சுதேசமித்திரரனின் மதுவிலக்குப் பிரச்சாரம்

1 Min Read

சென்ற 22.7.1925-ல் வெளியான சுதேசமித்திரன் மதுவிலக்கு விஷயமாகச் “சென்னை பிஷப்பின் யோசனை” என்று மகுடமிட்டு எழுதிய குறிப்பைக் காண எமக்குப் பெரும் நகைப்பு உண்டாயிற்று. கட்டாயப்படுத்திக் கள்குடியைத் தடுக்க முடியாதெனப் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ சகோதரர்களை முக்திக்குச் செலுத்தும் உபதேசியாகிய மேல்படி பிஷப் கூறியது சுதேசமித்திரனுக்கு அடக்கமுடியாத ஆத்திரத்தையும் கோபத்தையும் மூட்டிவிட்டது. சுதேசமித்திரனின் இக்கோபக்குறிப்பு எமக்கு வெறுஞ்சிரிப்பையே விளைவித்தது. ‘கண்ணாடி வீட்டில் வசிப்பவன் பிறர் வீட்டின் மேல் கல் எறிதல் கூடாது’ என்ற சிறிய அறிவும் சுதேசமித்திரனுக்கு இல்லாமற் போனது எமக்குப் பெருத்த ஆச்சரியம்.

அதே சுதேசமித்திரனின் இதழில் முதல் பக்கத்தில் கண்ணைப் பறிக்கும் பெரிய எழுத்துகளில் ‘புட்டி’ படத்துடன் ‘எக்ஸ்ஷாஷ்’ பிராண்டியைப் பற்றிப் புகழ் மிகுந்த விளம்பரஞ் செய்து பொருள் சம்பாதித்துவரும் சுதேசமித்திரன் மெய்மறந்து பாவம் எழுதிவிட்டான் என்றே நினைக்கிறோம். இத்தகைய விளம்பரங்களின் வாயிலாகத்தான் நமது சுதேசமித்திரன் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்து வருகின்றான் போலும்! சுதேசமித்திரன் அகராதியில் மதுவிலக்கு என்பதற்கு மது அருந்த விளம்பரம் செய்தல் என்பதுதான் அர்த்தம் போலும்! பணத்திற்குமுன் அறிவு, தேசாபிமானம், சுயஉணர்வு எல்லாம் பறந்துவிடுவது சகஜமே. பணமென்றால் பிணமும் வாய் திறக்குமல்லவா? சொல்வதொன்று செய்வதொன்று என்பது தான் எமது கொள்கை என்று சுதேசமித்திரன் பெரிய விளம்பரஞ் செய்து விடுவானாகில் எமக்குக் கவலையே இல்லை. “கட்டாயத்தினால் குடியை வெருட்டினா லொழிய கல்வி அறிவைக் கொண்டு அது ஓடுமென்று நினைக்க உலகில் அனுபோகம் இடங்கொடுக்கவில்லை” என்று வெகு சமத்காரமாகச் சுதேசமித்திரன் செய்த முடிவை நாமும் ஆமோதிக்கிறோம்.
சுதேசமித்திரனின் சொந்த அனுபோகமே இடங் கொடுக்காமல் இருக்கிறதை நேரில் அறிந்திருந்தும் உலகின் மீது குற்றத்தைச் சுமத்துவா னேன் என்று நாம் கேட்கிறோம்? சுதேசமித்திரனின் கல்வி யறிவைக் கண்டு ஓடாத கட்குடி, பாமர ஜனங்களின் கல்வியறிவைக் கண்டு ஓடுமென சென்னை பிஷப் கூறியது மிகவும் அறியாத்தனம் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

– குடிஅரசு – தலையங்கம் – 26.07.1925

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *