கள் செய்யவேண்டுவது என்னவெனில்: உத்தியோகம் உங்களை நாடிவந்தால் வரட்டும்; இல்லையேல் நீங்கள் அதனை நாடவேண்டாம்.
15. உங்கள் பிள்ளைகளுக்குக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம் மறுக்கப்படுகிறதென்கிறீர்கள். அப்படியாயின் திரண்ட நிதியைச் சேர்த்துப் புதிய கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும், கைத்தொழிற்சாலைகளையும் தொடங்குங்கள். அவற்றில் எல்லா மாணவர்களையும் ஜாதி. குல. மத வேறுபாடின்றிச் சேர்த்துக் கொள்ளுங்கள். பண்டைக்காலத்தில் நமது பொருளாதார நிலைமை தாழ்ந்திருந்தது; இன்று அப்படியில்லை. ஆதலால் பிறர் உதவியின்றியே பிராமணர்களே இதனைச் செய்யக்கூடும்.
16.நகத்தில் மண்படாமல் வாழும் பழைய வழக்கத்தைவிட்டு விவசாயம்.கைத்தொழில் முதலிய துறைகளில் புகுந்து செயலாற்றுங்கள்.
17. பிராமணர்களுக்குள் இருக்கும் பல பிரிவுகளும் ஒன்றுபட வேண்டும், ஒன்றுபட்டு உலகத்தோடு ஒட்ட ஒழுகி முன்னேற வேண்டும்.
18. பழைய பெருமையை மறந்து புதிய உலகத்திற்கேற்ப நடந்துகொள்ள உங்களுக்கு விருப்பமில்லையேல் இம்மாநாடு இக்கணமே கலைந்து விடலாம்.
19. நமது முன்னோர் இரத்தலை ஒரு தொழிலாகக் கொண்டிருந்தனர். முற்காலத்தில் கொடுப்போரும் விரும்பிக் கொடுத்தனர். பிராமணரும் மகிழ்ந்து ஏற்றனர். இக்காலத்தோ அன்பால் உந்தப்பட்டு பிராமணருக்குக் கொடுப்போர் இலர் என்பது வெள்ளிடை – ஆதலால் எவரிடத்தும் யாசிக்க வேண்டாம். தன்கையே தனக்குத் துணையாகத் தன்மானத்தோடு வாழுங்கள்” என்று ‘பிராமணர் களுக்கு’ அறிவுறுத்திப் பேசினார். இதை எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை.
– ‘குடிஅரசு’, 16.05.1946.
நிலைமையைப் புரிந்து கொண்டு, பார்ப்பனர் களுக்குப் பக்குவமாக சர் சி.பி.எடுத்துக் கூறியும், பார்ப்பனர்களுக்கு நற்புத்தி ஏற்படவில்லையே.
பார்ப்பனர்களுக்குத் தந்தை பெரியார்
கூறிய அறிவுரை – புத்திமதி
சென்னை இராயப்பேட்டையில் ‘இலட்சுமிபுரம் யுவர் சங்கம்’ என்கிற பார்ப்பன அமைப்பு ஒன்று உண்டு. அவர்கள் அழைத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு தந்தை பெரியார் பிரபலமான பார்ப்பனர்களை, வழக்கறிஞர்களை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு, வேண்டுகோளை விடுத்தார்களே – ஏற்றுக் கொண்டார்களா?
தலைசிறந்த மனித நேயவாதியாகிய தந்தை பெரியார் அவர்கள் அங்கு வைத்த கருத்து மணிகள் இதோ:
“யாரோ சில பிராமணர்கள், “பெரியார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார்.இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்” என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை- திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத் தினுடைய திட்டமெல்லாம் – திராவிடர் கழகமும் நானும் சொல்லுவதெல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
இது ‘பிராமணர்கள்’ இங்கு வாழக் கூடாது என்று சொன்ன தாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்ன தாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் ‘பிராமணர்களுக்’கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும் தான் நாங்கள் எதிர்க் கிறோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.
நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கி றோம்; ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றமடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்த நிலைமையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக்கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத் காரம் சிறிதும் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு. காலம் எப்போதுமே ஒன்றுபோல இருக்க முடியாது.
நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால், அதிருப்தி களுக்குக் காரணமானவைகளை மாற்றிக் கொள்வது இரு வருக்கும் நலம், அதை நண்பர் சிறீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார்; அதாவது பிராமணர்களும் காலதேச வர்த்தமானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண் டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது.
– ‘விடுதலை’, 8.1.1953
* * * * *
வாழை இலையும் – முள்ளும் பார்ப்பனர்களுக்கு அறிவுரை!
76 ஆண்டுகளுக்கு முன் (1948) தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர்களுக்கு தூத்துக்குடி திராவிடர் கழக மாநாட்டில் கூறிய புத்திமதி இங்கே:
“என் அருமை பார்ப்பனத் தோழர்களே! நீங்கள் வாழை இலையைப் போல் மென்மையானவர்கள். நாங்கள், நாங்கள் என்றால் திராவிட இனத்தவர்கள், முள்ளுச்செடி போல வன்மையும் கூர்மையும் வாய்ந்தவர்கள் – முள் வாழையிலை மீது உராய்ந்தாலும் வாழையிலைதான் கிழியும்! வாழையிலையே வந்து முள்ளுடன் மோதினாலும் வாழையிலை தான் கிழியும். அதுபோல நீங்களாக வந்து எங்கள் இனத்துடன் மல்லுக்கு நின்றாலும் உங்களுக்குத்தான் நஷ்டம். அல்லது, நாங்களாக வந்து உங்களிடம் போரிடத்தக்க நிலை நேரிட்டாலும் உங்களுக்குத் தான் நஷ்டம்.
ஆகையால் தான் கூறுகிறேன், நம் இருவருக்குள்ளும் போரோ, பிணக்கோ, பூசலோ, பகையோ நேரும் விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள்! அப்படி நடந்து கொண்டால், கஷ்டம் உங்களுக்குத்தான்; எங்களுக்கல்ல. வாழையிலையும் முட்செடியும் மோதிக்கொள்ளும் நிலை நேரிட்டால் காயம் இலைக்குத்தான், முட்செடிக்கல்ல!”
இவ்வளவுப் புத்திமதிகளைப் பார்ப்பனர் களுக்குச் சொன்னவர் தான் தந்தை பெரியார். பார்ப்பனர்கள் திருந்தினார்களா? சிந்தியுங்கள்.
“இன்னும் மல்லுக்கட்டுகிறார்கள் – விபரீதமாக நடந்து கொள்கிறார்கள் – வாழை இலை தான் கிழியும் என்ற யதார்த்த நிலையை உணர மறுக்கிறார்கள். படிப்பு வேறு – புத்தி வேறு என்பதற்கு பார்ப்பனர்களே எடுத்துக்காட்டு!
முற்போக்குப் பார்ப்பனர் மாநாடு
இதுவரை வாளேந்தாச் சோதாக்கள்
சென்னைமா வட்டம் சேர் முற்போக்குப்
பார்ப்பனர் மாநாடு பகர் மேமுதல் நாள்
இரண்டாவ தாக இரசிக ரஞ்சனி
சபாவில், கே எஸ். ராமசாமி
சாத்திரி என்பவர் தலைமையில் நடந்ததாம்
வேதபா ராயணம் விளைத்தாராம் முதல்
இந்திய யூனியன் கொடியேற்றினார் பின்!
எம். எஸ். சுப்பிரமணியன் என்பவர்
அம்மா நாட்டுக் கடிகோ லுகையில்
“தர்ப்பைகொள் கையால் வாளும் தாங்குவோம்”
என்றார்- பார்ப்பனர் இதுவரை வாளினைத்
தொட்டறி யாத சோதா மக்களா?
இனிமேல் இவர், வாள் ஏந்துவா ராயின்
காந்தியைக் கண்டு கைகள் கூப்பி
ஏந்து துப்பாக்கியை எடுத்துச் சுட்ட
மானமல்லா வஞ்சகச் செயல் இனி
யேனும் செய்யா திருப்பரோ இவர்கள்?
– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்