சுயமரியாதைக்கு வேண்டியதைச் செய்வதே முதற்கடமை
மதுரையில் சில பகுதிகள், திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக் கர்வமும் ஜாதிக் கொடுமையும் தலைசிறந்து விளங்குவது யாவரும் அறிந்ததொன்றாகும்.
உதாரணமாகப் பார்ப்பனர்களின் கொடுமையோ சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அதற்கடுத்ததான தெற்கத்திய சைவ வேளாள சமூகத்தாரின் கொடுமையோ பார்ப்பனரல்லாதார் சமூகமே வெட்கப்படத்தக்கதாகும்.
இவ்விரு சமூகக் கொடுமைகளுக்கும் மத்தியில் அங்குள்ள மற்ற வகுப்பார்கள் படும் கஷ்டம் நினைக்க முடியாததென்றே சொல்லுவோம்.
ஜாதி தாண்டவம்
சாதாரணமாக சென்னை மாகாணத்தில் வேறு எங்குமே இல்லாத கொடுமைகள் பல மேல்கண்ட ஜில்லாக்களில் தாண்டவமாடிக் கொண்டு வருகின்றன.
திருச்செந்தூரில் இருக்கின்ற ஒரு சைவக் கோவிலில் வைசியர்கள் என்கின்ற வாணியச் செட்டியார் சகோதரர்களுக்கு உள்ளே செல்ல உரிமை இல்லை. அதுபோலவே மதுரை, ராமேஸ்வரம் முதலிய அனேக கோவில்களில் சத்திரியர்கள் என்கின்ற நாடார் சகோதரர்கள் பிரவேசிக்க உரிமை இல்லை. ஆனால் பக்கத்து ஊர்களாகிய பழனி முதலிய இடங்களில் கோவிலுக்குள் செல்ல அவர்களுக்கு உரிமை உண்டு.
இது மாத்திரமல்ல, இவ்ஜில்லாக்களில் உள்ள அனேக தெருக்களில் நடக்கக்கூட சில ஜனங்களுக்கு உரிமை தடுக்கப்பட்டிருக்கின்றது.
ஏதோ இரண்டொரு பார்ப்பனரோ சைவ வேளாளரோ சில நாடார் சகோதரர்களிடமும் வாணிபச் சகோதரர்களிடமும் மற்றும் சிலருடனும் அளவளாவுவதாலோ, குடித்தல், உண்ணல் வைத்துக் கொண்டிருப்பதாலோ இக்கொடுமைகள் மறைந்து போனதாகச் சொலிவிட முடியாதென்றே சொல்லுவோம். வாணிபச் சகோதரர்களுக்கும் நாடார் சகோதரர்களுக்கும் இக்கோவில் பிரவேசமும் தெருப் பிரவேசமும் கிடைத்துவிட்டதினால் அவர்களுக்கு ஏதாவது பெரிய ஆதாயம் கிடைக்கும் என்பதாகக் கருதியோ அல்லது அவர்கள் இதை லட்சியம் செய்கின்றார்கள் என்றோ நாம் இதை இங்கு குறிப்பிடவில்லை.
எவ்வளவு கொடுமை
மற்றபடி ஒரு பொது ஸ்தலமானது அந்நாட்டு மக்களுக்கே அதுவும் அறிவு, ஆற்றல், ஒழுக்கம், செல்வம், செல்வாக்கு, பரோபகாரம் முதலிய உயர் குணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற சகோதரர்களை மனித உரிமைக்கு அருகதை அற்றவர்கள் என்று சொல்வது எவ்வளவு கொடுமையானதாகவும், சகிக்க முடியாத இழிவை உண்டாக்குவதாகவும் இருக்கின்றதென்பதைக் காட்டவே இதைக் குறிப்பிடுகின்றோம்.
அன்றியும், இக்கொடுமைகள் கடவுளின் பேரால், மதத்தின் பேரால், தர்ம சாஸ்திரத்தின் பேரால் செய்யப்பட்டு வருவதுடன் அரசாங்க ஆட்சியின் பேராலும் சட்டங்களின் பேராலும் கோர்ட்டு தீர்ப்புகளின் பேராலும் நிலைநிறுத்தப்படுவதுமானால் இனி வேறு எந்த வழியில் இதிலிருந்து விலக முடியும் என்பதுதான் நமது கேள்வி.
ஒழிக்க வேண்டும்
இச்சமூக மக்களில் ஏதோ சில பேர் அறியாமையாலோ, அயோக்கியத்தனத்தாலோ அல்லது தங்களுக்குள் உள்ள உள்மாச்சரியத்தாலோ சுயமரியாதையில் கவலையற்று உதைத்த காலுக்கு முத்தமிடுவது போல் இக்கொடுமைக்கும் இழிவுக்கும் அடிப்படையான கடவுளையும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கட்டிக் கொண்டு அழுவதுடன் அதைக் கற்பித்த பார்ப்பனர்களின் வாலைப் பிடித்து திரிவதுடன் இதைத் திருத்த முயலாத அரசியல் இயக்கத்துடனும் அரசாங்க முறையுடனும் ஒத்துழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆயினும் இனியாவது இவற்றை ஒழிக்க முற்பட வேண்டியதவசியமாகும்.
கொடுமைப்படுத்தப்பட்ட இச்சமூகத்தாருக்கு இதில் போதிய கவலை இன்னும் ஏற்படவில்லையே என்று யாராவது சொல்வதானாலும் அதை ஒருரு சாக்காக வைத்துக் கொள்ளாம்ல் பொது நலத்தை உத்தேசித்து, நாட்டின் பொது சுயமரியாதையில் கவலையுள்ள மற்றவர்களாவது நாட்டின் சேமத்தையும் மனித சமூகத்தின் பிறப்புரிமையையும் உத்தேசித்து வேண்டுவன செய்ய வேண்டியதே முதற்கடமை என்போம்.
– குடிஅரசு, தொகுதி 7, தலையங்கம் – 16.9.1928
தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி