புதுடில்லி, டிச.8- மகாராட்டிர வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கம் தொடா்பான மூலத் தரவுகளை அளிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரியது.மேலும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் நடைமுறையில் பல்வேறு முரண்பாடுகள் நிலவியதாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் காங்கிரஸ் கவலை தெரிவித்தது.
மகாராட்டிர பேரவைக்கு தேர்தல்
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு கடந்த நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி, 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு வெறும் 50 இடங்களே கிடைத்தன.
இந்தச் சூழலில், பேரவைத் தோ்தல் நடைமுறை குறித்து பல்வேறு அய்யங்களை எழுப்பிய காங்கிரஸ், இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் 29.11.2024 அன்று நேரில் புகார் அளித்தது.
இப்புகார் மீது கடந்த சனிக்கிழமை இடைக்கால பதிலை அளித்த தோ்தல் ஆணையம், விரிவான ஆலோசனை மேற் கொள்ள கடந்த 3ஆம் தேதி தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு வருமாறு கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, காங்கிரஸ் மாநிலங் களவை எம்.பி.க்கள் அபிஷேக் சிங்வி, முகுல் வாஸ்னிக், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் நானா படோல் உள்ளிட்ட அக்கட்சி குழுவினா், தோ்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, ஆலோசனை மேற் கொண்டனா்.
மூலத் தரவுகள்
இச்சந்திப்பு தொடா்பாக செய்தியாளா்களிடம் சிங்வி கூறியதாவது:
ஆக்கபூா்வமான, சுமுகமான, நோ்மறையான சூழலில் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தரப்பில் 3-4 விவகாரங்கள் முக்கியமாக முன் வைக்கப்பட்டன.
மகாராட்டிரத்தில் மக்களவை, பேரவைத் தோ்தல்களுக்கு இடையிலான 5 மாத காலத்தில் வாக்காளா் பட்டியலில் 47 லட்சம் போ் சோ்க்கப்பட்டுள்ளனா். அதே போல், அதிக எண்ணிக்கையில் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. பெயா் நீக்கத்துக்கு முன் வீடு வீடாக சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்வது கட்டாயமாகும். இது தொடா்பான மூலத் தரவுகளை தோ்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம்.
நவம்பா் 20-ஆம் தேதி மாலை 5 மணியளவில் 58 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, இரவு 11.30 மணியளவில் 65 சதவீதமாக அதிகரித்து, மறுநாள் 66 சதவீத மானது. கிட்டத்தட்ட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. எங்களது கணக்கின்படி, 76 லட்சம் வாக்குகள் அதிகரித்துள்ளன. இவ்வளவு
பெரிய வேறுபாடு வந்தது எப்படி?
பாஜக வென்ற 102 தொகுதிகள் உள்பட 118 தொகுதிகளில் மக்களவைத் தோ்தலைவிட பேரவைத் தோ்தலில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகரித்துள்ளன. இது தொடா்பான மூலத் தரவுகளையும் கோரியுள்ளோம் என்றார் சிங்வி.