நவம்பர் 24-ஆம் தேதி, சம்பலில் உள்ள மசூதிக்கு ஆய்வுக் குழு வந்ததைத் தொடர்ந்து, வன்முறை வெடித்ததில் மசூதியிலிருந்து சில மீட்டர் தொலைவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 4 பேர் பரிதாபமாக இறந்தனர், அந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித் மற்றும் அஜ்மீரில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்கா ஆகியவற்றின்மீது ஹிந்துக்கள் உரிமை கோரி உள்ளூர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய மனுக்கள் மீது சங் பரிவாரின் மவுனப் போக்கு அச்சத்தையூட்டுகிறது. கருத்தியல் ரீதியாக, இந்த நடவடிக்கையானது பல ஹிந்துக் கோவில்கள் இசுலாமிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டு மசூதிகளாக மாற்றப்பட்டன என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்து இதன் பின்னணியில் உள்ளது. உண்மையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்த ராம ஜென்மபூமி தருணம்தான் நினைவிற்கு வருகிறது.
2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து இந்த ஆண்டு ராமர் கோயில் திறக்கப்பட்டது ஆர்.எஸ்.எஸின் கருத்தியல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், சமீபத்திய மனுக்கள்பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறுகையில், “இதுபோன்ற பல கருத்துகள், அவற்றில் சில அற்பமானவையாக மாறக்கூடும், காசி மற்றும் மதுரா போன்ற ஹிந்துக்களின் உண்மையான உரிமைகோரல்களை, பலவீனப்படுத்தக்கூடும்” என்று கூறினர். மேலும், வழிகாட்டுதலுக்காக தங்களை அணுகிய சில மனுதாரர்களுக்கு சங்கம் கட்டுப்பாடுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“எங்களுக்கு மூன்று முக்கிய பிரச்சினைகள் இருந்தன – ராமர் கோவில், காசி மற்றும் மதுரா ஆகியவையாகும். ஒன்று (ராமர் கோயில்) முடிந்தது, மற்ற இரண்டும் அப்படியே இருக்கிறது. இதுபோன்ற உரிமைகோரல்களை எல்லா இடங்களிலும் தோராயமாக கூறுவதன் மூலம், அது நமது உண்மையான வழக்குகளை காயப்படுத்துகிறது. ஜூன் 2022-இல், ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் உரிமை கோரிய மனுவைத் தொடர்ந்து வாரணாசியில் நடந்த சட்டப் போராட்டத்தின் மத்தியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது என்ன? “ஹிந்துக்கள் முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துக்கள். ஹிந்துக்களின் மன உறுதியைக் குலைப்பதற்காக (கோயில்கள் இடிப்பு) செய்யப்பட்டது என்று பலர் நினைக்கிறார்கள். ஹிந்துக்களில் ஒரு பிரிவினர் இந்தக் கோயில்களைப் புனரமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரச்சினையை எழுப்பக்கூடாது. சண்டையை ஏன் அதிகரிக்க வேண்டும்? ஞானவாபி குறித்து நம் நம்பிக்கை பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. நாம் செய்வது நன்றாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கூறியிருந்தார்.
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான பயிற்சியின் முடிவில் பேசிய மோகன் பகவத், “மசூதிகளில் நடப்பதும், ஒரு வகையான பிரார்த்தனைதான்; வெளியில் இருந்து வந்த மதத்தை அதை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் வெளியாட்கள் அல்ல, இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
“அவர்களின் பிரார்த்தனை வெளியில் இருந்து (இந்த நாட்டிற்கு) வந்தது, அவர்கள் அதைத் தொடர விரும்பினாலும், நாம் அதில் நல்லவிதமாக இருக்கிறோம். நாம் எந்த விதமான வழிபாட்டையும் எதிர்க்கவில்லை” என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வக்ஃப் பிரச்சினையும் இருக்கிறது என்ற கருத்து ஆர்.எஸ்.எஸின் மேலிடத்தின் கருத்தாகவும் உள்ளது.
இப்பிரச்சினையில் எதிர் விளைவுகள் பிஜேபி., ஆர்.எஸ்.எசுக்கு எதிராக இருக்கும் என்ற அச்சமும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரிகிறது. தூண்டி விட்டால் தூண்டி விட்டவர்களே நினைத்தாலும் தீயை அணைக்க முடியாதல்லவா? – பாம்புப் புற்றில் கைவிடுவது புத்திசாலித்தனமானதல்ல.