புதுடில்லி, டிச.10 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில விதிகளின் செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு அமா்வு வரும் 12-ஆம் தேதி விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள இத்கா மசூதி, சம்பலில் உள்ள ஜாமா மசூதி ஆகியவை தொன்மையான ஹிந்து கோயில்களை அழித்து கட்டப்பட்டவை என்று ஹிந்துக்கள் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மேற்கோள்காட்டி, இத்தகைய வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று முஸ்லிம் தரப்பு வாதிடுகிறது.
ஏனெனில், நாடு சுதந்திரமடைந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று நிலவிய வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையின் மாற்றத்தை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்கிறது. மேலும், மதத் தன்மையைப் பராமரிப்பதற்கான உரிமைகளை வழங்குகிறது. இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தின் 2, 3 மற்றும் 4 பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனு, மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனு உள்பட 6 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமா்வு வரும் 12.12.2024 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிக்க உள்ளது.