புதுச்சேரி, டிச.8- புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களை பேரிடா் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன், வங்கக் கடலில் உருவாகி கரையை கடந்த பெஞ்சால் புயலால், புதுவையில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.இதனால், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, புதுவை முதலமைச்சர் என்.ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
மேலும், ஒன்றிய அரசு நிவாரணமாக ரூ.614 கோடி வழங்கவும் பிரதமா் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோருக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் கோவிந்த சாலை, ரெயின்போ நகா் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவை பழுதாகியுள்ளன.
பழுதான பொருள்களுக்கு காப்பீடு பெறும் வகையில், தற்போது புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகள் பேரிடா் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தார்.
மாநில அளவில் பேரிடா் பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்றியக் குழு 8, 9.12.2024 ஆகிய இரு நாள்கள் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
புயல் சின்னம்: தமிழ்நாடு, ஆந்திரத்துக்கு கனமழை எச்சரிக்கை!
சென்னை, டிச. 8- வங்கக்கடலில் உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் அடுத்து வரும் நாள்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது, டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி, இலங்கைக்கு அருகே நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மழை பெய்யும் என்றும், டிசம்பர் 12ஆம் தேதி ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளிலும், ஏமன், ராயலசீமா பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் கூறியிருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மய்ய அறிக்கைப்படி, பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமானுக்கு தெற்கே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, டிச.12 -க்கு மேல் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகளுக்கான புத்தாக்கமான பணியிடப் பகிர்வு சேவை விரிவாக்கம்!
சென்னை, டிச.8- உலகளாவிய வசதி மேலாண்மை மற்றும் பணியிடப் பகிர்வு சேவையில் நிபுணத்துவம் பெற்ற அய்.எஸ்.எஸ். ஏ.எஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய அய்.எஸ்.எஸ். ஃபெசிலிடி சர்வீசஸ் இந்தியா, இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் அதிநவீன வசதியுடன் கூடிய புதிய அலுவலகத்தைத் திறந்ததுள்ளது. இந்தப் புதிய அலுவலகமானது புத்தாக்கம், பரந்த வளர்ச்சி மற்றும் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு உதவும். 2030-ஆம் ஆண்டிற்குள் பசுமைக் குடில் எரிவாயு வெளியேற்றத்தை படி நிலை 1 மற்றும் 2-அய் எட்டவும் 2040-ஆம் ஆண்டிற்குள் இது பூஜ்ய நிலையை எட்ட வேண்டும் என்ற நிறுவனத்தின் இலக்கை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக இது அமையும்.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆகாஷ் ரோஹத்ஜி கூறுகையில், “தென்னிந்தியாவில் வணிக சூழமைவு மேம்படுவதில் புத்தாக்கம் மற்றும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த இது உதவும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எங்கள் நிறுவனத்தின் பரந்துபட்ட நோக்கம், உள்ளூர் திறனைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மிகச் சிறப்பான சேவையை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இது உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
“இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவும் வழியேற்படுத்தும். சென்னையில் உள்ள திறன் மிகு மனித வளங்களைப் பயன்படுத்துவதால் உள்ளூர் வேலை வாய்ப்பு பெருகும்” என்று அய்.எஸ்.எஸ். இந்தியாவின் பிராந்திய கணக்கு ஒருங்கிணைப்பு பிரிவின் இயக்குநர் ஜி.டி.ஆனந்த் தெரிவித்தார்.