தந்தை பெரியார் நடத்திய இறுதி மாநாடு [8.9-12-1973]
இதே டிசம்பர் 8,9 ஆகிய நாட்களில்தான் 1973ஆம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டி தமிழர்களின்மீது சுமத்தப்பட்ட இன இழிவை எதிர்த்துப் போர் முரசம் கொட்டினார் தந்தை பெரியார்.
தம் வாழ் நாளில் தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய மாநாடு அது என்று அப்பொழுது தெரியாது. அது வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடாகவும் அமைந்து விட்டது. அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை – தொலைநோக்குக் கொண்டவை.
“நமது ஆட்சி, கடவுள் மத நம்பிக்கைகள் சம்பந்தமற்ற, மதச் சார்பற்ற ஆட்சி என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும், மக்கள் எல்லோரும் மதப்படியும், ஜாதிப்படியும் பிரிக்கப்பட்டுள்ளதை உறுதிப் படுத்தும் வகையில் முஸ்லீம், கிறித்துவர், பார்சி, யூதர் தவிர்த்த மற்றவர்கள் யாவரும் – பவுத்தர்கள், சமணர்கள் சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாஸ்திகர்கள் உள்பட இந்து மதத்தவர்கள் என்று ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இந்துக்களில் இரண்டு ஜாதி உண்டென்றும் அவர்களுள் ஒன்று பார்ப்பனர் (பிராமணர்) மற்றொன்று பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா மக்களும் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் மற்றும் சூத்திரன் என்றால் நாலாவது ஜாதியாவான் என்ப தோடு, அவன் பார்ப்பானுடைய (பிராமணனுடைய) தாசி மகனாவான் என்று இந்துலா என்னும் சட்டத்திலேயே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 372ஆவது விதி இந்துலாவை அங்கீகரிப்பதோடு, மதச் சுதந்திர உரிமை என்னும் பேரால் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 25,26ஆவது ஷரத்துக்களைக்காட்டி, உச்சநீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்னும் மத விடயங்களில் அரசு தலையிட்டு, ஜாதி ஒழிப்புப் போன்ற சீர்திருத்தங்களைச் செய்ய இயலாது என்றும் திட்டவட்டமாக அண்மையில் ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது – பார்ப்பனரல்லாத சூத்திர மக்களாகிய நம் மக்களின் இழிவினை என்றும் நிலை நிறுத்தும் தன்மையில் இருப்பதால், அதனை மாற்றி, நம்மை மனிதர்கள், சமத்துவம் வாய்ந்த மனிதர்கள் என்பதைச் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் கீழ்க்காணும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று அரசியல் காரணங்களன்றி, சமுதாயக் கண்ணோட்டத்தோடு தமிழ் சமுதாயத்தின் சார்பாக ஒன்றிய அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 26ஆவது அரசியல் சட்ட ஷரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். ஜாதி ஒழிப்புக்கு வழி வகை செய்யவும், மதச் சார்பின்மையை உண்மையாக்கும் வகையிலும், அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
சோஷலிசத்தைக் குறிக்கோளாகக் கொண்ட ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும்படியான ஆட்சியான படியால், மதச் சுதந்திரம் என்ற பெயரால் மனித சமத்துவம், சுதந்திரம்பறி போகக் கூடாது என்று இம்மாநாடு உறுதியான கருத்துக் கொண்டு இருக்கிறது” – என்று தன்னிலை விளக்கம் கொண்ட தீர்மானம் இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.
இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சொல்லும் மிக ஆழமான பொருளையும், தேவையையும் கொண்டதாகும்.
1973-க்குப் பிறகு தொடர்ந்த இந்த அம்சங்களை திராவிடர் கழகம் பிரச்சாரத்தின் வாயிலாகவும், மாநாடுகளின் வாயிலாகவும், போராட்டங்கள் வாயிலாகவும் மக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் வலியுறுத்திய வண்ணமாகவே உள்ளது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை தமிழ்நாடு அரசு (திமுக ஆட்சி) நிறை வேற்றிய நிலையிலும்கூட உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டு வருவது – தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் முக்கியமானதாகும்.
சுதந்திரம் என்றால் அதன் பொருள் என்ன? நாட்டு மக்கள் மத்தியில் பிறப்பின் அடிப்படையிலான பேதத்தை சட்ட ரீதியாக நீக்காவிட்டால் சுதந்திரம் என்பதற்குப் பொருள் இருக்க முடியுமா?
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரமும் இருக்குமா? இந்தக் கேள்விக்கு நாணயமான முறையில் இந்திய அறிவாளி கள் அரசியல்வாதிகள், ஊடகத்துக்காரர்கள், அரசிய லுக்கு அப்பாற்பட்டவர்கள்தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம். தத்துவக் கர்த்தாவான தந்தை பெரி யாரையும் அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகத்தைத் தவிர வேறு யாராவது இந்த அடிப்படை மனித உரிமைப் பிரச்சினைபற்றி சிந்திப்பதுண்டா? கருத்துத் தெரிவிப்பதுண்டா?
த
ழிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள 120 கோடி மக்கள் முன்பும் இந்நாளில் திராவிடர் கழகம் இந்த வினாவை முன் வைக்கிறது. கழகத் தோழர்களே! நாம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இலட்சியத்தின் தொண்டர்களாக, தூதர்களாக இருக்கிறோம் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள் – நம் மார்பு விம்மும், தோள்களும் – பூரிக்கும்! தொடரும் நம் பணி! வாழ்க பெரியார்!!
“விடுதலை” தலையங்கம் 9-12-2013