திருச்சி, டிச.8 திருச்சி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 28.11.2024 அன்று மாலை 5 மணியளவில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பணித் தோழர்கள் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வின் முதலாவதாக, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை வேதியியல் ஆசிரியர், ஏ.நிர்மலா வரவேற்புரை வழங்கி, வந்தோரை வர வேற்றார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் தோழர் சே.மெ.மதிவதனிக்குப் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர், டாக்டர் இரா.செந்தாமரை பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்.
அதன் பின்னர், கல்வி வளா கத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவ னங்களிலும் பணியாற்றும் பணித் தோழர்களில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடிய பணித் தோழர்களுக்கு சிறப்பு விருந்தினர் தோழர் சே.மெ.மதிவதனி பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘‘தமிழர் தலைவரின் தலைமைத்துவ பண்புகளில் நான் வியந்தவை’’ என்னும் தலைப்பில் தமிழர் தலைவர், ஆசிரியர், கி.வீரமணி அவர்களின் போராட்ட குணம், இயக்கத் தோழர்களில் இளையோருக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம், கழகத்தையும் பொறுப்பாளர்களையும் வழிநடத்தும் பாங்கு, பாராட்டும் விதம், பெண்ணுரிமை மற்றும் பெண்ணியம் சார்ந்தவற்றிற்காக அவர் காட்டும் அக்கறை, நேர மேலாண்மை குறித்த பல்வேறு நிகழ்வுகளை சுவைபடப் பேசி, சிந்தனைக்கு விருந்து படைத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை வணிகவியல் ஆசிரியர் எஸ்.பிரியா நன்றியுரை வழங்க நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
நிகழ்வில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், அலுவ லகப் பணியாளர்கள் உள்ளிட்ட பணித் தோழர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.