லக்னோ, டிச.10 உத்தர பிரதேசத்தில் உள்ள அடாலா மசூதியை ஹிந்து கோயிலாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மாநில உயா்நீதிமன் றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
நீதிமன்றத்தில் மனு
உத்தர பிரதேச மாநிலம் ஜவன்பூா் பகுதியில் அடாலா மசூதி உள்ளது. இந்த மசூதி தொடா்பாக உள்ளூா் நீதிமன்றத்தில் ஸ்வராஜ் வாஹினி சங்கம் மற்றும் சந்தோஷ் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அடாலா மசூதி முன்பு அடாலா தேவி கோயிலாக இருந்தது. எனவே அந்த மசூதியை கோயிலாக அறிவித்து, அங்கு ஹிந்துக்கள் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக ஒரே நோக்கம் கொண்ட அனைவா் சார்பிலும் ஒருவரோ, அதற்கும் மேற்பட்டவா்களோ வழக்கு தொடுக்க, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி) உத்தரவு 1 விதி 8-இன் கீழ் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உள்ளூா் நீதிமன்றம், சிஆா்பிசி உத்தரவு 1 விதி 8-இன் கீழ் மனுதாரா்கள் கோரிய அனுமதியையும் வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகக் குழு தாக்கல் செய்த மனு, கடந்த நவம்பா் 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு ஸ்வராஜ் வாஹினி சங்கம், சந்தோஷ் குமார் ஆகியோருக்கும், அந்தப் பதில் தொடா்பான தங்கள் கருத்துகளை ஒரே வாரத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மசூதி நிர்வாக குழுவினருக்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு அடுத்த வாரம் உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.