பெங்களூரு, டிச.7 வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கருநாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 20 நாட்களில் அவர் மீது போடப்பட்ட 2-ஆவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கருநாடகாவில் உள்ள ஷிமோகாவில் 5.12.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக மூத்த தலைவரும் மேனாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசு கையில், வங்கதேசத்தில் இந்துக் களின் மீது கை வைத்தால் இங்குள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என எச்சரித்து பேசினார். இந்த கூட்டத்தின் காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முஸ்லிம் அமைப்பினரும் காங்கிரஸாரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஷிமோகாவில் உள்ள கோட்டே காவல்துறை யினர் தாமாக முன்வந்து ஈஸ் வரப்பா மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியது, இரு தரப்பினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரான ஈஸ்வரப்பா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி, வழக்கில் சிக்கிக்கொள்வார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளையும், மக்களையும் தாக்கி பேசியதால் அவர் மீது கருநாடக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
